“டாஸ்மார்க் பாரிலும் தேசிய கீதம் கட்டாயம்னு ஆக்கணும்!”

ரொம்ப நாளைக்குப் பெறவு வினவுக்காரவுக, “அண்ணாச்சி, உச்சநீதிமன்றம் தேசிய கீதம் தீர்ப்பு படிச்சிருப்பீங்களே, எழுதுறீங்களா”ன்னு கேட்டாக.

ஏற்கனவே எத்தனையோ தபா எழுதலாம்னு கேட்டப்போ, அதெல்லாம் உங்க காமடிக்கு செட்டாகாது, சீரியஸா எழுதற விசயமுன்னு சொன்னீகளே, இதுவும் அப்படிப்பட்டதுல்லான்னு கேட்டேன்.

“இல்லை அண்ணாச்சி, இது சிரிச்சுக்கிட்டே எழுதுற விசயம், சிரிங்க”ன்னு டக்குனு போன வைச்சுட்டாங்க.

எக்குத்தப்பா ஏதாவது எழுதி, நம்மள மாட்டுறாங்களோன்னு ஒரு சம்சயம் (சந்தேகம்) மனசிலுண்டு. சரி, வுடுங்க பாத்துக்கிடலாம். காந்தியே செத்துட்டாரு, சிவாஜிக்கே சில வெச்சுட்டாங்க!

நோட்டுக்கு வேட்டு வெச்சுட்டாரு மோடி, அவரு தாடிக்கேத்த கேடின்னுட்டு தேசமே கானாவுல அறம் பாடிக்கிணு கீறப்போ, உச்சநீதிமன்றம் இப்புடி ஒரு தீர்ப்ப அவுத்து வுட்டுறுக்கு!

நவம்பருல “நோட்டெல்லாம் செல்லாது”ன்னு பத்து இலட்ச ரூபா கோட்டு கனவான் சொன்னப்பவே, நம்ம சேட்டன் கவுதம் வாசுதேவ மேனன் (பெயரை சின்னதா வைக்க கூடாதா ராசா?) உசாரா, விரல்லயே வித்தை காட்டுற தம்பி சிம்பு படத்தை ரிலீஸ் பண்ணாம பூட்டி வைச்சிருக்கணும். ஆசை யார வுட்டுதுங்குற கணக்கா படத்த வுட்டாக. மல்டி பிளக்ஸ்ல ஆரம்பிச்சு மகாலெட்சுமி தியேட்டர் வரைக்கும் ஆளில்லாம வாச்சுமென்னெல்லாம் அன்னைக்கு ஒரு கட்டு கணேஷ் பீடியை அதிகம் பிடிச்சாகளாம்.

கபாலியில 1000, 500-ன்னு ஏமாந்தப்பவே நம்ம பயலகளெல்லாம், இனி தமிழ் ராக்கர்ஸ்தான் நம்மோட தியேட்டர்னு சுடுகாட்டுல சத்தியம் எடுத்துட்டு, அன்னாடம் 12 மணி ராவுல டவுண்லோட போட்டு விட்டுட்டானுவ. இதுல தியேட்டர்ல தேசிய கீதம் பாடு, இல்லேன்னா ஓடுன்னு சொன்னா எவம்டே சினிமா பாக்க வருவான்?

ஏம்பா, நீதிபதிகளா இந்த மிஸ்ரா, ராய் இவுகளெல்லாம் எடுக்க மாட்டோம்ன்னு ஒரு ஃபத்வா போட்டா என்னப்பா? ஒருத்தரு கோவில்ல வேட்டிய கட்டு, தாவணிய போடு, இல்லேன்னா உள்ள உடமாட்டோம்குறாரு. இன்னொருத்தரு அய்யமாரத் தவிர மத்தவனெல்லாம் கருவறைக்குள்ள வராதங்குறாரு. வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்னு வடிவேலு அண்ணாச்சி சொன்னா அதுல சிரிக்கவும் சிந்திக்கவும் நிறைய இருக்கு. ஆனா, உயந்த சாதிக்காரவுக கொலை செய்ய மாட்டாங்கன்னு வெண்மணியிலேந்து, பன்வாரி தேவியோட ராஜஸ்தான் வரை சொல்ற நீதிபதிய பாத்தா அதுல விசமும் வில்லங்கமுமுல்லா நெம்பி வழியிது!

தீபக் மிஸ்ரா, அமிதவ் ராய்ன்னு உச்சியில நீதிய பதுக்கி வச்சுருக்கிற இரண்டு பேருதான் இப்ப தியேட்டர்ல ஜனகனமண வேணுமுன்னு ஒத்தக்கால்ல உத்தரவு போட்டுருக்காக. தீர்ப்பு சொல்ற அன்னைக்கு அவங்க வீட்டு குழந்தைங்க ஏதும் மோடி – அமித்ஷாவ பாத்து மிரண்டு கத்தி ஐயாமாரு மூட அவுட்டாக்கிட்டாங்களோ தெரியல.

அந்த உத்தரவுல இன்னா சொல்லிக்கீறாங்கன்னா:

  1. சினிமா படத்துல ஆகாசவாணிக்கு முன்னாடி தேசிய கீதத்த போடு
  2. கீதத்த போடும்போது தேசியக் கொடிய காட்டு
  3. பாட்டு கேக்கறச்சே பாக்குற ஜனமெல்லாம் அட்டென்சுல நிக்கணும்
  4. பாட்டு ‘போரு’ன்னு எவனாவது தம்மடிக்க போனாலும் போவான், அதுனால பாட்டு போடும்போது கதவை மூடு
  5. ஏற்கனவே பாரத மாதாவ கூறு போட்டு வுத்ததால, தேசிய கீதம் இசைக்கிறச்சே நீ வேற புதுசா வெளம்பரத்த போடாத.

இதை தியேட்டரு ஓனருங்க செய்யலேன்னா நீதிமன்ற வழக்கு போடுவோமுன்னு மிஸ்ராவும், ராயும் மாட்ரிக்ஸ் படத்துல வாற ஏஜெண்ட் ஸ்மித் கணக்கா கண்டிசனாக சொல்லிட்டாங்க.

ஏற்கனவே மகாராஷ்டிர சட்டசபையில பாரதமாதா ஜெய் சொல்லலேன்னு ஒரு பாய வெளியேத்தி அலப்பறை பண்ணுன பா.ஜ.க-மாரு இதுதான் சாக்குண்ணு உடனே நடைமுறைபடுத்துரோம்னு துள்ளிட்டாய்ங்க!

ஏ.டி.எம்லேயும், பேங்குலயும் ஜனமான ஜனம் மோடி வரட்டும் பாத்துக்குறோம்னு குதிச்சப்போ, எல்லையில வீரனுங்க சாவுறபோது ஏ.டி.எம்ல செத்தா என்னடான்னு கல்யாணராமன்லேர்ந்து, சுமன் சி ராமன் வரைக்கும் சாபம் மேல சாபம் போட்டு மெய்யாலுமே அது பலிச்சும் போச்சு!

இப்ப தியேட்டர்ல ஜயஹே பாடணும்னு ஒரு விவாதத்தை ஏத்தி விட்டா, ஃபேஸ்புக்குக்கும் வாட்ஸ்அப்க்கும் வாக்கப்பட்ட பயலுவ அதையே பேசிப் பேசி, நோட்டு விவகாரத்தை மறந்துருவாணுகள்ளா? ஐடியான்னா அது அமித்ஷாம்தாடே!

போதாக்குறைக்கு கலிங்கப்பட்டி ஜமீனுகிட்ட மைக்க கொடுத்துட்டா நாடு பூரா பதினெட்டு பட்டிக்கும் தேசிய கீதத்த வகுப்பெடுத்து வாய்க்கால் வெட்டி அதுல கப்பலே உடுவாருல்லா! அப்பாலிக்கா அந்த கப்பல்ல ஈழம் வேழம்ணு முழங்குனாருன்னா, பெறவு எதுக்குடே தியேட்டருக்கு போவணும்! ஆதித்யா சானலுக்கே நம்ம வைகோ அண்ணாச்சிதாம்டே போட்டி!

மோடிக்கு வெற்றி, செல்லாத நோட்டுக்கு மக்களோட ஆதரவுன்னு ஜூ.வி-லேர்ந்து தந்தி டி.வி வரைக்கும் சளைக்காம பேசுற பயலுவ, இனி ஜனகனமணவ வைச்சு கம்பெனி ஆர்ட்டிஸ்ட்ட கத்த வைச்சு ஒரு மாசம் ஓட்டுவாணுகள்ளா!

என்ன இருந்தாலும் தேசம்னாலும், தேசபக்தின்னாலும், தேசிய கீதம்னாலும் சும்மாவாடே! இவுணக பேலுறதும் மோளுறதும்  அடைச்சுப் போச்சுன்னா, பாரத மண்ணே வணக்கமுன்னு வர்ற ஆர்.எஸ்.எஸ் காரனுவுகளை, இல்லை சமூக ஆர்வலருண்ணு காவி ஜட்டிய மறைச்சுக்கிணு வாரவனை சாக்கடையில கைய வெக்கச் சொல்லு பாப்போம்!

பாதாளச் சாக்காடையில இறங்கி ஒரு தபாவாச்சும் முங்கி எந்திரிக்கிறவன்தான் தேசபக்தன்னு ஒரு சட்டம் போட்டா என்னடே நடக்கும்? தந்தி டி.வி பாண்டே பய சிட்னிக்கு ஓடிருவான். புதிய தலைமுறை பச்சமுத்து பாங்காக் பறந்துருவான். பா.ஜ.க எச்ச ராஜா பெல்ஜியத்துக்கு கிளம்பிருவான். மோடி, அமித்ஷாவெல்லாம் என்னத்துக்கு தூரமான்னு லாகூருலயே குதிச்சிருவான்.

ஏலே கத கேக்குற தம்பிகளா, நாஞ் சொல்லுறது கத இல்லடே. பர்மாவுல அந்தக் காலத்துல துப்புறவு தொழிலாளிங்க ஸ்டிரைக் பண்ணுனப்ப, அரசாங்கமே விரட்டியும் கிளம்பாத செட்டியாருங்கல்லாம், இனிமே அவங்க அவங்க ஆயை பாக்கெட்டுல கட்டி ரங்கூன வுட்டு தூரமா போட்டுட்டு வரணும்னு அரசாங்கம் சொன்னப்போ, ஆள வுடுங்கன்னு சென்னைக்கு கப்பலு ஏறிட்டாங்கடே.

சரி அத வுடு, இப்ப என்ன…? தேசிய கீதம் பாடணும்.

பாரத மாதான்னா யாரு, வேளாங்கண்ணி மாதிரி வடக்கத்திய மாதாவான்னு கேக்குற பயலுக கூட இன்ன தேதிக்கு சன்னி லியோன, டெஸ்க்டாப்ல கோயில் கட்டி கும்புடுதாணுக! அதான் நம்ம மிஸ்ராவும், ராயும் ரோசனை பண்ணி தேசத்துக்கு ஏதாச்சும் செஞ்சு கீதத்தை செஞ்சுரணும்னு முடிவு பண்ணிட்டாக.

சரிங்க ஆபிசர். எதுக்கு அத தியேட்டரோட பூட்டணும். பூரா இடங்கள்ளயும் திறந்து வுட்டா பெறவு தேசபக்தி பூத்துக் குலுங்கும்லா? அதுக்குத்தான் ரொம்ப ரோசனை பண்ணி சில ஐட்டத்தை சொல்லிட்டு போறேன், பாத்து செய்யுங்க!

பாயிண்ட் நம்பர் 1: அப்பல்லோ தொட்டு அரசாங்க ஆஸ்பத்திரி வரை எல்லா ஆபரேசன் தியேட்டர்லயும் (இதுவும்தான் தியேட்டர்தாம்டே) கத்திய தொடுறதுக்கு முன்னாடி ஜனகனமண பாடணும்னு ஆக்கணும். சரி எப்படியும் நாம பொழைக்க மாட்டோம்னு நினைக்கிற நோயாளியெல்லாம் இதுதான் கிளைமாக்ஸ்னு புரிஞ்சுகிட்டு புண்ணியமா போய்ச் சேந்துருவான்.

பாயிண்ட் நம்பர் 2: ராவுல 9 மணிக்கு தம்பி பாண்டேவும், அண்ணே ஆர்னாப்பும் டி.வியில கத்துற விவாதத்த தேசிய கீதத்த போட்டு ஆரம்பிச்சா ரெண்டு பயபுள்ளைகளுக்கும் வேலை ஈசியா முடிஞ்சிரும். பேச வராவங்கள்ல யாரு பாடுறா, யாரு வாயசைக்கிறா, யாரு ஒப்பேத்துறான்னு கண்டுபிடிச்சா, கிளைமேக்சுல தேசிய கீதம் தெரியாத நீதான தேசத்துரோகின்னு அதுக்கு ஆதாரமா புட்டேஜ்ஜ போட்டா போச்சு!

பாயிண்ட் நம்பர் 3: ரேசன் கடையில தேசிய கீதத்த பாடிக் காமிச்சாத் தான் இலவச அரிசின்னு ஒரு அறிவிப்பு போட்டீங்கன்னா, அடடே… மானியத்த வெட்டுறதுக்கு இப்புடி ஒரு ரோசனையான்னு உலக வங்கிக்காரனே ஒரு ஆச்சரியக்குறியோட வாயப் பொளப்பானுகல்லா!

பாயிண்ட் நம்பர் 4: டாஸ்மாக் பாருல ஒரு மணிநேரத்துக்கு ஒரு வாட்டி தேசிய கீதம் போடணும். அத போடும்போது ஸ்டெடியா நின்னா ஒரு குவார்ட்டர் இனாம்னு ஒரு அறிவிப்பு போட்டா, மொத்த தமிழ்நாடே ஒரு ராத்திரியிலேயே தேசிய கீதத்த கரைச்சு குடிச்சு இந்தியாவுக்கே முன்மாதிரியா ஆயிருமுல்லா! பெறவு குடிச்சுட்டு சீனு போடுறவனெல்லாம் ஒரு குவார்ட்டர் இனாம்ங்கிறத மனசுல வெச்சுகிட்டு பவிசா நடப்பாம்லா!

பாயிண்ட் நம்பர் 5: இந்தியா ஃபுல்லா எல்லா வூட்டுங்கள்ளேயும் தினமும் ஒரு வாட்டி அய்யருமாரு காயத்ரி மந்திரம் மாதிரி தேசிய கீதம் பாடணும். யாரு இத பாடாம டபாய்க்கிறாங்கண்ணு ஒரு சேட்டிலைட் கோட, 2000 ரூபாய் நோட்டுல போட்ட மாதிரி, ஓட்டுக்குள்ளயோ கூரைக்குள்ளயோ போட்டா டேட்டா பேசுல டிமிக்கி குடுக்குறவனுங்க தெரிஞ்சுருவாணுங்க. அப்பால மாசத்துக்கு ஒரு தபா இப்புடி தேசிய கீதம் பாடாத வீடுங்கள்ள திருடங்க புகுந்து திருடலாம், போலீசு வராது, கேஸ் ஆகாதுன்னு ஒரு அறிவிப்பு கொடுத்துப் பாரு! பெறவு 30 நாட்கள்ள தேசிய கீதத்த பாராயணம் செய்வது எப்படின்னு புக்லேர்ந்து, டிரைனிங் சென்டர் வரை பிசினஸ் பிச்சுகிடுமுல்லா!

பாயிண்ட் நம்பர் 6: ஒரு குடும்பத்துல அத்தனை பேரும் தேசிய கீதத்த சரியா பாடிக் காம்பிச்சா அவுங்க ஆதார் கார்டுல ஒரு ஸ்டார ஏத்தி, இந்த ஸ்டார் இருந்தா சரவணா ஸ்டோர்லேந்து, நல்லி குப்புசாமி வரை எல்லாக் கடைங்கள்ளயும் ஒரு சரோஜாதேவி சோப்பு டப்பா இனாமுன்னு சொன்னா இன்னா நடக்கும்? பெறவு டப்பா பத்தலேன்னு சீனாவுலேந்துதான் இறக்கணும்.

பாயிண்ட் நம்பர் 7: ஆன்சைட் போக விரும்புற நம்ப ஐ.டி தம்பிமாரு பத்து கிராமத்துல நூறு பேருக்கு தேசிய கீதத்த கத்துக் கொடுக்கணும். கொடுத்தா அமெரிக்கா நிச்சயமுன்னு ஒரு அறிவிப்பு போடு! பயபுள்ளைக ஃபேஸ்புக்க காலி பண்ணிட்டு கிராமம் கிராமமா சுத்துவாணுகல்லா!

பாயிண்ட் நம்பர் 8: மாட்டுக்கறி துன்னுறவணுங்க ஒரு நாளைக்கு அஞ்சு வாட்டி தேசிய கீதத்த பாடணும், துன்னாதவனுக்கு கிடையாதுன்னு சொல்லிப் பாரு! வேற வழியில்லாம நாட்டுக்காக மாட்ட தியாகம் பண்ணுவாங்க. நாமளும் நாட்டயும், மாட்டயும் காப்பாத்துன மாறி ஆச்சுல்லா?

ஃபைனல் பாயிண்ட் நம்பர் 9: எல்லாரு வூட்டுலயும் படுக்கும்போது கண்டிசனா தேசிய கீதம் பாடணும்னு அதுக்கும் சாட்டிலைட் கோடு போட்டு, பாடலேன்னா டி.வி கட் பண்ணிருவோம்னு சொல்லு! பயபுள்ளைக கந்தசஷ்டிக் கவசம் மாறி பிச்சு மேஞ்சுருவாங்கல்லா? சீரியலு பாக்காம நம்ம மாதர் குலங்க வாழ முடியாதுல்லா?

 காளமேகம் அண்ணாச்சி

Courtesy: vinavu.com

 

Read previous post:
0a1b
தலித்துகளாக நாம், வாழ்க்கையாக பன்றி, அரசாக தேசிய கீதம்…!

Fandry என ஒரு மராத்தி படம். அற்புதமான படம். நம்ம 'அழகி' படம் போல் பால்ய கால காதல்தான். ஒரே வித்தியாசம், அது பேசும் சாதி ஒடுக்குமுறையின்

Close