பாரதிராஜா – பாலா மோதலுக்கு பின்னால் ஒளிந்திருப்பது இதுதான்!

‘குற்றப்பரம்பரை’ படத்தை மையமாக வைத்து இயக்குனர் பாரதிராஜாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையிலான மோதல் முடிந்தபாடில்லை. பாரதிராஜா, அவர் இயக்கும் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதாசிரியர் ரத்னகுமார் ஆகியோர் ஒரு பக்கமும், பாலா, அவர் இயக்க இருக்கும் புதிய படத்தின் கதாசிரியர் வேல.ராமமூர்த்தி ஆகியோர் மறுபக்கமும் நின்று மோதுவது தொடர்கதை ஆகியிருக்கிறது.

இது இருதரப்பு படைப்பாளிகளுக்கு இடையிலான மோதல் இல்லை என்றும், தேவர் சமூகத்துக்குள் இருக்கும் இரண்டு உட்பிரிவுகளுக்கு இடையிலான மோதல் தான் படைப்பாளிகளுக்கு இடையிலான மோதலாக முகமூடி அணிந்து வெளிமுகம் காட்டுகிறது என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர் எவிடென்ஸ் கதிர் கூறியிருப்பது:

“பாரதிராஜா போன்ற ஒரு சாதி வன்மம் பிடித்த ஆளை சினிமாவில் பார்க்க முடியாது என்று கருதுகிறேன். ‘நான் தேவர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன்’ என்கிறார்.

எப்படித்தான் இந்த இளையராஜா இத்தனை ஆண்டுகள் அவரோடு குப்பை கொட்டினார் என்றே தெரியவில்லை.

பாலாவுக்கும் பாரதிராஜாவுக்கும் என்ன பிரச்னை? வெறி சிம்பிள்.

தேவர் சமூகத்தில் குற்றப்பரம்பரை என்று ஒடுக்கப்பட்ட பிரிவு பிரமலை கள்ளர். இந்த சமூகத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. ஆனால், பாலா தேவர் சமூகத்தில் வேறு பிரிவு.

இதை அடிப்படையாக கொண்டுதான் பாரதிராஜா வன்மம் கொள்ளுகிறார். ‘என் சாதி படத்தை நான்தான் எடுப்பேன். வேறு யாரும் எடுக்க கூடாது’ என்கிற சாதி பாசம்தான். வேறென்ன?

அது சரி பாரதிராஜா…! இந்த படத்தில் முதல் காட்சியில் கும்பிட்டபடி மேலே வரும் உங்கள் கைகளின்போது ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று குரல் வருமா? அல்லது ‘என் இனிய பிரமலை கள்ளர் சமூகத்து மக்களே’ என்று குரல் வருமா?”