நடிகை சுவாதியின் தெத்துப்பல்லுக்கு தனி ஷாட் வைத்த இயக்குனர்!

‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து ‘யட்சன்’, ‘வடகறி’ ஆகிய படங்களில் நடித்த அவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘யாக்கை’ படத்தில் ‘கழுகு’ நாயகன் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இது பற்றி சுவாதி கூறுகையில், “சுப்பிர மணியபுரம்’ படத்துக்குப் பிறகு ‘யட்சன்’, ‘வடகறி’ படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்தேன். இப்போது ‘யாக்கை’ படத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி ஆசிரியையாக வருகிறேன். இதன் இயக்குனர் குழந்தை வேலப்பன், என்னிடம், ‘உன் தெத்துப்பல்லுக்கே தனி ஷாட் வைத்திருக்கிறேன்’ என்று கேலி செய்தார். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் பாடி இருக்கிறார். அந்த பாடல் காட்சியில் நானும் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

எனக்கு திருமணம் ஆகிவிட்டதாக யாரோ வதந்தியை பரப்பி விட்டிருக்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். அப்படி எதுவும் நடக்கவில்லை. உண்மையை சொன்னால் எனக்கு பாய் பிரண்டுகள் கூட கிடையாது. ஒரு காலகட்டத்தில் எல்லா நாயகிகளைப் பற்றியும் இப்படி செய்தி வரும். அது போல் தான் இதுவும். இந்த வதந்திக்கு விளக்கம் சொல்லி போரடித்து விட்டது. இதுவும் எனக்கு ஒரு விளம்பரம் என்று எண்ணிக்கொள்ள வேண்டியது தான்.

என் அப்பா மாதிரி நல்ல குணம் கொண்ட ஆண் எனக்கு கணவராக அமைய வேண்டும். ஒரே துறையில் உள்ளவர்களை திருமணம் செய்தால் புரிந்து கொள்ள முடியும். நேரம் வரும்போது பார்க்கலாம்” என்றார் சுவாதி.