வீட்ல விசேஷம் – விமர்சனம்

நடிப்பு: ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் பலர்

இயக்கம்: ஆர்ஜே.பாலாஜி – என்.ஜே.சரவணன்

இசை: க்ரீஷ் கோபாலகிருஷ்ணன்

ஒளிப்பதிவு: கார்த்திக் முத்துக்குமாரன்

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்ற ‘பதாய் ஹோ’  என்ற இந்திப்படத்தின் தமிழ் மறுஆக்கம் (ரீமேக்) தான் ஆர்ஜே பாலாஜி – என்.ஜே.சரவணன் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘வீட்ல விசேஷம்’ .

பேரன் / பேத்தி எடுக்க வேண்டிய வயதிலிருக்கும் ஒரு நடுத்தர வயதுப்பெண் கர்ப்பம் தரித்தால், அதை அவரது வளர்ந்த மகன்களும் நம் சமூகமும் எப்படி எடுத்துக்கொள்ளும் என்பதை கதைக்கருவாகக் கொண்டு, நகைச்சுவையையும் எமோஷனையும் கலந்து கலகலப்பான வெற்றிப்படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம். அதன் தலைவர் உன்னிகிருஷ்ணன் (சத்யராஜ்) ரயில்வே டிடிஆர். அவரது மனைவி கிருஷ்ணவேணி (ஊர்வசி) ஹவுஸ் ஒய்ஃப். இவர்களுக்கு இரண்டு மகன்கள்.  மூத்த மகன் இளங்கோ (ஆர்ஜே பாலாஜி), ஆசிரியராக இருக்கிறார். இளைய மகன் அனிருத் (விஸ்வேஷ்), உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறார். இவர்களுடன் உன்னிகிருஷ்ணனின் வயோதிகத் தாய் அம்முலுவும் (கேபிஏசி லலிதா) வசித்து வருகிறார்.

அன்பான ஜோடியாகத் திகழும் உன்னிகிருஷ்ணனும், கிருஷ்ணவேணியும் ஓரிரவு நெருக்கமாக இருந்ததைத் தொடர்ந்து கிருஷ்ணவேணி கர்ப்பம் தரிக்கிறார்.

50 வயதைக் கடந்த தனது பெற்றோர் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கிறார்கள் என்பதை அறிந்து மூத்த மகனான பள்ளி ஆசிரியர் இளங்கோ அதிர்ச்சி அடைகிறார். தன் தாய் இந்த வயதில் கர்ப்பம் தரித்திருப்பதை ஜீரணிக்க இயலாமல் தவிக்கிறார். மேலும், அது அவரது காதலி சௌமியா (அபர்ணா பாலமுரளி)  உடனான உறவையும் பாதிக்கிறது. எனினும், இளங்கோ தனது தம்பி மற்றும் பாட்டியுடன் சேர்ந்து ஒரு புதிய குடும்ப உறுப்பினரை வரவேற்க எப்படி  தயார்படுத்திக் கொள்கிறார் என்பதே மீதிக்கதை.

’வீட்ல விசேஷம்’ பற்றி பாராட்டத்தக்க முக்கியமான இரண்டு விஷயங்கள் என்னவென்றால், இதன் இயக்குனர்களான ஆர்ஜே பாலாஜியும், என்.ஜே.சரவணனும் இந்திப்படத்தை காட்சிக்குக் காட்சி அப்படியே மறு உருவாக்கம் செய்யாமல், தமிழ் ரசிகர்களின் உணர்வுகளுக்கும் ரசனைக்கும் ஏற்ப காட்சிகளை சுவாரஸ்யமாக மாற்றி அமைக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். அடுத்ததாக, கதாபாத்திரங்களுக்கு மிக மிகப் பொருத்தமான நடிப்புக் கலைஞர்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.

0a1d

இந்தியில் கஜராஜ் ராவ் செய்த கதாபாத்திரத்தை சத்யராஜும், நீனா குப்தா செய்த கதாபாத்திரத்தை ஊர்வசியும் ஏற்று திறம்பட நடித்து படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். இவர்களின் இயல்பான நடிப்பு உண்மையில் தனித்து நிற்கிறது, இவர்களின்  கதாபாத்திரங்களை இவர்களைத் தவிர வேறு யாராலும் இத்தனை அழகாகவும் நம்பத் தகுந்ததாகவும் நிச்சயம் செய்திருக்க முடியாது. சத்யராஜ் தன் அம்மாவை சமாளிப்பது, மனைவியை அரவணைப்பது என கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார். ஊர்வசியின் நடிப்புக்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம். கடினமான காட்சிகளில் கூட சாதாரணமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

சத்யராஜின் அம்மாவாக வரும் கே.பி.ஏ.சி. லலிதா மற்றுமொரு சிறப்பான தேர்வு.

மூத்த மகன் இளங்கோ கதாபாத்திரத்தில் வரும் ஆர்ஜே பாலாஜி, தனது வழக்கமான பாணியில் நகைச்சுவை மற்றும் நையாண்டி  கலந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். கூடுதலாக, இந்தப்படத்தில் சென்டிமென்ட் காட்சிகளிலும் அவர் சிறப்பாக நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார். அவரது காதலியாக வரும் அபர்ணா பாலமுரளி குறைந்த எண்ணிக்கையிலான காட்சிகளே வந்தாலும் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

கார்த்திக் முத்துக்குமாரனின் ஒளிப்பதிவு கதையோட்டத்தை மெருகேற்றியிருக்கிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து வன்முறை வெறியாட்டம் தாண்டவமாடும் படங்களே வெற்றிப்படங்களாக இருந்துவரும் நிலையில், அதற்கு மாறாக, நகைச்சுவையும் எமோஷனும் கலந்த வெற்றிப்படமாக இப்படத்தைக் கொடுத்த இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் பாராட்டலாம்.

‘வீட்ல விசேஷம்’ – குடும்பத்தோடு கண்டு களிக்கலாம்!