கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கம்: மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்று முதல் ஆறு வரையிலான அணுமின் நிலையங்களை அமைப்பதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:- ‘

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுமின் நிலையங்களுக்கான ஆரம்பகட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், ஐந்தாவது மற்றும் ஆறாவது அணுமின் நிலையங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

முதல் இரண்டு அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டபோது கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன, போராட்டங்களும் நடைபெற்றன. போராடிய மக்கள் மீது தாக்குதல்களும், வழக்குகளும் ஏவிவிடப்பட்டன. உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளை கைவிட வேண்டுமென்று கூறிய பிறகும் தமிழக அரசு இதுவரையிலும் அவற்றை கைவிட தயாரில்லை.

2013-ம் ஆண்டு ஜப்பானில் ஃபுகுசிமாவில் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு கூடங்குளம் அணுமின் நிலைய தொழில்நுட்பங்களை விடவும் முன்னேறிய தொழில்நுட்பங்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கொண்ட ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளில் பல அணு மின்நிலையங்கள் மூடப்பட்டன. அதற்குப் பிறகு, அமெரிக்காவில் ஒரு அணுமின் நிலையம் கூட அமைக்கப்படவில்லை.

இந்தப் பின்னணியில் ஆறு அணுமின் நிலையங்களை ஒரே இடத்தில் அமைப்பது என்றும், இந்தியாவில் மிகப் பெரிய அணுமின் சக்தி வளாகமாக கூடங்குளம் விளங்கும் என்றும் அறிவித்திருப்பது மக்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றைப் பற்றி கவலைப்படாமல் எடுக்கப்பட்ட முடிவுகளாகும்.

பொருளாதார ரீதியாகப் பார்த்தாலும் அணுமின் நிலையம் அமைப்பதற்கும், அணுமின் உற்பத்திக்கும் மிக அதிக செலவு பிடிக்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் இரண்டு அலகுகள் நிறுவப்பட்டபோது சுமார் ரூ.13 ஆயிரம் கோடி செலவாகும் என்று கூறப்பட்டு, தற்போது ரூ.17 ஆயிரம் கோடிக்கு மேலாக செலவாகியிருக்கிறது. இந்நிலையில் மூன்று மற்றும் நான்காவது அலகிற்கு தற்போதைய நிலையில் ரூ.39,849 கோடி முதலீடு தேவைப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த அணு உலைகள் அரசு குறிப்பிட்டுள்ள 2021-ம் ஆண்டு நிறைவு பெறும்போது இந்த தொகை இன்னும் அதிகமாகும். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அணுமின் நிலையங்கள் அமைக்கப்படுவதில்லை என்பது தான் அனுபவமாக உள்ளது. இந்நிலையில் கட்டுமான பணிகளுக்கான தொகை மிகப்பெரிய அளவிற்கு உயரும் வாய்ப்பிருக்கிறது. அதேபோன்று ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையும் தற்போதைய நிலையில் உள்ள யூனிட்டிற்கு ரூ.3.94  என்பதிலிருந்து, 4, 5 அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை அதிகமாக ரூ.6.30 ஆக இருக்கும் என்று அரசாங்கத்தால் கணிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

எனவே, பாதுகாப்பாற்ற, சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கிற, மிகுந்த மூலதனம் தேவைப்படுகிற அதேசமயம் உற்பத்தி செலவும் மிக அதிகமாக வாய்ப்பிருக்கிற கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்று முதல் ஆறு வரையிலான அணுமின் நிலையங்களை அமைப்பதை இந்திய அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழக அரசாங்கம் மத்திய அரசுடன் விவாதித்து இந்தப் பணிகள் மேற்கொண்டு தொடரா வண்ணம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.