“என்னை மாற்றிக்கொள்ள முழுமையாக முயற்சி செய்கிறேன்!” – விஜயகாந்த்

“மக்கள் நலக் கூட்டணியுடன் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால், என்னை மாற்றிக்கொள்ள முழுமையாக முயற்சி செய்கிறேன்” என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.

தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்தானதும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் ஆகியோர் முன்னிலையில், தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

எப்போதும் எங்கள் கட்சி கூட்டத்திலேயே நான் பேசியதால், மேடைகளில் இதுவரை யாருடைய பெயரையும் சொன்னதில்லை. இப்போது கூட்டணி முடிவாகிவிட்டதால் முதன்முறையாக எல்லோரின் பெயரையும் சொல்லுகிறேன். மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோவுக்கும், பீமனாக இருக்கும் தொல்.திருமாவளவனுக்கும், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசனுக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலக் கூட்டணியுடன் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதால், என்னை மாற்றிக்கொள்ள முழுமையாக முயற்சி செய்கிறேன். யாருடைய பெயராவது விட்டுப் போயிருந்தால் தயவு செய்து வருத்தப்படாதீர்கள். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நல கூட்டணியில் இருக்கும் 4 தலைவர்களும் வந்தார்கள். நீங்க கிங்கா இருங்க, நாங்க கிங்மேக்கரா இருக்கிறோம் என்றார்கள். உடனே கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்டேன்.

அண்ணன் வைகோ, கூட்டணி ஆட்சி என்று அறிவிக்கலாமா? என்று கேட்டார். நான் தாராளமாக அறிவித்துவிடுங்கள் என்று தெரிவித்துவிட்டேன்.

நான் பணத்தாசை கொண்டவன் என்றும், பேரத்துக்கு பணிந்துவிட்டேன் என்றும், அந்தப் பக்கம் விலைபோய் விட்டேன், இந்தப் பக்கம் சாய்ந்துவிட்டேன் என்றெல்லாம் சொன்னார்கள். நான் யார் பக்கமும் விலை போகவில்லை. நான் அன்றே சொன்னபடி, மக்களுடன் தான் கூட்டணி வைத்திருக்கிறேன். தெய்வத்தோடும், மக்களோடும் தான் கூட்டணி என்று கூறியதைப் போல, இன்று மக்கள் நலக் கூட்டணியுடன் தான் கூட்டணி சேர்ந்திருக்கிறேன். தெய்வம்தான் என்னை இவர்களோடு  கூட்டணி சேர வைத்திருக்கிறது.

மக்கள் நலக் கூட்டணிக்கு தெய்வம் பிடிக்குமா, பிடிக்காதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு தெய்வம் பிடிக்கும்.

நான்கு பேரும் நான்கு விதமான கொள்கை உடையவர்கள் என்று நினைக்காதீர்கள். நாங்கள் அனைவரும் ஒரே கொள்கையை கொண்டவர்கள்.

எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள். எங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அண்ணன் வைகோ இருப்பார்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.