“எனக்கு ‘இளம் சூப்பர் ஸ்டார்’ பட்டமா?”: பதறி மறுத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிவகார்த்திகேயன் சிறந்த விருந்தினராக கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்.

இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தன்னுடைய பேச்சில் சிவகார்த்திகேயனை ‘இளம் சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்டார். இயக்குநர் பேரரசு பேசும்போது சிவகார்த்திகேயனை ‘மக்கள் ஸ்டார்’ என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் “நிறைய படங்களில் தவற விட்டது ‘வேலைக்காரன்’ படத்தில் நடந்து விட்டது. தம்பி ராமையா சாருடன் நடித்துவிட்டேன். அவர் விடாமுயற்சி எல்லோருக்கும் ஒரு சிறந்த உதாரணம். அவர் வயதை என்றைக்குமே வெளியே காட்டிக் கொள்ளாமல், தன்னை மட்டுமே நம்பிப் போராடி ஜெயித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அன்புக்காக மட்டுமே இங்கு வந்துள்ளேன்.

இந்த மேடையில் முக்கியமான ஒரு விஷயத்தைப் பேசி எனக்கொரு அதிர்ச்சியைக் கொடுத்தவர் பி.டி.செல்வகுமார் . அவர் என்ன சொன்னார் என்பதை என் வாயால் சொல்லவே மாட்டேன். அதெல்லாம் எனக்கு வேண்டாம். பேரரசு சார் பேசும்போது நான் சினிமாவைப் புரிந்து கொண்டதாகச் சொன்னார். ஆனால், நான் வாழ்க்கையைப் புரிந்து கொண்டேன். எங்கியிருந்து வந்திருக்கிறேன் என்பது தெரியும். அதெல்லாம் புரிந்துள்ளதால், யார் என்ன பேசினாலும் காதில் எடுத்துக்கொள்ள மாட்டோம்.

நாம் என்ன வேலை செய்கிறோமோ அது அனைவரிடமும் போய் சேர்ந்தால் போதுமானது. ஆகையால் இந்த தலைப்பு எல்லாம் வேண்டாம். நீங்கள் இந்தத் தலைப்பு கொடுத்தீர்கள் என்பது, அதற்குள் செய்தி தலைப்பாக வந்துவிட்டது. எனக்கென்று ஒரு வழி எடுத்து, அதில் போய் கொண்டே இருக்கிறேன். என்னுடைய படம் அனைவருக்கும் பிடித்திருந்தால் சந்தோஷம். அதில் விமர்சனம் வரும்போது, திருத்திக்கொண்டு வேறு மாதிரி செய்யப் பார்ப்போம். கண்டிப்பாக, திரையுலகம் என்பது ஒரு கடினமான துறை தான். சினிமாவில் ஜாக்கிரதையாக இருப்பா என்று சொன்னார்கள். முதல் 2 வருடங்கள் எனக்கு தெரியவில்லை. ஆனால், கடைசி 2 வருடங்களில் தெரிந்துவிட்டது. போட்டி நிறைந்த துறையில் அப்படித் தான் இருக்கும். அதெல்லாம் நினைத்தோம் என்றால் ஏறி போக முடியாது.

கே.எஸ்.ரவிகுமார் சாரிடம் பேசும்போது, ‘முத்து’ படத்தை 45 நாட்களில் முடித்தோம் என்றார். எனக்கும் 45 நாட்களில் ஒரு படத்தை முடிக்க ஆசையாகத் தான் இருக்கிறது. ஆனால், 100 நாட்களாகி விடுகிறது. தற்போது படங்கள் 25 நாட்கள் ஓடினால் வெற்றி என்பதால், படப்பிடிப்பை 100 நாட்களாக்கி விட்டோம். இனிமேல் வரும் இயக்குநர்களுக்கு குறைந்த நாட்களில் படப்பிடிப்பு செய்வது எப்படி என்பதை கே.எஸ்.ரவிகுமார் வகுப்பு எடுக்க வேண்டும்.

நிறைய பேர் பாராட்டி பேசினார்கள். அவர்களுடைய பாராட்டைக் கேட்கும்போது, இன்னும் பத்தாதுடா ஓடு என்பது மட்டும் தோன்றிக் கொண்டே இருக்கிறது” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.