பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’: குடியரசு நாளன்று திரைக்கு வருகிறது

0a1bடாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழு இயற்றிய இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த குடியரசு நாளான ஜனவரி 26ஆம் தேதி, பா.இரஞ்சித்தின் ‘தங்கலான்’ திரைப்படம் திரைக்கு வருகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்..

’தங்கலான்’, கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல் (Kolar Gold Field) எனப்படும் கே.ஜி.எஃப் பற்றிய கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் வெளியீட்டுத் தேதி ஆகியவை குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தங்கலான்’ திரைப்படம், இந்திய குடியரசு நாளான வருகிற ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அம்பேத்காரிய பற்றாளரான இயக்குனர் பா.இரஞ்சித்தின் ‘தங்கலான்’ படம், டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான குழு இயற்றிய இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த குடியரசு நாளன்று திரைக்கு வருவது குறிப்பிடத் தகுந்தது.

மேலும், இப்படத்தின் டீசர் நவம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ள படக்குழு, அதற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை விக்ரம் மற்றும் பா.இரஞ்சித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.