“இளைய பிள்ளைகளின் அரசியல் அறியாதவர் தியாகு”: சீமான் தரப்பு பதிலடி!

தியாகுவின் பேட்டி பார்த்தேன்.

ஏதோ தனித்தமிழ்நாடு இலட்சியத்திற்காக ஆயுதமேந்தி முந்திரிக்காட்டுக்குள்ளிருந்து போராடிக் கொண்டிருக்கும் கொரில்லா போராளி போன்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் கலைஞர் செய்திகள் தொலைகாட்சியில் போய் சுகிர்தாவோடு முந்திரி பக்கோடா கொறித்துவிட்டு வந்து இந்த பேட்டியை வழங்கியிருப்பார் என்று யூகிப்பது ஒன்றும் கடினமல்ல‌.

“நாங்கள் வைகோவை ஆதரிக்கவில்லை, கருணாநிதியை ஆதரிக்கவில்லை, சீமானையும் ஆதரிக்கவில்லை” என்று தன்னிலை விளக்கங்களோடு தொடங்குகிறார். பின்ன எவனை வீழ்த்துவதற்கு இந்த சமயத்தில் காணொளி வெளியிடுகிறீர்கள் மிஸ்டர் தியாகு என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

“இந்தியாவின் மேலிருந்து தமிழகத்தை ஆள்வது மோடிதானே? தமிழகத்தை தமிழன் ஆண்டால் போதுமா? இது போலி வாக்குசீட்டு அரசியல். இங்கிருந்து தமிழகத்திற்கு ஒன்றும் செய்யமுடியாது. சீமான் தன்னுடைய செயற்பாட்டு ஆவணத்தில் தெரிவித்திருப்பதெல்லாம் மத்திய அரசு அதிகாரத்தில் வருகிறது. ஏழு பேரை நம்மால் விடுதலையே செய்ய முடியவில்லையே” என்கிறார் தியாகு.

நாங்கள் அன்போடு சொல்லிக்கொள்கிறோம். உத்தமர் தியாகு அவர்களே, இந்தியாவில் அடிமைப்பட்ட இந்த மாநிலத்தை ஆள்வதற்கே நாங்கள் எப்படி தலையால் தண்ணீர் குடிக்க வேண்டி இருக்கிறது என்பது உங்களுக்கு புரிகிறதல்லவா? தமிழன் ஆள வேண்டும் என்று சொன்ன உடனேயே யார் தமிழன், எவன் தமிழன் என்றெல்லாம் விளக்குவதற்கு, தமிழன் என்ற பெயரில் திராவிடனுக்கு சீட்டு போட்டு தருவதற்கு உங்களை போன்றவர்கள் எத்தனை பேர் கிளம்புகிறீர்கள் என்றெல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்தானே??? மிகவும் எளிய கோரிக்கை – “தமிழர்நாட்டை தமிழர் ஆள வேண்டும்.” வெறும் அரசியல் அடிப்படை உரிமை என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்ட முழக்கம். மொழிவழி தேசிய இனங்களை இந்தியம் அங்கீகரித்து அதன் வழி மொழிவாரியாக தமிழகம் பிரிக்கப்பட்ட பின்பு, ஒரு பெரும்பான்மை மொழிவழி தேசிய இனத்தவரின் பிள்ளைகள் நாங்கள் என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கை. அதற்கு எவ்வளவு கேள்விகள், விளக்கங்கள், நக்கல்கள், ஆய்வுகள், அப்பப்பா….

இந்த இலட்சணத்தில் தனித்தமிழ்நாடு போராட்டத்திற்கு அழைக்கிறீர்கள்…. எதற்கு? சீமானை மெமோரியல் ஹால் முட்டுச்சந்தில் கொண்டு போய் நிறுத்தி அடையாளப் போராட்டம் நடத்திவிட்டு, ஒரு பத்திரிகை நடத்தி தன்னுடைய மேதமையை காட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கவா???

இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் நடத்திய தனித்தமிழ்நாடு புரட்சியில் உங்கள் புரட்சி ஒரு ஐம்பது பேரை கடந்து போயிருக்கிறதா தியாகு? ஒருவேளை கடல் கடந்து தனித்தமிழ்ப் பள்ளி நடத்த புலம் பெயர் தமிழர்களிடம் நிதி திரட்டப் போயிருக்கலாம். அதை தாண்டி உங்கள் தனித்தமிழ்நாடு கோரிக்கையை எத்தனை பேரிடம் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள் தியாகு?

எழுவர் விடுதலையை கூட சாத்தியமாக்க முடியாத ஒரு முதல்வர் பதவி என்று பேசுகிறீர்களே, எந்த அடிப்படையில் போய் கலைஞர் செய்திகளில் உட்கார்ந்துகொண்டு, “மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது, ஜெயலலிதா நினைத்தால் செய்ய முடியும், கலைஞர் என்னை விடுதலை செய்தார்” என்று பேசினீர்கள் தியாகு???

ஒரு மாநில அரசு நினைத்தால் ஒருவரை தூக்கு தண்டனையிலிருந்தே விடுவிக்க முடியும் என்பதற்கு நீங்கள் வாழும் சாட்சியா, இல்லையா?????

நீங்கள் இதுவரையில் மாநில அரசுக்கு கோரிக்கை வைத்து போராடியதே இல்லையா தியாகு??? அதிகாரமில்லாத ஆண்டவர்களிடம் ஏன் போய் வரம் கேட்டு மன்றாடினீர்கள் தியாகு? இல்லை, இன்று இந்த “அதிகாரமில்லாத பதவி”க்கு கூட தமிழர்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த நாடகமா???

எவ்வளவு நைச்சியமாக இந்த காணொளியில் நீங்கள் பேசியிருக்கிறீர்கள் தியாகு. சீமானை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்துகிறீர்கள். வரலாறு தெரியவில்லை என்கிறீர்கள். சீர்குலைவு வேலை செய்கிறார் என்கிறீர்கள். பார்ப்பனர்களை ஏற்றுக் கொள்கிறார், சாதி வெறுப்போடு அரசியல் செய்கிறார் என்ற எவ்வளவு முத்திரைகளை போகிற போக்கில் குத்திவிட்டு நகர்கிறீர்கள்.

“தேவிகுளம், பீர்மேடு போனதற்கு திராவிடத்தை குறை சொல்கிறார் சீமான்” என்று பொய் சொல்கிறீர்கள். “காமராசர் இந்திய ஆதரவாளராய் இருந்ததை சீமான் கண்டுகொள்ளவில்லை” எனறெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் தனித்தமிழ்நாட்டு போராளி ஈ.வெ.ரா, காமராசரின் இந்திய பற்றை பற்றி என்ன சொன்னார் என்று எதாவது எடுத்துக் காட்டுவீர்களா???? தேவிகுளம், பீர்மேடு போனதற்கு அந்த மாபெரும் புரட்சி போராளியின் எதிர்வினை என்னவென்று எடுத்துக்காட்டுவீர்களா??? அன்று எல்லைகளை காக்கப் போராடியவன் இன்று உங்களால் பாஸிஸ்ட் என்று இகழப்படும் மா.பொ.சிதானே… அந்த தமிழனுடைய பெருமைகளை திருடித்தானே உங்கள் ஈ.வெ.ராவுக்கு புகழ்மாலை பாடுகிறீர்கள்.

“நாயக்கர் என்றால் தெலுங்கர்கள் அல்ல; அதற்கு தலைவர்கள் என்று பொருள்” என்று சீமானுக்கு வகுப்பெடுக்கிறீர்களே தியாகு, நாயகர் பட்டம் வன்னியரில் கூட உண்டு. மறைமலையடிகளாரின் குரு சூளை சோமசுந்தர நாயகரை இங்கு யாராவது தெலுங்கர் என்றார்களா??? நாயகர் பட்டம் கொண்டவர்கள் அனைவரையும் இங்கு யாரும் தெலுங்கர்கள் என்று சொல்லவில்லை தியாகு, ஆனால் நாயக்கர்களையும், நாயுடுக்களையும் மட்டும் ஏன் எங்களுக்கு தலைவராக திணிக்கிறீர்கள் தியாகு?

ஒன்று கேட்க மறந்துவிட்டேன். இந்தியாவுக்கு எதிராக தனித்தமிழ்நாடு போராட்டத்திற்கு சீமானை அழைக்கும் நீங்கள்தானே உங்கள் இயக்கத்துக்காரர்களை தூண்டிவிட்டு இந்திய தேசிய கொடியை எரிக்கச் சொல்லி இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் அவர்கள் கைதாக காரணமாக இருந்துவிட்டு பிறகு மக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சியில் இந்திய தேசிய கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு நிகழ்ச்சி நடத்தியவர். இது குறித்த குற்றவுணர்ச்சியெல்லாம் உங்களுக்கு உண்டா தியாகு? இது குறித்து தமிழ் தேசிய இயக்கங்களுக்கு வேண்டாம், கேள்வி எழுப்பிய அக்கா தாமரைக்காவது நீங்கள் விளக்கம் கூறியது உண்டா??

இறுதியாக ஒன்று. பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்துவதை ‘கோவில் விளக்கில் பீடி பற்ற வைப்பது போல’ என்று சொல்கிறீர்களே தியாகு, இதே பிரபாகரன் படத்தை இப்படி தமிழகமெங்கும், மேடையெங்கும் வைக்க சீமான் எத்தனை எதிர்ப்பை சமாளித்து வெற்றி கண்டார் என்று உங்கள் உள்ளம் அறிந்திருக்கும்தானே. நீங்களெல்லாம் பிரபாகரன் பெயரையும், படத்தையும் பயன்படுத்துவதால் வராத இழிவா வந்துவிடப் போகிறது? ஒழுக்கமான பண்பும், மிகச்சிறந்த ஒழுக்கம் கொண்ட இராணுவத்தையும் கொண்ட அந்த தலைவனின் பெயரையும், படத்தையும் உங்களை போல கட்டிய மனைவியிடம் கூட உண்மையாக நடந்து கொள்ள முடியாத நபர் பயன்படுத்துவதைக் காட்டிலும் கேவலம் இல்லை தியாகு.

தமிழ் தேசியத்தை அடுத்த நிலைக்கு எப்படி நகர்த்திச் செல்வது என்று இந்த இளையதலைமுறை பிள்ளைகள் அறிவார்கள். அதனை படிப்பறை வஸ்துவாக வைத்துக்கொண்டு திராவிடத்திற்கு வால் பிடித்துக் கொண்டிருந்த அறிவுசீவிகள், ஈ.வெ.ரா புகழ் பாடுவதோடு நிறுத்திக் கொள்வது நலம்.

– கணியன் பூங்குன்றன்

நாம் தமிழர் கட்சி