‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘மூடுபனி’ பாணியிலான படம் ‘உரு’: ஜூன் 16ஆம் தேதி ரிலீஸ்!

‘வையம் மீடியா’ நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்திருக்கும் படம் ‘உரு’. கலையரசன், தன்ஷிகா, மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்கி ஆனந்த் இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் கல்யாணிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

ஜூன் 16ஆம் தேதி ‘உரு’ திரைக்கு வருவதையொட்டி, இதனை விளம்பரப்படுத்துவதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

0a

நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் இயக்குனர் விக்கி ஆனந்த், ‘‘உருவம் என்பதன் சுருக்கம் தான் உரு. அதற்கு பயம் என்ற அர்த்தமும் இருக்கிறது. அதனால்தான் உரு’ என்று தலைப்பு வைத்தோம். இது சைக்காலஜிகல் த்ரில்லர் படம். உரு தெரியாத ஒரு மனிதன் பற்றிய படம் இது. ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘மூடுபனி’ மாதிரியான படங்கள் வந்து ரொம்ப நாளாகிவிட்டது. அதை மனதில் வைத்து இந்த படம் பண்ணியிருக்கிறோம்.

இந்த படத்தை முழுக்க கொடைக்கானல் பின்னணியில் எடுத்திருக்கிறோம். கொடைக்கானலில் கடும் குளிர் நேரத்தில் 40 நாட்கள் இரவில் இப்படத்தின் காட்சிகளை படமாக்கியுள்ளோம். அது சவாலான விஷயமாக இருந்தது.

கலையரசன், தன்ஷிகா, ‘மைம்’ கோபி என இப்படத்தில் நடித்தவர்கள், பணியாற்றியவர்கள் எல்லோரும் ரொம்பவும் கஷ்டப்பட்டோம். எங்களுடைய கஷ்டம் எல்லாம் மறந்துபோகும் அளவுக்கு ‘உரு’ நல்ல படமாக வந்துள்ளது. ரசிகர்களை நிச்சயம் கவரும் படமாக இது இருக்கும்’’ என்றார் இயக்குனர் விக்கி ஆனந்த்.

உரு படத்திற்கு ஜோஹன் இசை அமைத்துள்ளார். இவர் மெட்ரோ’ படத்திற்கு இசை அமைத்தவர்.

‘பிச்சைக்காரன்’ பட ஒளிப்பதிவாளர் பிரசன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கலை இயக்கத்தை ஆண்டனி கவனித்துள்ளார்.