‘வர்மா’ படத்தில் இருந்து பாலாவும் அவர் எடுத்த மொத்த காட்சிகளும் நீக்கம்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால், தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இதனை ரீமேக் செய்து வருகின்றனர்.

தமிழில், ‘வர்மா’ என்ற பெயரில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இதன்மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா என்ற மாடல் ஹீரோயினாக நடித்துள்ளார். இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்துக் கொடுத்துள்ளது.

வருகிற (பிப்ரவரி) 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ‘வர்மா’ படம் திரைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், இந்த படம் திருப்தி அளிக்காததால் வேறொரு இயக்குனரை வைத்து மறுபடியும் இப்படத்தை எடுக்க இருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

‘எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ‘வர்மா’ படம் எங்களுக்குப் போதுமான மகிழ்ச்சியை அளிக்கவில்லை. எனவே, நாங்கள் இந்தப் பதிப்பை வெளியிட விரும்பவில்லை. இதற்குப் பதிலாக ‘அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக்கை நாங்கள் புதிதாகத் தொடங்க இருக்கிறோம். ஒரிஜினல் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் உயிரோட்டம் மாறாமல், துருவ்வை மீண்டும் கதாநாயகனாக வைத்து படத்தை மீண்டும் எடுக்க இருக்கிறோம்.

படத்தின் இயக்குநர், நடிக்க இருக்கும் பிற கதாபாத்திரங்கள் குறித்து புதிதாக விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் படத்துக்காக நாங்கள் நிறைய பணத்தைச் செலவழித்தோம். இருப்பினும், இப்படத்தைத் தமிழில் காண வேண்டும் என்ற எங்கள் முடிவில் மாற்றமில்லை. நாங்கள் ஓய்வின்றி உழைத்து இப்படத்தை ஜூன் மாதம் வெளியிடுவோம்.

எங்கள் பயணத்துக்கு உங்கள் ஆதரவையும் வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0a1b