ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்: மீட்புப்பணிகள் தீவிரம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேங்கைக்குறிச்சி அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கலாமேரி. இவர்களுக்கு புனித் ரோஷன் (4), சுஜித் வில்சன் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களது வீட்டின் அருகே விவசாய நிலத்தில் சாகுபடி செய்வதற்காக ஏழு ஆண்டுகளுக்குமுன் 650 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. அதில் போதுமான அளவு நிலத்தடி நீர் கிடைக்காததால், அதன் மேல்பகுதியில் கற்கள், மண்ணைப் போட்டு மூடிவிட்டனர். தற்போது அந்த இடத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு, சுமார் ஒன்றரை அடி உயரத்துக்குச் செடி வளர்ந்துள்ளது.

இதற்கிடையே, அண்மையில் பெய்த கனமழையால் மக்காச்சோளம் பயிரிட்டிருந்த வயலில் நீர்தேங்கி, ஏற்கெனவே ஆழ்துளைக் கிணறு அமைத்திருந்த இடத்தில் மண் உள்வாங்கியது. எனினும், சுற்றிலும் மக்காச்சோளச் செடிகள் நன்கு வளர்ந்திருந்ததால் இது யாருக்கும் தெரியவில்லை. இந்தச் சூழலில் புனித் ரோஷனும், சுஜித் வில்சனும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் ஆழ்துளைக் கிணறு அமைத்த இடத்தில் ஏற்பட்டிருந்த பள்ளத்துக்குள் சுஜித் வில்சன் விழுந்தார். சுஜித்தின் அலறலைக் கேட்டு தாய் கலாமேரி அங்கு ஓடிவந்தார். அதற்குள்ளாக சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் 15 அடி ஆழத்துக்கு கீழே சென்றுவிட்டார்.

தகவலறிந்த மணப்பாறை தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி, சி.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எஸ்.பி ஜியாவுல் ஹக், தீயணைப்புத் துறை துணை இயக்குநர்கள் சரவணக்குமார் (மதுரை), பிரியா ரவிச்சந்திரன் (திருச்சி), திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி உள்ளிட்டோரும் அங்கு விரைந்தனர். ஆழ்துளைக் கிணற்றிலிருந்து பக்கவாட்டில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி, அதன்வழியாக சிறுவனை மீட்க முயற்சித்தனர். பாறை குறுக்கிட்டதால் பள்ளம் தோண்டுவது நிறுத்தப்பட்டது. அந்த சமயத்தில் சிறுவன் சுஜித் சுமார்28 அடி ஆழத்துக்கு கீழே சென்றுவிட்டார். ஆனால், 12 அடி ஆழத்துக்குப் பிறகு பாறை தென்பட்டதால், தொடர்ந்து பள்ளம் தோண்டுவதில் சிரமம் ஏற்பட்டது.

பல்வேறு மீட்புக் குழுவினர்இந்தச் சூழலில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்பதில் வல்லுநர்களாக கருதப்படும் மதுரை மணிகண்டன், திருச்சி டேனியல், கோவை டாக்டர் தர், நாமக்கல் டாக்டர் வெங்கடேசன், கொத்தமங்கலம் வீரமணி, தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள் உள்ளிட்டோர் தங்களது குழுவினருடன் அங்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஒரு கையில் கயிற்றால் சுருக்கு போட்டு, மற்றொரு கையிலும் சுருக்கு போட்டு குழந்தையை தூக்க முயற்சித்தனர்.

இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, மாற்று நடவடிக்கையாக பக்கவாட்டில் மீண்டும் பள்ளம் தோண்டும் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன. அப்போது பாறைகள் கடினமாக இருந்ததால் ஏற்பட்ட நில அதிர்வில், 28 அடி ஆழத்தில் இருந்த குழந்தையின் கையில் போடப்பட்டிருந்த சுருக்குக் கயிறு விலகியதுடன், பக்கவாட்டுப் பிடிமானமும் இழந்து குழந்தை 68 அடி ஆழத்துக்குச் சென்றது.

அதைத்தொடர்ந்து, நவீன கருவி மூலம் குழந்தையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, எதிர்பாராமல் மண் சரிந்து குழந்தையின் தலையில் சுமார் ஒரு இஞ்ச் உயரத்துக்கு விழுந்தது. இதையடுத்து சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

பின்னர் காலை 6 மணிக்கு பிறகு பல்வேறு குழுக்கள், பல்வேறு வகையான கருவிகளுடன் வந்து குழந்தையை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றது. தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு, மாநில பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு, என்எல்சி, ஓஎன்ஜிசி குழுவினரும் அதிநவீன கருவிகளுடன் அங்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். குழந்தையை மீட்க தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கித் தவிக்கும் குழந்தை சுஜித் வில்சனை உயிருடன் மீட்க வேண்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மத மக்களும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.