“அந்த எளிய தந்தைக்கு உறுதுணையாக நிற்கும் திருமாவளவன் எனும் சகோதரர்!”

திருமாவளவன் எனும் சகோதரர்…

இன்று இந்து நாளிதழில் வந்த படம் என்னை மிகவும் பாதித்தது. ராம்குமாரின் தந்தையை கூட்டிக்கொண்டு திருமா பிணவறை சென்று உடலை பார்வையிடுகிறார், நீதிபதியிடம் முறையிடுகிறார். அந்த ஏழை மனிதரைக் கூட்டிக்கொண்டு அங்கும் இங்கும் அலைகிறார்.

ஒருமுறை சொல்கிறார், ராம்குமார் யாரென்றே தெரியாது, அவன் குடும்பம், ஊர் எதுவும் தெரியாது என. இருப்பினும், அவனுக்கு நீதி மறுக்கப்படும் சூழலில் குரல் கொடுக்கிறார். தொடர்ச்சியாக ஊடகங்களை சந்திக்கிறார். அவரை ஓரளவு ஏற்றுக்கொண்ட சில மேல்தட்டு நபர்களின் வெறுப்பிற்கு ஆளாகிறார். இவைகளையும் தாண்டி ராம்குமார் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் திருமா நீதிமன்றம், ஊடகம் என்று போராடுகிறார். இறுதியில் பிணவறை வரை அந்த எளிய தந்தைக்கு உறுதுணையாக நிற்கிறார்.

இவரல்லவா எளிய விளிம்புநிலை தலித் மக்களின் உண்மையான தலைவர்.

இவருக்குத் தெரியும், இவர் சார்ந்த இனத்தின் பெரும்பான்மையான மக்கள் இவருக்கு ஓட்டு போடுவதில்லை. ராம்குமாரின் உறவினர்கள்கூட ஓட்டு போடுவார்களா என்பது ஐயம்தான்.

ஆனால், திருமா அவர்கள் தேர்தல் அரசியலையும் தாண்டிய தலைவர். இவர் ஒடுக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் இனம் பார்க்காமல் குரல் கொடுக்கிறார்.

இவர் போன்ற தன்னலம் பார்க்காத தலைவர்கள் அமைவது அரிது.

தலித் மக்களின் பெருமைக்குரிய தலைவராக திருமா இருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.

இவருக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? இவருடைய காலத்திலேயே அடிமைச் சங்கிலிகளை இயன்றவரை உடைத்துக்கொள்வோம். நமது குழந்தைகளுக்கு வளமான, வலிமையான கல்வியை கொடுப்போம். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம். இவருடைய கட்சிக்கு அவ்வப்பொழுது நிதி உதவி செய்வோம்.

நாம் யாருக்கும் கீழானவர்கள் இல்லை; நமக்கு கீழானவர்கள் யாரும் இல்லை.

– Saravanan tamilmani