“வற்புறுத்தும் 2 தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க முடியாது”: சிவகார்த்திகேயன் திட்டவட்டம்!

‘ரெமோ’ படத்தின் நன்றி விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தனக்கு சிலர் தொல்லை கொடுப்பதாகவும், தனது ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ படங்களை திரைக்கு வர விடாமல் இடையூறு செய்ததாகவும் கூறி மேடையிலேயே கண்ணீர் விட்டார். இதனால் பட உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் (தற்கொலை செய்யப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாக இருப்பவர்) ஆகிய 3 தயாரிப்பாள்ர்களுக்கும், சிவகார்த்திகேயனும் பிரச்சனை இருப்பதாக அப்போது பேச்சு எழுந்தது.

இது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் கூறும்போது, “தங்கள் படங்களில் நடிப்பதற்காக 3 தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனுக்கு முன்பணம் கொடுத்து இருப்பதாக புகார் கூறி உள்ளனர். ஆனால், சிவகார்த்திகேயன் இதனை மறுத்து உள்ளார். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களையும் சிவகார்த்திகேயனையும் அழைத்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.

தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் தேனப்பன் கூறும்போது, “ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, தனது படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு கொடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுபோல் தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் ஆகியோரும் தங்கள் படங்களில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு சம்பள முன்பணம் கொடுத்து இருப்பதாகவும், தற்போது அவர் நடிக்க மறுப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். சிவகார்த்திகேயனிடம் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்த நிலையில் நடிகர் சங்கத்துக்கு சிவகார்த்திகேயன் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

“என்னிடம் கால்ஷீட் கேட்டு 2013-ல் தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன் ஆகிய 3 பேர் அணுகினார்கள். இதில் ஞானவேல்ராஜா படத்தில் நடிப்பதற்கு மட்டும் ஒப்பந்தம் போடப்பட்டது. மற்ற இருவரின் படங்களில் நடிக்க வாய்மொழியாகவே பேசப்பட்டது. இதற்காக அவர்களிடம் சம்பளத்துக்கான முன்பணம் எதுவும் நான் வாங்கவில்லை.

இப்போது எனது மார்க்கெட் நிலவரம் உயர்ந்துள்ள நிலையில், அவர்கள் மூன்று பேரும் வந்து தங்கள் படங்களில் நடித்துக் கொடுக்கும்படி வற்புறுத்துகிறார்கள். ஞானவேல்ராஜாவிடம் ஒப்பந்தம் போட்டு இருப்பதால், அவர் படத்தில் மட்டும் நடித்துக் கொடுப்பேன். ஆனால், மற்ற இருவரின் படங்களிலும் நடிக்க முடியாது. அவர்களிடம் ஒப்பந்தம் எதுவும் போடவில்லை. இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன்.”

இவ்வாறு சிவகார்த்திகேயன் கடிதத்தில் கூறி இருக்கிறார்.

இந்த கடிதத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் சங்கம் அனுப்பி வைத்து இருக்கிறது. இதன்மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.