துணிவு – விமர்சனம்

நடிப்பு: அஜித்குமார், மஞ்சுவாரியர், சமுத்திரகனி, மோகனசுந்தரம், மகாநதி சங்கர், ஜான் கொக்கேன், ‘பக்ஸ்’ பகவதி மற்றும் பலர்

இயக்கம்: ஹெச்.வினோத்

ஒளிப்பதிவு: நீரவ் ஷா

படத்தொகுப்பு: விஜய் வேலுக்குட்டி

இசை: ஜிப்ரான்

தயாரிப்பு: ஜீ ஸ்டூடியோஸ் & ‘பேவியூ’ போனி கபூர்

தமிழ்நாடு வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)

சாமானிய மக்களை ஏமாற்றி, சுரண்டி, கோடிகளில் கொழிக்கும் லாபவெறி பிடித்த வங்கிகளின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்த, துணிந்து துப்பாக்கியும் கையுமாக களத்தில் குதிக்கும் ஒரு துணிச்சல்கார நாயகன் கதை தான் ‘துணிவு’.

0a1c

சென்னையின் பிரதான பகுதியான பாரிமுனையில் உள்ள ‘யுவர் பேங்க்’ என்ற வங்கியில், 500 கோடி ரூபாய் பணம் ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதை அறிந்த ஒரு கும்பல் இந்த 500 கோடியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறது. இந்த கும்பலின் தலைவனே போலீஸ் துணை கமிஷனர் தான் என்பதால், தைரியமாக வங்கிக்குள் நுழையும் அந்த கும்பல், துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களையும், அங்கிருக்கும் வாடிக்கையாளர்களையும் பணயக் கைதிகளாக்குகிறது.

வாடிக்கையாளர் போல அங்கு வந்திருக்கும் அஜித்குமார் கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு, மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். “ நான் தான் இந்த கொள்ளையை நடத்தப் போகிறேன்” என்கிறார்.

போலீஸ் வருகிறது. கமாண்டோ படையும் குவிக்கப்படுகிறது. மாநகர போலீஸ் கமிஷனரான சமுத்திரகனி வங்கிக்கு வெளியே நின்றுகொண்டு, வங்கிக்குள் இருக்கும் அஜித்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அஜித்குமார் தன் நிபந்தனைகளை ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருக்கிறார். பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே அவரை பிடிக்க முயலுகிறது போலீஸ்.

அதே சமயத்தில், வங்கிக்குள் சட்ட விரோதமாக பதுக்கப்பட்டிருக்கும் பணம் 500 கோடி அல்ல, 25ஆயிரம் கோடி என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வருகிறது. இந்த தகவல் வெளியே லீக்காகிவிட கூடாது என்பதற்காக, அதை மறைக்க வங்கி நிர்வாகம் படாதபாடு படுகிறது.

அஜித்குமார் ஏன் வங்கியில் கொள்ளையடிக்கத் துணிந்தார்? அவர் போலீசில் சிக்கினாரா? இந்த கொள்ளை டிராமா முடிவுக்கு வந்தது எப்படி?” என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘துணிவு’ படத்தின் மீதிக்கதை.

அஜித்குமார் வெள்ளை நிற சட்டை, நரைத்த அளவான தலைமுடி, நேர்த்தியாக வளர்ந்த தாடி, கட்டுமஸ்தான உடல் என வயதுக்கேற்ற தோற்றத்தில், ஸ்டைலான மேனரிசத்தில் ஈர்க்கிறார். ஜாலியும், சேட்டையும் கலந்த வில்லத்தனத்துடன் அசத்துகிறார்; அதேசமயம் ஆக்ரோஷம் காட்டும் இடங்களில் அனல் பறக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மைக்கேல் ஜாக்சன் பாணியிலான ஸ்டெப்ஸ் உட்பட அவரது சின்னச் சின்ன நடன அசைவுகளும் அதற்கேற்ற பின்னணி இசையும் பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகின்றன. ஒன்மேன் ஷோ என சொல்லும் அளவுக்கு படம் முழுக்க அவர் வியாபித்திருக்கிறார்.

கண்மணி என்ற கதாபாத்திரத்தில் வரும் மஞ்சு வாரியர் வழக்கமான ரொமான்ஸ் நாயகியாக இல்லாமல் வித்தியாசமான நடை, உடை, பாவனை மற்றும் அதிரடி ஆக்சன் மூலமாக கவனம் பெறுகிறார்.

போலீஸ் கமிஷனராக வரும் சமுத்திரகனியின் கதாபாத்திரம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கதாபாத்திரத்துக்குள் அவர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். “ரவி, இது தமிழ்நாடு, இங்கே உன் வேலையைக் காட்டாதே” என்று வடநாட்டு காவல்படை அதிகாரியை சமுத்திரகனி எச்சரிக்கும்போது, கைதட்டலில் திரையரங்கம் அதிருகிறது.

‘மைபா’வாக நடித்துள்ள மோகனசுந்தரம் தனது அசால்ட்டான உடல்மொழி, வசனங்கள் மூலம் அப்ளாஸ் அள்ளுகிறார். டிவி நிறுவனங்களின் உள்அரசியலை அவர் தோலுரித்துக் காட்டுவது பயங்கர காமெடியாகவும் இருக்கிறது; ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதாகவும் உள்ளது.

தர்ஷன், ஜி.எம்.சுந்தர், சமுத்திரகனி, ஜான்கொக்கேன், ‘பக்ஸ்’ பகவதி, அஜய், மகாநதி சங்கர் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இன்றைய கார்ப்பரேட் முதலாளிய யுகத்தில் இயங்கும் வங்கி மூலதனம் பல கோடி இந்தியர்களின் பணத்தை எப்படி சுரண்டி, மோசடி செய்து கொள்ளையடிக்கிறது என்பதை பாமரர்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் சுவாரஸ்யமான கதையாக, விறுவிறுப்பான திரைக்கதையாக எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் ஹெச்.வினோத் பாராட்டுக்குரியவர். சமூக பொறுப்புணர்வையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து படமாகத் தந்ததால் அவருக்கு மீண்டும் வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பும் படத்தின் தரத்தை உயர்த்த உறுதுணையாக இருக்கின்றன.

’துணிவு’ – அஜித்குமார் ரசிகர்கள் மட்டும் அல்ல, வங்கிக்கணக்கு வைத்திருக்கிற ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.