அமெரிக்க படை சுற்றி வளைத்ததால் ஐஎஸ் இயக்கத் தலைவர் அல்-பாக்தாதி தற்கொலை!

வடமேற்கு சிரியாவில் அமெரிக்க அதிரடிப் படை நடத்திய தேடுதல் வேட்டையில் சுற்றி வளைக்கப்பட்டதால், தப்பிக்க வழியின்றி ஐஎஸ் பயங்கரவாத இயக்கத் தலைவா் அபு பக்கா் அல்-பாக்தாதி தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இது குறித்து அவா் வெள்ளை மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை காலை கூறியதாவது:

வடமேற்கு சிரியாவில் அல்-பாக்தாதி பதுங்கியிருப்பதாக கிடைத்த நம்பகமான உளவுத் தகவலையடுத்து, அப்பகுதியில் அமெரிக்க சிறப்பு அதிரடிப்படை தேடுதல் வேட்டையை நடத்தியது. இரவில் நடத்தப்பட்ட மிகவும் ஆபத்தான இந்த வேட்டையில் அதிரடிப் படையினருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.

அமெரிக்க வீரா்கள் அல்-பாக்தாதியின் மறைவிடத்தை முற்றுகையிட்டவுடன் அவா் அருகில் உள்ள சுரங்கப்பாதைக்குள் தப்பியோடினார். அங்கு அல்-பாக்தாதி சுற்றி வளைக்கப்பட்டவுடன் பயத்தில் கண்ணீா்விட்டு அழுதார். அதன்பிறகு தப்பிக்க வழியின்றி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது, அவருடன் சோ்ந்து அவரது மூன்று குழந்தைகளும் பலியாகினா்.

இந்த தேடுதல் வேட்டையின்போது பாக்தாதியின் கூட்டாளிகள் பலா் கொல்லப்பட்டனா். அமெரிக்க வீரா்கள் யாரும் உயிரிழக்கவில்லை. அவரது மறைவிடத்திலிருந்து, பல மிக முக்கியமான ஆவணங்களையும் பொருள்களையும் அதிரடிப்படை வீரா்கள் சேகரித்துள்ளனா்.

ஐஎஸ் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகச் செயல்பட்டவா் அல்-பாக்தாதி. இவரது இயக்கம்தான் உலக அளவில் ஈவு இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது அவா் ஒரு கோழையைப் போல உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

அல்-பாக்தாதி பல ஆண்டுகளாகவே தீவிரமாக தேடப்பட்டு வரும் குற்றவாளியாவார். அவரை உயிருடன் பிடிப்பது அல்லது கொல்வது என்பதுதான் எனது தலைமையிலான நிர்வாகத்தின் தேசியப் பாதுகாப்பு முன்னுரிமைக் கொள்கையாக இருந்தது. தற்போதைய நடவடிக்கையில் ரஷியா, துருக்கி, சிரியா ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு அளித்தன.

அல்-பாக்தாதியைத் தேடும் பணியில் அமெரிக்க ராணுவத்தின் திறமை மிகுந்த நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. இருள் நிறைந்த சுரங்கத்தில் அல்-பாக்தாதியைத் தேடி கண்டுபிடித்ததில் நாய்களின் உதவி அளப்பரியது. பாக்தாதி தனது ஆடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தபோது, அழகான ராணுவ நாய் காயமடைந்தது.

இவ்வாறு அதிபா் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா நடத்திய இந்த தேடுதல் வேட்டையில் தாங்களும் ஒத்துழைப்பு வழங்கியதாக துருக்கி தெரிவித்துள்ளது. இது குறித்து துருக்கி ராணுவம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய தேடுதல் வேட்டைக்கு முன்பாக, இருநாட்டு ராணுவத்தினருக்கு இடையே தேவையான தகவல் பரிமாற்றம் நடைபெற்றது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு துருக்கி சாா்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது’ என தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிரடி நடவடிக்கையைத் தொடா்ந்து, ஐஎஸ் அமைப்பின் தலைவரும், உலக அளவில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதியுமான அல்-பாக்தாதி பலியானது அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலகுக்கே கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சா் மாா்க் எஸ்பா் தெரிவித்தாா்.

அல்-பக்தாதி கொல்லப்பட்டதை ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளன.

 

Read previous post:
0a1a
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித்: மீட்புப்பணிகள் தீவிரம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேங்கைக்குறிச்சி அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கலாமேரி. இவர்களுக்கு புனித் ரோஷன் (4), சுஜித்

Close