பெண் என்பதாலேயே இரங்குவதும், ஆண் என்பதாலேயே அவனை கொடுமைக்காரனாக பார்ப்பதும்…

பெண்ணியம் பேசும் நாம், பாதிக்கப்படும் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்துவது ஆணியத்தையா? பெண்ணியத்தையா? என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.

பாதிப்புக்கு வழங்கப்படும் தீர்வு, சம்பந்தப்பட்ட பெண் சமூகத்தில் ஏற்றம் பெற உதவ வேண்டுமே தவிர, அவரை முன்னிறுத்தி கத்தி சுற்றும் அப்பா, மகன், அண்ணன், கணவன் போன்ற ஆண்களுக்கு அனுகூலமாக அமைந்துவிடக் கூடாது. அப்படி அவர்கள் ஆதாயம் அடைய, தன் பாதிப்பை பயன்படுத்தும் பெண், தூக்கிப் பிடிப்பது கண்டிப்பாக பெண்ணியம் அல்ல: ஆணியம் என அறிந்து கொள்வோமாக!

பஞ்சாயத்து பிரசிடெண்ட்களாக மனைவிகளை ஜெயிக்க வைக்கும் கணவன்கள் எத்தனை பேரை நாம் பார்க்கிறோம்? அந்த பொறுப்புக்கான அரசியல் மற்றும் சமூக அனுகூலங்களை அந்த கணவன்மார் தானே அனுபவிக்கிறார்கள்! பெண் பிரசிடெண்ட்களும் அந்த ஆண் கணவன்களுக்கு தோசை சுட்டு போடுவதைத்தானே தங்களின் தலையாய கடமையாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்?

பெண்ணுக்கு வழங்கப்பட்ட அரசியல் பிரதிநிதித்துவத்தை இங்கு யார் பயன்படுத்துகிறார்கள் என பார்த்தீர்களா? ராப்ரி தேவி முதல்வர் ஆகி என்ன ஏற்றம் அடைந்துவிட்டார்?

ஆண்கள் எப்படி பெண்களை ஒடுக்கி கொடுமை செய்கிறார்களோ அதேபோல் பெண்களும் ஆண்களுக்கு தாமே ஒடுங்கி ஆணாதிக்கத்தை தூக்கி பிடிக்கிறார்கள். அவர்களுக்கு அதுதான் கலாசாரம், குடும்பம், பெண்ணுக்கு அழகு!

அப்படி எனில் பெண்களுக்கு இப்படி ரெப்ரெசண்டேஷனே வேண்டாமா? அடிமைத்தளையிலிருந்து வெளியே வரும் வாய்ப்புகள் வேண்டாமா?

கண்டிப்பாக வேண்டும், but in its true sense!

ஆணாதிக்கத்தை, சாதியத்தை அடையாளப்படுத்தும், போற்றும் பெண்களுக்கும் இந்த வாய்ப்புகள் கிடைக்கும்தானே! அவர்கள் பேசும் நியாயங்களும் சிந்தும் கண்ணீரும் யாரின் நலன் கருதி இருக்கும்? யோசித்து பாருங்கள்.

இதுவே இந்த வாய்ப்புகள், ஆணாதிக்கத்தை உதறி வெளியே வரும் பெண்கள் (உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா போல)அடையாளம் காணப்பட்டு வழங்கப்பட்டால் அதுதானே சரியான மாற்றத்துக்கான வழி?

இனி இந்த பிரச்சினையை அப்படியே சற்று திருப்பி பார்ப்போம்.

பெரியாரியம், பெண்ணியம் பேசுபவனின் மனைவி ஆணியமும் சாதீயமும் பேசுபவளாக அமைந்தால் என்ன நடக்கும்?

அப்படிப்பட்ட மனைவியை இயக்கும் அவளின் அப்பா, அண்ணன், அம்மா ஆகியோர் அந்த முற்போக்கு கணவனை என்னவாக அவளுக்கு புரிய வைப்பார்கள்? அப்படி அவனே தன்னிலை விளக்கம் கொடுத்து புரிய வைக்க முயன்றாலும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லையெனில் என்ன நடக்கும்?

பிற்போக்குத்தனமான தன் குடும்பம் இயக்குவதாலும் தன் சுய விருப்பத்தாலும் அந்த பெண், அந்த கணவனை தன்னை போல, தன் குடும்பத்தை போல பிற்போக்காக மாற்ற வேண்டும் என முயன்று கொண்டே இருப்பாள்.

பெரியாரியம் பேசுபவனாக இருந்தால், ஒத்து வராமல் வாழ்ந்து ஒருவரை ஒருவர் நோகடிப்பதற்கு பதில், பிரிந்து அவரவர் வாழ்க்கை பாணியில் வாழ்வோம் என சொல்லி விவாகரத்துக்கு போவான் தானே!

பிற்போக்கு மனநிலையில் இருக்கும் அந்த பெண்ணும் அவள் குடும்பமும் இதை கண்டிப்பாக அனுமதிக்காது. கோர்ட்டில் அந்த பெண் அழுவாள். அவள் குடும்பம் நடிக்கும்.

சமூகம் என்ன செய்யும்? கணவனை வில்லனாக பார்க்கும். நாமே அழும் பெண்ணை பார்த்தவுடன் கணவனை ஆணாதிக்கவாதி என்றுதானே சொல்வோம்!

எல்லாரும் சேர்ந்து அந்த பெண்ணை அந்த ஆணுடன் சேர்த்து வைக்க முயலுவார்கள். ஆனால் அவனுக்கு மட்டும்தான் தெரியும் ஒன்றாய் வாழ வேண்டுமென அந்த பெண் சொல்வது, தன்னை அந்த பெண்ணின் வழிக்கு கொண்டு வர வேண்டுமென்பதற்கே என்று. அதாவது பிற்போக்காக! அவன் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்துவிட முடியும்? அவனுக்கு எதிராக, அவனை போலவே பெரியாரியம் பேசும் நாமே இருப்போம் இல்லையா? ஏனெனில் பாதிக்கப்படுபவள் பெண்!

எல்லா ஆண்களும் பெண்ணியம் பேசுபவர்களா? கண்டிப்பாக இல்லை. பெரும்பான்மை ஆணாதிக்கவாதிகள் தான். போலவே, எல்லா பெண்களும் பெண்ணியவாதிகளா? அதுவும் கண்டிப்பாக இல்லை. அவர்களிலும் பெரும்பான்மை ஆணாதிக்கவாதிகள் தான். மகள்களின் காதலை ஒடுக்கி மகன்கள் ஊர் மேய்வதை பெருமையுடன் பேசும் எத்தனை அம்மாக்களை நாம் பார்த்திருக்கிறோம்!

ஆகவே, எதையும் பொதுமைப்படுத்தி பார்த்தல் மிக தவறு. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையாக அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அதைத்தான் பெரியார் சொல்லியிருக்கிறார் பகுத்தறிவு என!

பெண் என்பதாலேயே இரங்குவதும் ஆண் என்பதாலேயே அவனை கொடுமைக்காரனாக பார்ப்பதும் தவறான அணுகுமுறை. ஏனெனில் பெண் மீதான இரக்கத்தையும் அவளின் ஒப்புதலோடு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவன் ஆண்.

கருப்பை, பெண்ணை அடிமைப்படுத்துகிறது ஆதலால் குழந்தை வேண்டாம் என பெரியார் சொன்னதும் நாகம்மை தன் பெற்றோரிடம் புலம்பி, அவர்களும் வந்து அவரை திட்டி, பெரியாரும் வேறு வழியில்லாமல் கோர்ட்டுக்கு சென்றிருந்தால் என்ன ஆகி இருக்கும்? அவரையும் ஆணாதிக்கவாதி என சொல்லி இருப்போம், இல்லையா? நல்லவேளை அவர் இந்த தலைமுறையில் பிறக்கவில்லை.

“அவாள்லாம் என்ன ஜாதியோ, எப்படி என் கையால சோறு போடறது?” என கேட்ட செல்லம்மாளை அறைந்த பாரதி இன்று இருந்திருந்தால், ஆணாதிக்கவாதி என குற்றம் சாட்டி இருப்போம். ஜெயிலில் அடைத்திருப்போம். நொந்துபோய் இன்னும் கஞ்சா அடித்திருப்பான். ஏதாவது ஒரு டிவி சேனல், நியூஸ் ஸ்டோரி பண்ணுவற்காக ஆராய்ந்து, “ஆணுக்கு பெண் இளைப்பில்லை காண்’ என பாடிய ஆணாதிக்கவாதி” என்று செய்தி வாசித்து டிஆர்பி ஏற்றியிருக்கும், இல்லையா?

ஆகவே புரிந்து கொள்ளுங்கள். ஆணாதிக்கவாதிகள் வேட்டையாடப்பட வேண்டும். சந்தேகமே இல்லை. ஆனால் ஆணாதிக்கவாதிகள் ஆண்களாக மட்டும்தான் இருப்பார்கள் என நினைத்துக் கொள்ள வேண்டாம்!

– ராஜசங்கீதன் ஜான்