“தயவுசெய்து என்னை வேலை செய்ய விடுங்கள்”: மேடையில் சிவகார்த்திகேயன் கண்ணீர்!
24 ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்க, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ரெமோ’.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, நன்றி விழா நடைபெற்றது. ‘ரெமோ’ படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ், யோகி பாபு, நடிகை சரண்யா பொன்வண்ணன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் இப்படத்தின் வினியோகஸ்தர்கள் இதில் கலந்துகொண்டார்கள்.
நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:
‘ரஜினி முருகன்’ படத்தின் ரிலீஸ் அன்று காலை 7 மணிக்கு ஆர்.டி.ராஜா சாருக்கு போன் செய்தபோது, “தெரியல சிவா. இன்னும் முடிவாகவில்லை” என்று கூறினார். ஒரு படத்தில் நடித்துவிட்டு அப்படம் வெளியாகுமா, ஆகாதா என்று தெரியாமல் உட்கார்ந்திருப்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை அன்று தான் அனுபவித்தேன். நானோ, எனது குழுவோ எந்த ஒரு தவறுமே செய்யாமல், ஒரு படத்தை எடுத்துக்கொண்டு அதையே சுற்றிச் சுற்றி வேலை செய்தபோது அப்படி ஒரு வலி தேவையில்லை என நினைக்கிறேன்.
அந்தக் கொடுமையெல்லாம் எனக்கு இந்த ‘ரெமோ’ படத்தில் இல்லை. நான் ஜாலியாக 18 மணி நேரம் படப்பிடிப்பில் வேலை செய்துவிட்டு, வீட்டில் போய் குழந்தையுடன் விளையாடலாம். ஆனால், ராஜா சாரை நான் இதுவரை குடும்பத்துடன் பார்த்ததே இல்லை.
(கண் கலங்கி அழுதுகொண்டே) நிறைய தயாரிப்பு நிறுவனங்களில், “இந்த போஸ்டர் வடிவமைப்பைக் கொடுங்கள் நன்றாக இருக்கும்” என்று கெஞ்சிக்கொண்டே இருப்பார். நிறைய தயாரிப்பு நிறுவனங்களில் வாசலிலேயே நிறுத்தி இருக்கிறார்கள். ஆனால், அந்த நிறுவனத்துக்காக மட்டுமே பணியாற்றி இருக்கிறார். ஏதாவது சொந்தமாக சொத்து, கார் இருக்கிறதா என்று அவரிடமே கேளுங்கள்.
இந்தப் படம் வெளியாகும்வரை பிரச்சினை. எவ்வளவு தான் பிரச்சினைக் கொடுப்பீர்கள், எவ்வளவு கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியும். நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு வருகிறேன். நானோ, அவரோ சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து படம் எடுக்க வரவில்லை. ரசிகர்கள் ரசிப்பதற்காக மட்டுமே படம் எடுக்க வருகிறோம். அதற்கு வேலை செய்ய விடுங்கள். கெஞ்சிக்கேட்டுக் கொள்கிறேன். என்னையும் அவரையும் வேலை செய்ய விடுங்கள். இன்றைக்கு வரைக்கும் அவர் தூங்கவில்லை. நினைத்திருந்தால் நிறைய சம்பாதித்து எங்கேயாவது சென்று செட்டிலாகி இருக்கலாம்.
அனைவருமே ஏற்றிக் கொடுத்தது தான் இந்த மேடை. ஒரு படம் பண்ணி அனைவரையும் சந்தோஷப்படுத்தலாம் என்று ஆசையாக இருக்கிறது. என்றைக்காவது ஒரு நாள் புதிதாக ஏதாவது பண்ணிவிட மாட்டோமா என்ற எண்ணம் இருக்கிறது. நான் உங்களிடம் உதவியே கேட்கவில்லை. மக்களின் ஆதரவு இருக்கிறது. அனைவரிடமும் “தயவு செய்து வேலை செய்ய விடுங்கள்” என்று மட்டுமே கேட்கிறேன்.
கிடைத்திருக்கும் இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமில்லை. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். நிறைய பணம் கொடுக்கிறார்கள். அதற்கு வேலை செய்ய வேண்டும்.
கண்டிப்பாக நீங்கள் அனைவரும் பெருமைப்படும் அளவுக்கு ஒரு தயாரிப்பை நாங்கள் கொடுப்போம் என்று நம்பிக்கை அளிக்கிறேன்.
இதைப் பார்ப்பவர்கள், “என்ன, எல்லா மேடைகளிலும் அழுகிறானே” என்று நினைக்கலாம். தவறான ஒரு விஷயம் பண்ணிவிட்டு அழுதால் தான் தவறு என நினைக்கிறேன். உண்மையாக இருக்கிறேன். யாருக்கும் எந்த கெடுதலும் செய்துவிடக் கூடாது என நினைக்கிறேன். எனது குழுவே அப்படி தான் நினைக்கிறது. இங்கு நான் அழுததற்காக வருத்தப்படவில்லை. இந்தக் கண்ணீரைத் தாண்டி ராஜா அண்ணனுக்கு என்ன திருப்பிக் கொடுப்பது என தெரியவில்லை.
கொஞ்சம் கண் கலங்கியதற்கு மன்னிக்க வேண்டும். அனைவருமே நிறைய வெற்றி வந்துகொண்டிருக்கிறது என நினைக்கலாம். ஆனால், அது தான் பெரிய பயத்தைக் கொடுக்கிறது. ஏனென்றால் நான் யாரிடமோ வெற்றியைத் திருடிக்கொண்டு வந்தது மாதிரியே இருக்கிறது. அப்படியல்ல. ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் கடுமையான போராட்டம் இருக்கிறது. 6 மாதங்கள் சும்மா இருந்தேன். அந்த சமயத்தில் 2 படங்கள் பண்ணியிருக்கலாம். ஆனால், சந்தோஷமாக செய்திருக்க முடியாது. 20 மணி நேரமெல்லாம் படப்பிடிப்பில் இருந்திருக்கிறேன். சோர்வாக இருந்திருக்கிறேனே தவிர சோகமாக இருந்ததில்லை. அப்படித்தான் அனைத்து படங்களுமே பண்ண வேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.