கேப்டன் – விமர்சனம்

நடிப்பு: ஆர்யா, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், கோகுல், ஐஸ்வர்யா லட்சுமி, ஆதித்ய மேனன், காவியா ஷெட்டி, மாளவிகா அவினாஷ் மற்றும் பலர்

இயக்கம்: சக்தி சௌந்தர் ராஜன்

ஒளிப்பதிவு: யுவா

இசை: டி.இமான்

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா

இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் இருளடர்ந்த  காட்டுக்குள் எந்த மனிதரையும் உள்ளே விடாமல் கொன்றழிக்கும் கொடிய விசித்திர ஜீவராசியை வீரமும் தீரமும் மிக்க ராணுவ கேப்டன் எப்படி விரட்டியடிக்கிறார் என்பது ‘கேப்டன்’ படத்தின் ஒருவரிக் கதை.

சிக்கிமில் இந்திய ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் ’செக்டர் 42’ மனித நடமாட்டமே இல்லாத வனப்பகுதி ஆகும். அங்கே தொழிற்சாலை ஒன்றை நிறுவ திட்டமிடுகிறது இந்திய அரசு. இதற்காக பார்வையிட அப்பகுதிக்கு அனுப்பப்பட்ட ராணுவக்குழு திரும்பி வரவில்லை.

அடுத்து, கேப்டன் வெற்றிச்செல்வன் (ஆர்யா) தலைமையில் இன்னொரு குழு அனுப்பப்படுகிறது. அங்கு திடீரென்று மர்மமான தாக்குதல் ராணுவக் குழு மீது நடத்தப்படுகிறது. அப்போது ராணுவக் குழுவில் இருக்கும் ஹரிஷ் உத்தமன் புத்தி பேதலித்து கேப்டன் வெற்றிச்செல்வனையே சுட்டுக்கொல்ல முயன்று, பின்னர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் அதே பணிக்கு, அதே இடத்துக்கு விஞ்ஞானி சிம்ரன் துணையுடன் செல்கிறது வெற்றிச்செல்வனின் பழைய டீம்.  காட்டுக்குள் பதுங்கியிருக்கும் அமானுஷ சக்தியான கொடிய விசித்திர ஜீவராசி அவர்களை தாக்குகிறது. அது என்ன ஜீவராசி? அது அங்கே என்ன செய்கிறது? அது ஏன் மனிதர்களைத் தாக்குகிறது? ஹரிஷ் உத்தமன் ஏன் புத்தி பேதலித்தது போல் நடந்துகொண்டார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘கேப்டன்’ படத்தின் மீதிக்கதை.

0a1b

ஹாலிவுட் படங்களிலிருந்து ஹைடெக்கான கான்செப்ட்களை உருவி ‘நாணயம்’, ‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன், இந்த முறை ‘ஏலியன்’, ‘பிரிடேட்டர்’ போன்றவற்றின் கான்செப்ட்களை உருவி ‘கேப்டன்’ படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக எளிமையாக கதை பண்ணியுள்ள போதிலும், அதை சுவாரஸ்யமாக அமைக்காதது பெரிய குறை. கொடிய விசித்திர ஜீவராசி(கள்) என்று படத்தில் காட்டப்படுபவை பார்வையாளர்களிடம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சும்மா ‘தேமே’ என்று படத்துடன் ஒன்றாமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வருகிறார்கள். படத்தை இரண்டு மணி நேரத்தில் முடித்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்.

யுவாவின் ஒளிப்பதிவு, எஸ்.எஸ்.மூர்த்தியின் கலை இயக்கம், டி.இமானின் பின்னணி இசை ஆகியவை படத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

ஆர்யா, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், கோகுல், ஐஸ்வர்யா லட்சுமி, ஆதித்ய மேனன், காவியா ஷெட்டி, மாளவிகா அவினாஷ் எனப் படத்தில்  தெரிந்த முகங்கள் பல இருந்தபோதிலும், எந்த  கதாபாத்திரமும் சுவாரஸ்யமாக எழுதப்படாததால் ஈர்க்கவில்லை.

ஆர்யா இனிமேலாவது ஒரு படத்தில் கமிட் ஆகும்முன் அதன் திரைக்கதையை தெளிவாக கேட்டு, புரிந்துகொண்டு, விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தால் மட்டுமே கமிட் ஆவது அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் நல்லது.

‘கேப்டன்’ – ‘ஏலியன்’, ‘பிரிடேட்டர்’ போன்ற ஹாலிவுட் படங்களைப் பார்க்காத ரசிகர்களுக்குப் பிடிக்கும்.