”தேர்தல் முடிந்த பிறகு எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து பிரதமரை முடிவு செய்வோம்!” – சந்திரபாபு நாயுடு

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அதில் பிரதமர் பதவிக்கான போட்டியில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோர் இருப்பதாக தெரிவித்தார். மாநிலத்தை ஆட்சி செய்தவர்கள் என்பதால் அவர்கள் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் என்றும் சரத்பவார் விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் பிரதமராக தான் விரும்பவில்லை என்றும், தேர்தல் முடிந்த பிறகு எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து பிரதமரை முடிவு செய்வோம் என்றும் ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

”பிரதமர் பதவிக்கான எதிர்பார்ப்பில் நான் இருக்கவில்லை. அதற்கான போட்டியிலும் நான் இல்லை. பிரதமர் பதவியில் இருந்து நரேந்திரமோடியை இறக்குவது ஜனநாயக கட்டாயமாகும்.

பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பிரதமர் பதவிக்கு தகுதியான வேட்பாளரை தேர்வு செய்வோம். தேர்தல் முடிந்த பிறகு எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒருமித்த முடிவில் பிரதமரை முடிவு செய்வோம். முன்னதாக 21-ந்தேதி இது குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.