‘சுழல்: தி வோர்டெக்ஸ்’ – விமர்சனம்

நடிப்பு: கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர்

இயக்கம்: பிரம்மா, அனுசரண்

எழுத்து: புஷ்கர் – காயத்ரி

இசை: சாம் சி.எஸ்

ஓடிடி தளம்: அமேசான் பிரைம் வீடியோ

மக்கள் தொடர்பு: யுவராஜ்

தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத வெற்றிப்படங்களில் ஒன்றான ’விக்ரம் வேதா’வை படைத்தளித்த பிரபல படைப்பாளிகள் புஷ்கர் – காயத்ரி, அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் வலைத் தொடரான ’சுழல்: தி வோர்டெக்ஸ்’க்கு எழுத்து வடிவம் கொடுத்திருக்கிறார்கள். எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த வலைத் தொடரின் முதல் 4 எபிசோடுகளை பிரம்மாவும், அடுத்த 4 எபிசோடுகளை அனுசரணும் இயக்கியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் மலைப்பிரதேசத்தில் உள்ள சாம்பலூர் என்ற கற்பனை ஊர் தான் கதையின் பிரதான களம். இந்த ஊரில் அங்காள பரமேஸ்வரி என்ற அம்மனோடு சம்பந்தப்பட்ட மசானக் கொள்ளை (மயானக் கொள்ளை) திருவிழா 9 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் முதல்நாள் கதை தொடங்குவது போலவும், கடைசி நாள் கதை முடிவது போலவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

திருவிழாவின் முதலாம் நாள் இரவு அந்த ஊரில் அதிர்ச்சியூட்டும் மர்மமான இரண்டு சம்பவங்கள் நிகழ்கின்றன. சிமெண்ட் தொழிற்சாலை ஒன்று தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிகிறது. அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் சங்கத் தலைவர் சண்முகம் (பார்த்திபன்) மகள் நிலா (வயது 15) காணாமல் போகிறார்.

இவ்விரு மர்ம சம்பவங்களுக்கும் யார் காரணம் என்பதைக் கண்டறிய காவல்துறை ஆய்வாளர் ரெஜினா தாமஸும் (ஸ்ரேயா ரெட்டி), உதவி ஆய்வாளர் சக்கரவர்த்தியும் (கதிர்) களத்தில் குதிக்கிறார்கள். இவர்கள் மேற்கொள்ளும் புலன்விசாரணை நெடுகிலும் எதிர்பாராத சம்பவங்களும், அதிர்ச்சியூட்டும் அடுக்கடுக்கான திருப்பங்களுமாய் கதை விறுவிறுப்பாய் விரிந்துகொண்டே செல்கிறது. முதல் எபிசோடில் விழுந்த மர்ம முடிச்சுகளை, இறுதி எபிசோடு வரை அவிழாமல் காப்பாற்றிக் கொண்டுபோய், கடைசியில் பதைபதைக்கச் செய்யும் வகையில் அவிழ்த்து அருமையாக முடித்திருக்கிறார்கள்.

இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனி தன்மை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. காவல்துறை அதிகாரிகளாக வரும் ரெஜினாவும், சக்கரவர்த்தியும் ‘இன்வெஸ்டிகேட் பண்ணுகிறேன்’ என்ற பெயரில் வெறுமனே விரைப்பாக அலைந்துகொண்டிருக்காமல், அவர்களும் எமோஷன்களை வெளிப்படுத்த இடம் கொடுத்திருப்பது கதைக்கு சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறது.

சங்கத் தலைவராக வரும் பார்த்திபன் நாத்திகராக இருப்பது, அவரது மனைவி ஆத்திகராக இருப்பது, இதனாலேயே இருவரும் பிரிந்து வாழ்வது, இவர்களது மூத்த மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்மனக் காயங்களால் பாதிக்கப்பட்டிருப்பது, இளைய மகள் நிலா மனம்விட்டு பேச ஆளில்லாமல் தவிப்பது, அவளை காவல்துறை ஆய்வாளர் ரெஜினாவின் மகன் காரில் கொண்டு செல்வது, அதை சிசிடிவியில் காவல்துறை உதவி ஆய்வாளர் கதிர் கண்டுபிடிப்பது, சிமெண்ட் ஆலையின் உரிமையாளராக வரும் ஹரிஷ் உத்தமன் சந்தேகிக்கத் தக்க வகையில் முரட்டுத்தனம் காட்டுவது… இப்படி பல பல பாத்திரங்கள்…. பல பல சுவாரஸ்யங்களுடன்….

ஒரு எபிசோடில் நல்லவராக இருப்பவர் அடுத்த எபிசோடில் கெட்டவராக இருப்பதும், ஒரு எபிசோடில் கெட்டவராக தெரிந்தவர் அடுத்த எபிசோடில் நல்லவராய் தெரிவதுமாய் சுழற்றி சுழற்றியடிக்கும் திரைக்கதை வலுவாய் இருக்கிறது. அதேநேரத்தில் கதையை ’மசானக் கொள்ளை’ புராணத்தோடு பின்னிப் பிணைந்து சொல்லியிருப்பது நல்ல உத்தி. சபாஷ்.

புஷ்கர் – காயத்ரி என்கிற பெயர் இந்தத் தொடர் மீது ஏற்படுத்திய எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

சாம் சி.எஸ்.-ன் பின்னணி இசை அதகளம். ஒளிப்பதிவும் சிறப்பு.

இதுவரை வந்த தமிழ் வெப்சீரிஸ்களின்  தரத்தில் ஒரு புதிய மைல்கல்லை இந்தத் தொடர் ஏற்படுத்தியிருக்கிறது.

’சுழல்: தி வோர்டெக்ஸ்’ – திரும்பத் திரும்ப பார்க்கலாம்!