“என் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்”: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!

“இந்த ஆண்டு என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்” என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, உடல்நலக் குறைவு மற்றும் மாரடைப்பு காரணமாக கடந்த 5ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. தமிழகத்தில் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாள். வழக்கமாக ரஜினிகாந்த் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் பலரும் போஸ்டர்கள் அடித்து வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.

ஆனால், ஜெயலலிதா காலமானதை ஒட்டி, இந்த ஆண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், சுவரொட்டிகளை தவிர்க்குமாறும் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, அதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருக்கிறார். ‘2.0’ திரைப்படம் 2017ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.