‘நையப்புடை’ விமர்சனம்

நடிகர் விஜய்யின் அப்பா 73வயது எஸ்.ஏ.சந்திரசேகரன் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ள படம் ‘நையப்புடை’. இதே தலைப்பில் கவிஞர் பவகணேஷ் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல் ஒன்றும் ஏற்கெனவே வெளிவந்திருக்கிறது. அதில் அருமையான பல கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

“துப்பாக்கிச் சூடு அய்ந்து புள்ளி, கத்திக்குத்து பத்துப்புள்ளி
வெறும் வன்முறை கொண்டு வடிவமைத்து பொத்தான் அழுத்தி
எண்ணிக்கை அடங்கா “வீடியோ கேம்ஸ்”-ஸின் ஆக்கிரமிப்பு
இன்றைய குழந்தைகள் உலகம்”

என்று, குழந்தைகள் இன்று ‘வீடியோ கேம்ஸ்’ காரணமாக வன்முறையாளர்களாக மாறி வருகிறார்கள் என்பதை கவிதையில் அழகாக பதிவு செய்திருக்கிறார் கவிஞர் பவகணேஷ்.

“சுயஅறிவு மழுங்கடிக்கும் மனப்பாட மதிப்பெண்கள்
புத்தகப் பக்கங்களை ஊடே
எங்களை மடித்து வைத்து
எழுத்துக்களுடன் இடைவெளி சேர்த்து
அச்சு பிசகாமல் மனனம் செய்து
யோசிக்கும் சுயதிறன் இல்லாமல் செய்தது இக்கல்வி
தமிழ் கல்லாமல் ஆங்கிலம்? திகட்டு்ப் பால்”

என்று, தமிழ் படிக்காமலே பட்டம் பெறும் அவலநிலை தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பதை காத்திரமாக சுட்டிக்காட்டி, இந்நிலை மாற வேண்டும் என திடமாய் உணர்த்தியிருக்கிறார் கவிஞர்.

“புகை புகை – திசைதோறும் புகை – வாகனப் புகை – ஆலைப் புகை
சிகரெட் புகை – அணுகுண்டு புகை – பூமிச்சூட்டுப் புகை
புகை வாழ்வுஎரிப்பது உணர்”

என்று, சுற்றுச்சூழல் மாசுக்கு எதிராகவும், புகையைக் குறைத்து பூமி செழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசர அவசியம் என்பதையும் கவிதை வரிகளில் எடுத்துரைத்துள்ளார் பவகணேஷ்.

மேலும், நகைச்சுவை என்பது அடுத்தவர் மனதை புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்; மதிக்கப்பட வேண்டிய மாற்றுத் திறனாளிகளையும், பெண்களையும், திருநங்கைகளையும் கேலி செய்து நகைச்சுவைக் காட்சிகள் அமைக்கக் கூடாது என்பதை,

“நகைச்சுவை பெயர் சொல்லி ஊடகம் நிகழ்த்தும் சமூகச் சீர்கேடு
அரங்கேறும் அருவருப்பு, இரட்டை அர்த்த வசனம் பேசி
உயிர்கள் உறவுகள் சாகடித்து, பெண்மையைக் கொச்சை செய்து
பாலியல் சீண்டல் பகிரங்கப்படுத்தி அடித்து உதைத்து
பின்னணி சிரிப்புச் சத்தம் போட்டு நகைச்சுவை மகத்துவம் கெடுக்கும் போட்டி” எனவும்,

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதும் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் காவிரி நீர் தர மறுக்கிறது. வெள்ளம்வரும் காலத்தில் மட்டும் தற்காத்துக் கொள்ள அணையைத் திறந்துவிடுகிறது. கடலில் வீணாய் கலக்கும் நீரை முல்லைப் பெரியாறு அணையில் சேமிக்கக் கூடாது என தடுக்கிறது கேரளம். பாலாற்றின் குறுக்கே அணை கட்டத் துடிக்கிறது ஆந்திரம். இப்படி அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றன. தட்டிக் கேட்க நாதியின்றி வாழுகிறான் தமிழன். வேடிக்கை பார்க்கிறது மைய அரசு. வேதனையில் தவிக்கிறார்கள் தமிழக விவசாயிகள் என்பதை,

“பூட்டிக்கிடக்கும் நதிகள் தமிழகம் தொலைக்கும் நீர்ச்சுவடுகள்
எத்தனைப் பேச்சுவார்த்தைகள் தற்கொலை நாடகம் அங்கு அரங்கேற்றம்
அணை உடையும் நிலையில் மட்டும் திறந்து விடும் சுய நலம்
பாய்ந்து வரும் நதிகள் தடுத்து அமுக்கி
நுரைப்பொங்கும் அண்டை மாநிலம்
நத்தைக்கறி எலிக்கறி தின்று உயிர் நகர்த்தி
நுரைக்கக்கும் எங்கள் விவசாயிகள்
இந்தியாவின் மூன்று பக்கம் உப்புநீர்
தமிழகத்தின் மூன்று பக்கம் முடமாக்கப்பட்ட நதிகள்
உணர்வும் அரசும் ஒருசேர திறந்தால் செழிப்போம் நாம்” எனவும்

அற்புதமான கவிதை வரிகளில் சொல்லியிருக்கிறார் கவிஞர் பவகணேஷ். ‘நையப்புடை’ கவிதை நூலில் இதுபோன்ற அருமையான பல கவிதைகள் இருக்கின்றன.

என்ன முணுமுணுக்கிறீர்கள்? ஓ… ‘நையப்புடை’ திரைப்படம் எப்படி என்று கேட்கிறீர்களா?

என்னத்தைச் சொல்ல…?

“நீங்கள் படம் பண்ணியது போதும்; உங்களுக்கு வயசாயிடுச்சு. வீட்டோடு சும்மா இருங்க” என்று சொன்ன தன் மகன் விஜய்யின் மார்க்கெட்டை காலி செய்ய வேண்டும் என்ற ஆவேசத்தில், அவருக்கு போட்டியாக அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க முயன்றிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வரும் அவர், தொலைக்காட்சி செய்திவாசிப்பாளரான பா.விஜய் துணையுடன், மொட்டை ராஜேந்திரன் தலைமையிலான ரவுடி கும்பலை ஒழித்துக்கட்டுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. அருதப்பழசான இந்த கதை மொத்தமும் எஸ்.ஏ.சி.யை மையமாகக் கொண்டே நகர்வதால், நாயகன் பா.விஜய்யும், நாயகி சாந்தினியும் இதில் வெறும் உப்புக்குச் சப்பாணிகள் மட்டுமே.

ஓடும் பஸ்ஸில் கால்களால் எட்டி உதைத்து ரவுடிகளை வீழ்த்துவதில் தொடங்கி, ஒரு காரிலிருந்து இன்னொரு காருக்கு தாவிக் குதித்து மொட்டை ராஜேந்திரனுடன் மோதும் உச்சக்காட்சி வரை ‘எதிரிகளை நையப்புடைக்கிறேன்’ என்ற பெயரில் ஆடியன்ஸை நையப்புடைக்கிறார் எஸ்.ஏ.சி. என்னா அடி…! முடியல…!!

எஸ்.ஏ.சியை “அப்பா” என்று அன்பொழுக அழைக்கும் விஜய் ரசிகர் மன்றத்தினர் மட்டும் ‘நையப்புடை’ படம் பார்க்கலாம். மற்றவர்கள் ‘நையப்புடை’ படம் பார்ப்பதற்கு பதிலாக ‘நையப்புடை’ கவிதை புத்தகம் படிப்பது புண்ணியம்.