நடிகர் விஜய் குடும்பத்தில் தனுஷ் ரசிகர்கள்!

தனுஷ் நடிப்பில், இயக்குனர் வெற்றி மாறன் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கொடி’. தீபாவளிக்கு திரைக்கு வரும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், இதன் இயக்குனர் துரை செந்தில்குமார் பேசியதாவது:

இப்படத்தில் பல அரசியல் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரிடம் நான் முதலில் கதை சொல்லச் சென்றபோது கதையை கேட்டவர், “இப்படத்தில் நான் நடிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டார். சிறிதுநேரம் கழித்து என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு “நான் இந்த படத்தில் நடிக்கிறேன்” என்று கூறினார்.

“என்னுடைய இயக்கத்தில் மட்டும் தான் நடிப்பேன்” என்று முதலில் கூறியவர், வீட்டிற்குச் சென்று இப்படத்தை பற்றி கூறியதும், அவரது மனைவி ஷோபா மேடம் அவரிடம், “தனுஷ் படத்தில் நடிப்பது மிகப் பெரிய வாய்ப்பு. அதில் நீங்கள் எப்படி நடிக்க மறுக்கலாம்? நாங்கள் அனைவரும் தனுஷின் ரசிகர்கள். நீங்கள் கண்டிப்பாக ‘கொடி’ படத்தில் நடிக்க வேண்டும்” என்று சொன்னதாக கூறினார்.

k4

நான் எப்போது கதை எழுதினாலும் என்னுடைய மனதில் தனுஷ் சார் தான் வருவார். அவர் தயாரித்த இரண்டு திரைப்படங்களை நான் இயக்கிவிட்டேன். இப்படத்தை அவரை வைத்து இயக்கியுள்ளேன். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு சிறந்த இசையை கொடுத்துள்ளார். அவருடைய வீட்டிற்குச் சென்றாலே ஒரு நல்ல மனநிலை வரும்; அந்த இடத்தில் நமக்கு நல்ல இசை கிடைக்கும் என்று தோன்றும். அதேபோல் தான் அவருடைய ஸ்டூடியோவும். எனக்கு நல்ல சூழலையும், நல்ல இசையையும் தந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி.

இவ்வாறு துரை செந்தில்குமார் பேசினார்.