தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் விஜய் – அட்லீ கூட்டணி!

பரதன் இயக்கும் ‘பைரவா’ படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் வசனக் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. இப்படம் பொங்கலன்று திரைக்கு வருகிறது.

இதனை அடுத்து, அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். ஏற்கெனவே விஜய் – அட்லீ கூட்டணியில் உருவான ‘தெறி’ படம் வெற்றிப்படமாக அமைந்ததால், இருவரும் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேனாண்டாள் பிலிம்ஸின் தலைமை அதிகாரி ஹேமா ருக்மணி கூறுகையில், “விஜய் போன்ற பெரிய நடிகரின் படத்தைத் தயாரிப்பதில் பெருமை கொள்கிறோம். ‘தெறி’யில் தென்பட்ட விஜய் – அட்லீயின் மேஜிக்கை, மீண்டும் இந்தப் படத்தில் காணமுடியும்” என்றார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு டிசம்பரில் ஆரம்பமாக உள்ளது.