800 – விமர்சனம்

நடிப்பு: மதுர் மிட்டல், மகிமா நம்பியார், நரேன், கிங் ரத்தினம், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன், யோக் ஜேபி, சரத் லோகிதஷ்வா, ஜானகி சுரேஷ், ரித்விக், பிருத்வி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: எம்.எஸ்.ஸ்ரீபதி

ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்

படத்தொகுப்பு: பிரவீன் கேஎல்

இசை:ஜிப்ரான்

தயாரிப்பு: மூவி ட்ரெய்ன் மோஷன் பிக்சர்ஸ்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று (biopic) திரைப்படம் தான் ‘800’. முத்தையா முரளிதரனின் இளமைக் காலம், கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏற்றத்தாழ்வுகள், இலங்கையின் அப்போதைய அரசியல் சூழல் போன்றவற்றை பேச முயன்றிருக்கிறது ‘800’ திரைப்படம்.

’பயோபிக்’ திரைப்படம் என்றாலே, குறிப்பிட்ட முக்கியப் புள்ளியின் வாழ்க்கை வரலாற்றை ஒருவர் விவரிப்பதாகவும், அதை இன்னொருவர் கேட்பதாகவும், இடையிடையே ஃபிளாஷ்பேக் காட்சிகள் வந்து போவதாகவும் வடிவமைப்பது தான் வாடிக்கை. இந்த படமும் இம்மி பிசகாமல் இதே பாணியிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில்,

தீவிர கிரிக்கெட் ரசிகரும்,  முத்தையா முரளிதரனுடைய விளையாட்டின் மீது மிகுந்த அபிமானம் கொண்டவருமான ‘வீரகேசர’ என்ற நாளிதழின் ஆசிரியர் முகுந்தன் சதாசிவம் (நாசர்), முத்தையா முரளிதரனின் குழந்தைப் பருவம் தொடங்கி, அவர் 800 விக்கெட் எடுக்கும் நாள் வரையிலான வாழ்க்கை கதையைத் தன் சக ஊழியர் விநோத்திடம் (ஹரிகிருஷ்ணன்) விவரிப்பதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர்கள் வரலாற்றுக் காரணங்களால் ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள் என மூன்று பிரிவுகளாக பிரிந்திருக்கிறார்கள். அவர்களில், ஈழத்தமிழர்கள் என்போர், எழுதப்பட்ட வரலாறு துவங்குவதற்கு முன்பிருந்தே ஈழத்தைத் தங்கள் சொந்த மண்ணாக- தாயகமாக – கொண்ட பூர்வக்குடிகள். (அவர்கள் தான் தமிழீழம் என்ற தனிநாடு கேட்டு போராடியவர்கள்). இன்னொரு பிரிவினரான மலையகத் தமிழர்கள் என்போர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தேயிலை எஸ்டேட்டுகளில் கூலிவேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள். (இவர்கள் எந்த சிங்களக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த ஆட்சியை ஆதரித்து, அனுசரித்து, வாழப் பழகிக்கொண்டவர்கள்). இத்தகைய மலையகத் தமிழர் குடும்பம் ஒன்றில் பிறக்கிறார் முத்தையா முரளிதரன் (மதுர் மிட்டல்).

முத்தையா முரளிதரனை, சிறுவயதில், ஹாஸ்டல் வசதியுடன் கூடிய கிறிஸ்தவப் பள்ளியில் சேர்க்கிறார்கள் அவரது பெற்றோர்கள். கிரிக்கெட் ஆர்வம் கொண்ட அவருக்கு அந்தப் பள்ளியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படுகிறது. பள்ளிப் போட்டிகளில் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக உருவெடுக்கிறார். பிறகு பல சோதனைகளையும் சவால்களையும் கடந்து, இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்று, சர்வதேச அரங்கில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலக சாதனை நிகழ்த்திய சிறந்த பந்துவீச்சாளராகக் கொண்டாடப்படுவது தான் ’800’ திரைப்படத்தின் கதை.

முத்தையா முரளிதரனாக நடித்திருக்கும் மதுர் மிட்டல் தோற்ற ஒற்றுமையிலேயே கவர்கிறார். எந்த பதற்றமும் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கான உடல்மொழியைக் கொண்டுவந்திருப்பதோடு, முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் நிகழும் நிராகரிப்புகள், அவமானங்கள், வெற்றி – தோல்விகளை தன் பக்குவமான நடிப்பால் உயிரூட்டி நம் கண்முன் கொண்டு வருகிறார்.

முத்தையா முரளிதரனின் மனைவி மதிமலர் வேடத்தில் நடித்திருக்கும் மகிமா நம்பியார் வரும் காட்சிகள் குறைவு தான், என்றாலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்காவாக வரும் கிங் ரத்னம், ரணதுங்காவைப் போன்ற தோற்றத்திலும் உடல் மொழியிலும் ரசிக்க வைத்திருப்பதோடு, கச்சிதமான நடிப்பையும் வழங்கியிருக்கிறார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவராக, மாஸ்டர் என்ற வேடத்தில் நடித்திருக்கும் நரேன், ஒரேயொரு காட்சியில் வந்தாலும், அவர் பேசும் அழுத்தமான தீப்பொறி வசனங்களால் கைதட்டல் பெறுகிறார்.

முத்தையா முரளிதரனின் அப்பா முத்தையாவாக வரும் வேல ராம்மூர்த்தி, அம்மாவாக வரும் ஜானகி சுரேஷ், சகோதரராக வரும் திலீபன், பாட்டி அங்கம்மாளாக வரும் வடிவுக்கரசி, இளம்வயது அங்கம்மாளாக வரும் ரித்விகா, பத்திரிகை ஆசிரியர் முகுந்தன் சதாசிவமாக வரும் நாசர், பத்திரிகை அலுவலக ஊழியர் விநோத்தாக வரும் ஹரி கிருஷ்ணன், கிரிக்கெட் கோச்சாக வரும் சரத் லோகிதஷ்வா, ஆறு வயது முத்தையா முரளிதரனாக வரும் ரித்விக், பன்னிரெண்டு வயது முத்தையா முரளிதரனாக வரும் பிருத்வி, மற்றும் அருள்தாஸ், யோக் ஜேபி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரம் உணர்ந்து நடித்து கவனம் பெறுகிறார்கள்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கிரிக்கெட் மைதானங்களின் பதற்றத்தையும், ஆரவாரத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறது. பிரவீன் கேஎல்-இன் படத்தொகுப்பு, ஆவணப்படத் தன்மையை சற்று குறைத்திருக்கிறது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் செகான் கருணாதிலக்க – இயக்குநர் எம்.எஸ்.ஶ்ரீபதி கூட்டணியின் கோர்வையில்லாத தொங்கு திரைக்கதையால் படம் பல இடங்களில் தள்ளாடுகிறது. இலங்கையில் நடக்கும் இனக் கலவரங்கள் மற்றும் குண்டு வெடிப்புகளால் முரளிதரனின் தனிப்பட்ட வாழ்க்கையும், கிரிக்கெட் வாழ்க்கையும் பாதிக்கப்படுவதாக படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படுகிறது. ஆனால், இந்த இனக் கலவரங்கள் மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு யார் மூலகாரணம்? அதை சிங்கள அரசு எப்படி அணுகுகிறது? தமிழர்கள் தங்கள் மீதான தாக்குதல்களை எப்படி எதிர்க்கொண்டு பதிலடி கொடுக்கிறார்கள்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு வேண்டுமென்றே பதில் சொல்லாமல் தப்பி ஓடுகிறது திரைக்கதை.

அரசியல் நீக்கப்பட்ட ஒரு முத்தையா முரளிதரனை கொண்டுவர முயன்றிருக்கிறது திரைக்கதை. மொத்த படத்திலும் எங்குமே சிங்கள ராணுவத்தின் ஈழத்தமிழர்கள் மீதான அட்டூழியங்கள், சிங்கள அரசின் நிலைப்பாடுகள், ஈழத்தமிழர்களின் சமூகநிலை, சர்வதேச நாடுகளின் கண்டனங்கள் என எதுவுமே காட்சியாக்கப்படவில்லை. அந்நாட்டில் நிலவும் அரசின் இனவெறுப்பு அடக்குமுறைகள் முரளிதரனையும் அவர் சார்ந்திருக்கும் இனத்தையும் எங்ஙனம் பாதிக்கிறது என்பதையும், அதற்கு முரளிதரனின் நிலைப்பாடு என்ன என்பதையும் பேசாமல், முரளிதரனை வெறுமனே ‘தமிழர்… தமிழர்.. தமிழர்..’ என முன்வைத்திருக்கிறது படம். மலையகத் தமிழராக அடையாளப்படுத்தப்படும் முரளிதரன், மலையகத் தமிழர்களின் அரசியலையாவது பேசுகிறாரா அல்லது அவர்களின் வாழ்வியலையாவது பிரதிபலிக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ‘மாஸ்டர்’ என்ற முக்கிய தலைவரோடு, இலங்கையின் இனப் போராட்டச் சூழலை முரளிதரன் விவாதிக்கும் காட்சி, முரளிதரனின் அரசியல் அறியாமையையே சுட்டிக்காட்டுகிறது.

“நான் தமிழனோ சிங்களவனோ இல்லை. கிரிக்கெட்டர்”, “சிங்களவர்கள விமர்சிச்சா அவுங்க தப்பா நினைப்பாங்க. தமிழ் ஆளுகள விமர்சிச்சா இவுங்க தப்பா நினைப்பாங்க. அதான் நான் ஒதுங்கிப்போறேன்” என்பன போன்ற வசனங்களால் முரளிதரனை அரசியல்ரீதியாக நியாயப்படுத்த முயன்றிருக்கிறது படம். ஆனால், முரளிதரனை வெறும் ‘கிரிக்கெட்டராக’ மட்டுமே இலங்கை ரசிகர்களோ, இல்லை, கிரிக்கெட் ரசிகர்களோ பார்க்கவில்லை என்பது உலகறிந்தது. மேலும், ‘ஒரு மலையகத் தமிழன் டு உலக சாதனை நாயகன்’ என்றே படத்தின் தொடக்கத்தில் இருந்து கட்டமைக்கப்படும்போது, திடீரென்று அவர் எப்படி அரசியலற்று போவார் என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.

அரசியல்ரீதியாகத் தான் சறுக்குகிறது என்றால் இறுதிக்காட்சியில் இருக்கும் அபத்தம் மொத்தமாகவே முரளிதரன் என்ற ‘வெறும் கிரிக்கெட்டர்’ பிம்பத்தைப் போட்டு உடைக்கிறது.’800 விக்கெட்டுக்கு இன்னும் ஒரு விக்கெட் தான் பாக்கி என இருக்கும்போது, இஷாந்த் சர்மாவிடம் போய் ‘நீ அவுட் ஆகிடேன்’ என்று முரளிதரனை உதவி கேட்க வைக்கலாமா, இயக்குநரே?

முரளிதரனை தவிர வேறு கதாபாத்திரங்கள் படம் முழுவதும் வரும்படி அழுத்தமாக எழுதப்படாதது, மொத்த படத்தையும் ‘ஒன்மேன் ஷோ’வாக மாற்றியிருக்கிறது. படம் ஆவணத்தன்மையாகவும் முழுமை பெறாமல் புனைவாக்கமாகவும் தேர்ச்சி பெறாமல் ஒரு ‘டாக்கு-ட்ராமா’தன்மையில் தந்திருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.ஶ்ரீபதி.