இறுதி எச்சரிக்கை விடுத்த பாலாவுக்கு பாரதிராஜாவின் கதாசிரியர் பதிலடி!

“என்னைப் பற்றி அவதூறாக பேசியுள்ள இயக்குனர் பாலா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்” என்று பாரதிராஜா இயக்கும் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதாசிரியர் ரத்னகுமார் கூறினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘கைரேகைச் சட்டம்’ என்ற ‘குற்றப்பரம்பரை’ சட்டம் பற்றியும், அதனை எதிர்த்து உசிலம்பட்டியை அடுத்துள்ள பெருங்காமநல்லூரில் நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு பற்றியும் ‘குற்றப்பரம்பரை’ என்ற பெயரில் ஒரு படம் எடுக்க நினைத்தார் பாரதிராஜா. ஆனால் அவரால் அது முடியாமல் போனது.

இந்நிலையில் இதே பிரச்சனையை மையமாக வைத்து, இதே தலைப்பில் பாலா ஒரு படம் எடுக்கப்போவதாக ஊடகங்களில் தகவல் கசிந்ததும், பாரதிராஜா சில நாட்களுக்குமுன் அவசர அவசரமாக ‘குற்றப்பரம்பரை’ படத்துக்கு பெருங்காமநல்லூரில் பூஜை போட்டார். இந்த படவிழாவில் பாலா பற்றி இப்படத்தின் கதாசிரியர் ரத்னகுமார் மிகவும் தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ‘குமுதம்’ வார இதழில், ரத்னகுமாரின் பேட்டி ‘கதை திருடி வேலா! வேடிக்கை பார்க்கும் பாலா!’ என்ற தலைப்பில் வெளியானது.

இதனால் ஆவேசம் அடைந்த பாலா, செய்தியாளர்களைச் சந்தித்து, “குற்றப்பரம்பரை என்பது நடந்த வரலாறு. இதை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம். நான் மட்டும்தான் படமாக்குவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அப்படிச் சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. பாரதிராஜா எடுக்கும் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதையும், நான் இயக்கப்போகும் புதிய படத்தின் கதையும் வேறு வேறு. தலைப்பும் வேறு வேறு. எனவே, பாரதிராஜா, ரத்னகுமார் ஆகிய இருவரும் என்னைப் பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு மேலும் அவர்கள் ஒரு வார்த்தை இது சம்பந்தமாக என்னைப் பற்றி பேசினால், அது அவர்களுக்கு நல்லதல்ல. இது என் இறுதி எச்சரிக்கை” என்று காட்டமாக கூறினார்.

பாலாவின் இந்த இறுதி எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘குற்றப்பரம்பரை’யின் கதாசிரியர் ரத்னகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“குற்றப்பரம்பரை’ என்னுடைய கதை தான். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.

“குற்றப்பரமபரை’ கதையை எழுதி நான் பாரதிராஜாவிடம் கொடுத்தபோது, இதை படமாக எடுக்க பெரிய பட்ஜெட் தேவைப்பட்டதால், அந்த படத்தை எடுக்க காலதாமதம் ஆனது. அதன்பிறகு தயாரிப்பாளர் கிடைத்தவுடன் அந்த படத்தை எடுக்க தொடங்கியபோது, வேல ராமமூர்த்தி கதை விவாதத்தில் இணைந்தார். பிறகு படம் மீண்டும் கைவிடப்பட்டபோது, பிரிந்து சென்ற வேலராமமூர்த்தி, நான் சொன்ன கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் தொகுத்து  ‘கூட்டஞ்சோறு’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டார். அப்போதே அவரிடம் இது குறித்து கேட்டேன். மழுப்பினார். நானும் சரி போகட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் அதன்பிறகு அதே ‘கூட்டாஞ்சோறு’ என்ற புத்தகத்தை ‘குற்றப்பரம்பரை’ என்று தலைப்பு மாற்றி வெளியிட்டுள்ளார். இதை தான் பாலா படமாக எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.

’குற்றப்பரம்பரை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன். இது ஒன்று போதும், இது எனது கதை என்று நிரூபிப்பேன். இது குறித்து எழுத்தாளர் சங்கத்தில் பாலா மற்றும் கதாசிரியசிரியர் வேல ராமமூர்த்தி ஆகியோர் மீது நான் புகார் கொடுத்துள்ளேன். அவர்கள் இருவரையும் விசாரணைக்காக அழைத்தால், அவர்கள் வர மறுக்கிறார்கள். தற்போது எனக்கு கடைசி எச்சரிக்கை விடுத்துள்ள பாலா, என்னைப்பற்றி அவதூறாக பேசியுள்ளார். இதற்காக அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வது குறித்து பிறகு அறிவிப்பேன்.

ஆனால், குற்றப்பரம்பரை கதை என்னுடையது என்பதை நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிரூபிப்பேன்” என்றார் ரத்னகுமார்.