ஸ்பைடர் – விமர்சனம்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் கிரைம் த்ரில்லர் ‘ஸ்பைடர்’. கொடூரமாய் கொலை செய்யும் குற்றவாளிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து, அவர்களை தண்டிக்கும் ஓர் உளவுத்துறை அதிகாரியின் கதை இது.

நாயகன் மகேஷ் பாபு மத்திய உளவுத்துறை அதிகாரி. பொதுமக்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்பது அவருக்கு தரப்பட்டுள்ள பணி. அப்படி ஒட்டுக்கேட்கும்போது சாமானியர்கள் யாராவது ஏதாவது பிரச்சனையில் சிக்கியிருப்பது தெரிய வந்தால், மகேஷ் பாபு சொந்த விருப்பத்தில் அப்பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களுக்கு உதவி வருகிறார்.

அந்த வகையில், ஒரு பிரச்சனையில் சிக்கியிருக்கும் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை காப்பாற்ற ஒரு பெண் போலீசை அனுப்புகிறார் மகேஷ் பாபு. ஆனால், அந்த மாணவியோடு பெண் போலீசும் கொடூரமாக படுகொலை செய்யப்படுகிறார்கள்.

இக்கொலைகளை செய்த கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் மகேஷ் பாபு. இப்புலனாய்வில், பரத் தான் கொலைகளுக்கு காரணம் என்பதும், பரத்துக்குப் பின்னால் அவரது அண்ணன் எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.

பரத்தும், எஸ்.ஜே.சூர்யாவும் ஏன் அவ்விரு பெண்களையும் கொலை செய்தார்கள்? கொலையாளிகளுக்கு மகேஷ் பாபு கொடுக்கும் தண்டனை என்ன என்பது மீதிக்கதை.

தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகனாக வலம் வரும் மகேஷ் பாபு, தமிழில் ‘ஸ்பைடர்’ மூலம் அறிமுகமாகி இருக்கிறார். நடை, உடை,  பாவனை என அனைத்திலும் கம்பீரமாய் ஹீரோயிசம் காட்டியிருக்கிறார். நடனக் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து ரசிக்க வைக்கிறார்.

நாயகி ரகுல் ப்ரீத் சிங் அழகாக இருக்கிறார். அவரது கதாபாத்திரம் கனமாக இல்லாததால், பாடல் காட்சிகளில் மட்டும் பட்டையைக் கிளப்பிவிட்டு போய்விடுகிறார்.

பார்த்தாலே ஈரக்குலை நடுங்கச் செய்யும் மிரட்டலான சைக்கோ வில்லனாக எஸ்.ஜே.சூர்யா தூள் பரத்தியிருக்கிறார். கோபம், அழுகை, ஆற்றாமை என நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் துல்லியமான நடிப்பை வழங்கி இருக்கிறார். அவர் ஒரு நடிகராக இனி பிரகாசமாக வலம் வருவார் என்று உறுதியாக நம்பலாம்.

பரத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளபோதிலும் பெரிதாக எடுபடவில்லை. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஆர்.ஜே.பாலாஜி வழக்கம் போல் கவுன்ட்டர் வசனங்களால் கலகலக்க வைக்கிறார். ஜெயப்பிரகாஷ், தீபா ராமானுஜம், ஷாஜி, சாயாஜி ஷிண்டே, ஹரீஷ் ஆகியோர் தங்கள் பாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஓ.கே.ரகம். பின்னணி இசையில் அதிரடி காட்டியிருக்கிறார். படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஈவு இரக்கம் பாராமல் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தன் பாணியில் படத்தை அருமையாக நகர்த்தியிருக்கிறார். மகேஷ் பாபுவின் நேரடி தமிழ்ப் படம் இது என்பதற்காக மாஸ் பில்டப், பன்ச் வசனம், ஹீரோயிசம் என்று பெரிதாக எதுவும் பதிவு செய்யாமல் இயல்பான திரைக்கதையின் ஊடே நடிக்க வைத்திருப்பது ஆரோக்கியமான விஷயம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கொஞ்சமாய் ஒளிந்திருக்கும் குரூரம் அதிகமானால் எத்தகைய விபரீதம் ஏற்படும் என்பதை கதைக்கருவாக எடுத்துக்கொண்டு, அதை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதற்காக முருகதாஸை பாராட்டலாம்.

‘ஸ்பைடர்’ – ஏ.ஆர்.முருகதாஸ் ரசிகர்களுக்கு விருந்து!

Read previous post:
p8
“பெண் வேடத்தில் நடித்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது!” – ‘பொட்டு’ நாயகன் பரத்

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’ இப்படத்துக்கு கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் வடிவுடையான். இந்த

Close