“இனிமேல் போலீஸ் வேடத்தில் நடிக்காதீங்க சூர்யா! யாரும் பாக்க மாட்டாங்க!”

போலீசாரை ரொம்ப நல்லவர்களாகவும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக நின்று சாகசம் செய்து, நீதி, நேர்மை, நியாயத்தை நிலை நாட்டுபவர்களாகவும், உண்மைக்குப் புறம்பாக பொய்யாய் சித்தரிக்கும் மலிவான மசாலா திரைப்பட இயக்குனர்களில் மிக முக்கியமானவர் “பலசரக்கு வியாபாரி” ஹரி.

இவர் முதன்முதலாக இயக்கிய போலீஸ் ஸ்டோரி ‘சாமி’. இப்படம் 2003, மே, 1ஆம் தேதி திரைக்கு வந்தது. இதில் போலீஸ் அதிகாரியாக நடித்த விக்ரம், “நான் போலீஸ் இல்ல, பொறுக்கி” என்று, மிக மட்டமான ஒரு விஷயத்தை மிகவும் பெருமையாக பேசியிருப்பார். இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

அடுத்து, சூர்யா ‘சிங்கம்’ படத்தில் காக்கி உடை அணிந்து ஹரியுடன் கைகோர்த்தார். “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா! பாக்குறியா… பாக்குறியா…” என்று சூர்யா வீராவேசத்துடன் இப்படத்தில் வசனம் பேசி, போலீசாரின் கொடிய வன்முறையை நியாயப்படுத்தியிருப்பார். 2010, மே, 28ஆம் தேதி வெளியான இந்த படமும் வசூலை வாரிக்குவித்தது.

அதன்பின், ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடித்த போலீஸ் ஸ்டோரி ‘சிங்கம் 2’. இந்த படமும் ‘சாமி’, ‘சிங்கம்’ போல போலீசின் மக்கள் விரோத கொடூர முகத்தை மூடி மறைத்து, சாகச ஜந்துவாய் சித்தரித்தது. 2013, ஜூலை, 5ஆம் தேதி வெளியான இந்த படம், முதலுக்கு மோசம் செய்யாமல், சுமாராக வசூலித்துக் கொடுத்தது.

இந்த தொடர் வெற்றிகள் காரணமாக, தற்போது ஹரியின் இயக்கத்தில் ‘சிங்கம் 3’ என்ற போலீஸ் ஸ்டோரியில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இப்படம் அடுத்த (பிப்ரவரி) மாதம் 9ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால், முந்தைய படங்களைப் போல் இல்லாமல்,  இந்த படம், போலீசுக்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் இருக்கும் சூழலில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

0a1d

ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற கோரிக்கையுடன் சில தினங்களுக்கு முன் சென்னை மெரினாவில் அறப்போராட்டம் நடத்திய பல லட்சம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களையும், அவர்களது வாகனங்களையும், அவர்களுக்கு உதவிய குப்பத்து மீனவர்களையும் போலீசார் கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கியதோடு, ஆட்டோக்கள், குடிசைகள், மீன் சந்தை என கண்ணில் பட்ட அனைத்தையும் தீயிட்டு கொளுத்தி சாம்பலாக்கி வெறியாட்டம் ஆடியிருக்கிறார்கள். இதுபோல் சென்னை, கோவை, மதுரை, அலங்காநல்லூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அராஜகத்தை அரங்கேற்றியிருக்கிறது போலீஸ்.

இதனால் கொந்தளிப்புடன் இருக்கும் தமிழக மக்கள், போலீசாரை நபார்க்க சகிக்காமல் மிகுந்த வெறுப்புடன் இருக்கிறார்கள். போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்ட குடியரசு தின விழாக்களை பெருவாரியான தமிழக மக்கள் புறக்கணித்திருப்பதே இதற்கு சான்று. இத்தகைய சூழலில், சூர்யா நடிப்பில் திரைக்கு வரும் போலீஸ் ஸ்டோரியான ‘சிங்கம் 3’ மக்களிடையே எத்தகைய வரவேற்பை பெறும் என்று கலக்கத்தில் இருக்கிறது படக்குழு.

தற்போதைய போலீஸ் அராஜகத்துக்கு ஆதாரங்களாக இருக்கும் நூற்றுக்கணக்கான ஒளிப்பதிவுகளும், பல்லாயிரக்கணக்கான கண்டனங்களும், கட்டுரைகளும் நிறைந்திருக்கும் சமூக ஊடகத்தில், SAYED ASHRAF என்ற பதிவர் இப்படி குறிப்பிட்டுள்ளார்:

“இனிமேல் போலீஸ் வேடத்தில் நடிக்காதீங்க, சூர்யா! யாரும் பாக்க மாட்டாங்க!”

இதுதான் தமிழக வெகுமக்களின் இன்றைய மனநிலை!