“எனக்காக 2 வருடம் காத்திருந்தார் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ இயக்குனர்!” – விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மேற்கு தொடர்ச்சிமலை’. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ’ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் கதாசிரியர்களில் ஒருவராக பணிபுரிந்த லெனின் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார். இதுவரை சர்வதேச விருது உட்பட 7 விருதுகள் வென்றுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

’மேற்கு தொடர்ச்சி மலை’ படத்துக்கான செய்தியாளர்கள் சந்திப்பில், இப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி பேசுகையில், “படத்தின் முழுக் கதை என்ன என்று தெரியாமலே என் மேல் உள்ள நம்பிக்கையில் விஜய் சேதுபதி இப்படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டார். அவருக்கு படத்தை பற்றி முதல் இருபது நிமிடம் மட்டுமே தெரியும்.

“படத்தின் கதை மேற்கு தொடர்ச்சி மலையைச் சுற்றி நடைபெறும். இந்த படத்தில் கதாநாயகனாக அந்தோணி நடித்துள்ளார். இவர் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். அதேபோல் கதாநாயகியாக ‘ஜோக்கர்’ படத்தில் நடித்த காயத்ரி கிருஷ்ணா நடித்துள்ளார்.

“மலையும் மலை சார்ந்த பகுதியிலும் வாழும் மக்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்வதற்காக அந்த பகுதி மக்களுடன் தினக்கூலியாக கதாநாயகன் மலை ஏறி வேலைக்குச் சென்றுவந்தார். அதேபோல் கதாநாயகியும் தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவராக வருவதால் அவரும் ஒரு மாதம் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றார். படத்தில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்களில் அந்த கிராமத்து மக்களே நடித்துள்ளார்கள்.

“இளையராஜாவும் என் தந்தையும் ஒரே ஊர் நண்பர்கள். இந்த படத்தின் கதை எழுதும்போதே இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அவரும் கதையைக் கேட்டுவிட்டு இசை அமைக்க சம்மதித்தார்” என்றார் இயக்குனர் லெனின் பாரதி.

m4

இப்படத்தின் தயாரிப்பாளரான விஜய் சேதுபதி பேசும்போது “வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் எனக்கு அறிமுகமானவர் அந்தோணி. அந்த படத்தில் நானும் துணை நடிகராக நடித்திருந்தேன்.

“இயக்குனர் என்னிடம் வந்து இப்படத்தின் கதையைச் சொன்னபோது, என்னிடம் இப்போது பணம் இல்லை, எனக்காக கொஞ்சம் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதேபோல் அவர் எனக்காக இரண்டு வருடம் என் மேல் நம்பிக்கை வைத்து காத்திருந்தார்.

“சர்வதேச விருது உட்பட7 விருதுகளை பெற்றுள்ள இப்படத்தை தயாரித்ததிலும், இசைஞானியுடன் நான் பயணித்ததிலும் பெரும் பங்கு இயக்குனரையே சேரும்” என்றார் விஜய் சேதுபதி.