‘கணிதன்’ விமர்சனம்
அமெரிக்காவின் ‘வாட்டர்கேட்’ ஊழல், இந்தியாவின் ‘போபர்ஸ்’ ஊழல், ‘2ஜி’ ஊழல், ஈழத்தின் இறுதிப்போரில் நடந்த படுபாதக போர்க்குற்றங்கள் போன்ற எண்ணற்ற அயோக்கியத்தனங்களை புலனாய்வு செய்து, வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள் ஊடகவியலாளர்கள். இன்று இந்திய அளவில் காவிகளின் வெறியாட்டத்தை அம்பலப்படுத்துவதிலும், தமிழக அளவில் பல ஊழல்களை வெளிக்கொணர்வதிலும் புலனாய்வு ஊடகவியலாளர்கள் கணிசமாகப் பங்காற்றி வருகிறார்கள். இது தெரியாத ஒரு அறிவிலி, ஊடகவியலாளர்களைப் பார்த்து, “த்தூ…” என காரித் துப்புவதும், “ஹை… இது ட்ரெண்டிங் ஆயிருச்சு…” என்று அந்த அறிவிலியின் பொண்டாட்டி கொண்டாடுவதும், அறம் சார்ந்து இயங்கும் பல ஊடகவியலாளர்களை மனம் நோகச் செய்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் புலனாய்வு ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பை போற்றும் வகையிலும், அவர்களுக்கு மகுடம் சூட்டி ஊக்குவிக்கும் விதத்திலும் ‘கணிதன்’ படத்தை தயாரித்து, வெளியிட்டு, ஊடகவியலாளர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றிருக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு.
ஊடகவியலாளர் பரம்பரையில் வந்தவர் நாயகன் அதர்வா. அவரது தாத்தா ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பணியாற்றியவர். அப்பா (ஆடுகளம் நரேன்) பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர். அந்த வரிசையில் வந்த அதர்வா, டி.ஆர்.பி. ரேட்டிங்கில் கடைசி இடத்தில் இருக்கும் மந்தமான சேனல் ஒன்றில் நிருபராக வேலை பார்த்து வருகிறார். உலகப் புகழ் பெற்ற ‘பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்’ என்ற பி.பி.சி.யில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது அவரது லட்சியம்.
இந்த லட்சியத்தை அடைய அதர்வா ஒருபுறம் விடாமுயற்சிகள் செய்துகொண்டிருந்தாலும், மறுபுறம் ஒரு சாதாரண இளைஞனாக, நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை, கலாய்ப்பு என ஜாலியாக வாழ்ந்து வருகிறார். அந்த சமயத்தில் இங்கிலாந்தில் ஜர்னலிசம் படித்துவிட்டு, அதே சேனலுக்கு வேலைக்கு வரும் நாயகி கேத்தரின் தெரசாவுக்கும், அதர்வாவுக்கும் இடையே முதலில் சுவாரஸ்யமான மோத்லும், பின்னர் நெகிழ்ச்சியான காதலும் ஏற்படுகிறது.
பி.பி.சி.யில் வேலை கிடைத்து அதர்வாவின் லட்சியம் நிறைவேறப் போகும்போது – படம் ஆரம்பித்த சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு – ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டு, கதைப் போக்கை அப்படியே திருப்பிப் போட்டு மாற்றிவிடுகிறது. அதாவது, திடுதிப்பென வரும் போலீசார், பொதுவெளியில் வைத்து அதர்வாவை அடித்து இழுத்துக்கொண்டு போகிறார்கள். போலீஸ் நிலையத்துக்குப் போனால், அதர்வாவைப் போலவே உயர்கல்வி படித்த நான்கைந்து இளைஞர்களும் மொத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
அதர்வா உள்ளிட்ட இந்த இளைஞர்கள் போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து, வெளிநாட்டு வங்கிகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக போலீஸ் குற்றம் சாட்டுகிறது. அதிர்ச்சியடையும் இளைஞர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்தபோதிலும், அதை காதில் வாங்க மறுக்கிறது போலீஸ். காரணம், அசைக்க முடியாத ஆதாரங்களாக போலீசிடம் இவர்களது போலி கல்விச் சான்றிதழ்கள் இருக்கின்றன. போலீசார் இவர்களை வேனில் ஏற்றிக்கொண்டு போகும்போது, அவமான உணர்வில் மனமுடைந்த ஓர் இளைஞன், ஓடும் வேனிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொள்கிறான்.
ஜாமீனில் வெளியே வரும் அதர்வா, தனக்காகவும், சக இளைஞர்களுக்காகவும் புலனாய்வில் இறங்குகிறார். போலி சான்றிதழ் தயாரித்து வங்கிகளில் கொடுத்து மோசடி செய்தது யார்? என்பதை ஓர் ஊடகவியலாளனுக்கு உரிய சாமர்த்தியத்துடன் தடயங்களைப் பின்தொடர்ந்து சென்று கண்டுபிடிக்கிறார். போலி சான்றிதழ் தயாரிக்கும் மாபியா கும்பல் மிகப் பெரிய நெட்வொர்க்காக, சர்வ வல்லமை பொருந்தியதாக இயங்கி வருவது தெரிகிறது. சக ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்புடன், அதர்வா, தன் உயிரை துச்சமென மதித்து, துணிந்து களமிறங்கி, அந்த மாபியா கும்பலை ஆதாரங்களுடன் எப்படி அம்பலப்படுத்துகிறார் என்பது மீதிக்கதை.
நாயகன் அதர்வா கதைக்கு ஏற்ற தேர்வு. தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கட்டிப் போட்டிருக்கிறார். காதல் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும், க்ரைமை நுணுக்கமாக புலனாய்வு செய்யும் காட்சிகளிலும் பிரமாதமாக நடித்திருக்கிறார். படத்தின் வெற்றிக்கு அதர்வாவின் உழைப்பு பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது. இந்த படத்தைப் பார்த்துவிட்டு, “அதர்வா மாஸ் ஹீரோ ரேஸூக்கு வந்துவிட்டார்” என்று ரஜினிகாந்த் பாராட்டியது வெறும் புகழ்ச்சி இல்லை என்பதை படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் அதர்வா நிரூபித்திருக்கிறார்.
நாயகியாக வரும் கேத்தரின் தெரசா அழகிலும், கவர்ச்சியிலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக, பாடல் காட்சிகளில் ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார்.
போலி சன்றிதழ் மாபியா வில்லனாக வரும் தருண் அரோரா கண்களாலேயே அச்சமூட்டுகிறார். உடல்மொழியில், பார்வையில் அசத்தும் அவர், தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நல்ல வில்லன்!
அதர்வாவின் நண்பனாகவும், வக்கீலாகவும் வரும் கருணாகரன் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ஆங்காங்கே காமெடி பட்டாசை கொளுத்திப்போட அவர் தவறவில்லை.
அதர்வாவின் அப்பாவாக வரும் ஆடுகளம் நரேன் ஆர்ப்பாட்டம் இல்லாத கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன் மகனின் சாதனை பற்றிய செய்தியை அவர் பொதிகை தொலைக்காட்சியில் வாசிக்கும் காட்சி நச்.
ஆடுகளம் நரேனின் நண்பராக வரும் பாக்யராஜ், “இந்தக்காலத்துல தப்பு பண்ணினவங்களை விட்டுடுவாங்க. ஆனா, அதை தட்டிக் கேட்டவங்களை சும்மா விடமாட்டாங்க” என்ற வசனம் பேசும்போது திரையரங்கில் அப்ளாஸ் பறக்கிறது.
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அற்புதமாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர் டி.என்.சந்தோஷ். நடிகர் – நடிகைகள் அனைவரையும் சிறப்பாக பயன்படுத்திருக்கிறார். போலி சான்றிதழ் மூலம் எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள்? நமக்குத் தெரியாமலே நமது சான்றிதழின் போலிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன? என்பன போன்ற அதிர்ச்சி தரும் உண்மைகளை பரபரப்பான திரைக்கதையின் வேகத்தில் துணிச்சலாக தந்திருக்கிறார். பாராட்டுக்கள்.
இயக்குநரின் விறுவிறுப்பான திரைக்கதைக்கேற்ப ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா பரபரவென பயணித்திருக்கிறார்.
டிரம்ஸ் சிவமணியின் இசையில் பாடல்கள் பிரமாதம். குறிப்பாக, “யப்பா சப்பா…’ பாடல் அட்டகாசம். பின்னணி இசையையும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
போலி சான்றிதழ்களின் நடமாட்டம், அதன் பின்னணியில் இருக்கும் மிகப் பெரிய அரசியல், அதிகார வர்க்கத்தினரின் கூட்டு, அதனால் படித்தவர்கள் பாதிக்கப்படுவது, பணமிருப்பவர்கள் சொகுசான வேலைகளில் உட்கார்ந்து கொள்வது என அனைத்து விஷயங்களையும் பிட்டுப்பிட்டு வைக்கிறது இந்த படம். ஒய்ட்காலர் க்ரைம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.
‘கணிதன்’ – நான்காவது தூணின் வலிமையை உரக்கச் சொல்லும் வெற்றியாளன்!