நடிகர் சங்க பொதுக்குழுவில் நிஜ ஸ்டண்ட் காட்சிகள்: அடிதடி, மோதல், கார் கண்ணாடி உடைப்பு!

கோடீஸ்வர நடிகர்களின் ஆதிக்கத்தில் இருந்த – இருக்கிற “தென்னிந்திய”  நடிகர் சங்கம், ஊழல் குற்றச்சாட்டுகளாலும், பழி தீர்க்கும் தொடை தட்டல்களாலும் கடந்த சில ஆண்டுகளாகவே அழுகி நாறிப்போய் கிடக்கிறது. விஷால் அணி, சரத்குமார் அணி என 2 அணிகளாக பிரிந்து கிடக்கும் இச்சங்கத்தின் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் அடிதடி, மோதல், கார் கண்ணாடி உடைப்பு, கைது என  நிஜ ஸ்டண்ட் காட்சிகள் அரங்கேறியுள்ளன.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் முதலில் லயோலா கல்லூரியில் நடப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் லயோலா கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் சென்னை தி நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்திலேயே இன்று மதியம் 2 மணிக்கு துவங்கியது.

0a1a

இந்த கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பொதுக் குழு கூட்ட அரங்கிலும், அதற்கு வெளியேயும் ‘திடீர்’ தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

உறுப்பினர் அடையாள அட்டை இல்லாத யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என விஷால் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன் காரணமாக உறுப்பினர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அடையாள அட்டை இல்லாத சில சங்க உறுப்பினர்களுக்கும், அவர்களைத் தடுத்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

மோதல் அதிகரித்ததால் பாதுகாப்பிற்காக நடிகர் சங்கத்தின் நுழைவாயிலை அங்கிருந்த போலீசார் இழுத்து மூடினர். மேலும் அடையாள அட்டை இல்லாமல் கூட்டத்திற்கு வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றார்கள்.

இந்த அமளியில் சங்க வளாகத்திற்கு வெளியே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த – விஷால் அணியைச் சேர்ந்த – நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. கார் கண்ணாடியை உடைத்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நடிகர்களுடன் கருணாஸின் அடியாட்களும், விஷாலின் ஆதரவாளர்களும் அடிதடியில் இறங்கினர். இதனால் நடிகர் சங்க வளாகம் உள்ள சாலை போர்க்களம் போல் காட்சியளித்தது.

0a1c

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், போலீசார் தலையிட்டு, 20க்கும் மேற்பட்ட வன்முறையாளர்களை கைது செய்து, வேனில் ஏற்றி, அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.