வருமான வரித்துறை அதிகாரியிடம் ஜி.வி.பிரகாஷை போட்டுக் கொடுத்த நடிகர் சூரி!

பசங்க புரொடக்சன்ஸ் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார், அர்த்தனா நடிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் ‘செம’.

நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. காமெடி நடிகர் சதீஷ் மற்றும் சூரி விழாவின் ஒரு பகுதியை தொகுத்து வழங்கினர். விழாவில் திரையிடப்பட்ட படத்தின் ட்ரெய்லரும், இரண்டு பாடல்களும் விழாவில் திரையிடப்பட்டது.

நடிகர் சூரி இவ்விழாவில் பேசுகையில், “வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், என் வீட்டுக்கு வருமான வரி சோதனைக்கு வருவதாக சொன்னார். ‘ஏன்?’ என கேட்டதற்கு, நிறைய படங்கள் நடிக்கிறீங்க என சொன்னார். என்னைவிட ஜி.வி.பிரகாஷ் தான் அதிக படங்களில் நடிக்கிறார், அவரை விட்டுட்டீங்களே…’ என்றேன். நிறைய படங்கள் நடித்தாலும் நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார் ஜிவி பிரகாஷ்” என்றார்.

நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், “இப்படத்தின் இயக்குனர் வள்ளிகாந்த் ஒரு காட்சிக்கு 40 டேக் வரை பொறுமையாக எடுப்பார். டப்பிங்கிலும் சரி, ஷூட்டிங்கிலும் சரி அவரை திருப்திப்படுத்தவே முடியாது. பாண்டிராஜ் பட்டறையில் இருந்து நிறைய இயக்குனர்கள் உருவாகியிருக்கிறார்கள். அப்படி இந்த வள்ளிகாந்தும் நல்ல இயக்குனராக வருவார். காட்டுக்குள் ஆஸ்ரமம் கட்ட ஆரம்பித்த பிறகு, யானைகள் ஊருக்குள் வந்து விட்டன. சிங்கம், புலி, எல்லாம் ஊருக்குள் வரும். அதை வீட்டுக்கு ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என சட்டம் போட்டாலும் போடுவார்கள்” என்றார்.

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் பேசுகையில், “ஜி.வி என்றால் கேர்ள்ஸ் வியூ. பெண்களின் பார்வை ஜிவி பிரகாஷ் மீது பிரகாசமாக வீசுகிறது. சம்சாரிக்கும், சன்யாசிக்கும் வித்தியாசம்  என்னவென்றால் சன்யாசி புலித்தோல் மீது தூங்குவான். சம்சாரி புலியுடனே தூங்குபவன். அப்படி புலியுடன் தூங்குபவர் தான் ஜி.வி.பிரகாஷ். ஜி.வி. பற்றி நாயகி பேசும்போது அவரது மனைவியின் பார்வை அப்படி தான் இருந்தது. கமெர்சியல் படம் எடுப்பதே கஷ்டம். அதிலும் முதல் படமே கமெர்சியல் படமாக கொடுப்பது ரொம்ப பெரிய விஷயம். அவர்களின் உழைப்புக்கு  நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்றார் நடிகர் பார்த்திபன்.

தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், “வாரத்துக்கு 3 படங்கள் ரிலீஸ் செய்தால் 150 படங்கள் தான் ரிலீஸ் செய்ய முடியும். ஆனால் இங்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் ஆண்டு தோறும் தயாராகின்றன. படங்கள் உருவாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது வாரத்துக்கு 3 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்தாக வேண்டும். கேபிள் டிவி ஒளிபரப்பையும், படங்களின் ரிலீஸ் தேதிகளை ஒழுங்குபடுத்தும் வேலைகளை தயாரிப்பாளர் சங்கம் செய்து வருகிறது  என்றார்.

s10

இயக்குனர் பாண்டிராஜ் பேசுகையில், “வள்ளிகாந்த் எந்த ஒரு விஷயத்தையும் முகத்துக்கு நேரே சொல்லுபவன். அது தான் அவனை என் உதவியாளராக நான் சேர்த்துக்கொள்ள முக்கிய காரணம். என்னிடம் நிறைய திட்டு வாங்கிய உதவி இயக்குனரும் அவன் தான். அவனுக்கு என்ன செய்வது என யோசித்து தான் இந்த படத்தை தயாரித்தேன். ஒரு படம் எடுப்பதே ரொம்ப கஷ்டமான விஷயம். ஒரே நேரத்தில் ஜி.வி. 12 படங்கள் நடிப்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஜிவியுடன் கூடிய விரைவில் ஒரு படத்தில் இணைவேன்” என்றார்.

படத்தின் நாயகி அர்த்தனா பினு, மைம் கோபி, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரன்,  ராஜசேகர் பாண்டியன், இயக்குனர்கள் வசந்தபாலன், பொன்ராம், பிரஷாந்த் பாண்டிராஜ், ராமு செல்லப்பா, கார்த்திக் ராஜு, ஜெகன்நாத், ராமகிருஷ்ணன், வள்ளிகாந்த் ஆகியோரும் பேசினார்கள்.

 

Read previous post:
s12
Sema Movie Audio Launch Photo Gallery

Sema Movie Audio Launch Photos

Close