“ஜெயலலிதா மீண்டு வருவார்”: நடிகை நமீதா நம்பிக்கை!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் பிரபல நடிகை நமீதா. குஜராத்தில் பிறந்து, வளர்ந்து, சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்த இவர், தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் ரீதியில் சேவை செய்தே தீருவேன் என ஒற்றைக்காலில் நிற்பவர்.

இதற்காக, கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார் நமீதா. அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏனோ ஜெயலலிதா அதற்கான வாய்ப்பை கொடுக்கவில்லை.

தற்போது முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நமீதா, “மாண்புமிகு அம்மா அவர்கள் இதற்கு முன்பு எத்தனையோ சோதனைகளை தாண்டி வந்திருக்கிறார். அம்மாவுக்கு கடவுளின் ஆசி எப்போதுமே உண்டு. இத்தனை கோடி மக்கள் அம்மாவுக்காக பிரார்த்திக்கிறோம். அவர்கள் மீண்டு வருவார்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

“அரசியல், சினிமா – இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?” என்று விளையாட்டுத்தனமாக கேட்கப்பட்ட கேள்விக்கு சீரியஸாக பதில் அளித்த நமீதா, “ஏன்… இதில் என்ன கஷ்டம்? இரண்டும் வேறு வேறு. மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். சத்தமில்லாமல் செய்துகொண்டும் இருக்கிறேன். அதற்காக தான் மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சியான அதிமுகவில் இணைந்தேன். அதற்கும் சினிமாவுக்கும் தொடர்பு இல்லை” என்றார்.