திமிரு புடிச்சவன் – விமர்சனம்

சென்னையில் குற்றவாளிகளாகத் திரியும் இளம் சிறார்களை அண்ணாகவும், போலீஸ் அதிகாரியாகவும் இருந்து திருத்தும் நாயகனின் கதையே ‘திமிரு புடிச்சவன்’.

12-ம் வகுப்பு படிப்போடு நிறுத்திக்கொண்ட விஜய் ஆண்டனி கான்ஸ்டபிளாக வேலை செய்கிறார். தன்னைப் போல தன் தம்பியும் ஆகக்கூடாது, எஸ்.ஐ.  அளவுக்காவது உயர் அதிகாரி ஆக வேண்டும் என்று அவருக்குப் பயிற்சி கொடுக்கிறார். ஆனால், அது அவரது தம்பிக்குப் பிடிக்கவில்லை. இதனால் ஊரை விட்டே ஓடுகிறார். சில வருடங்களுக்குப் பிறகு எஸ்.ஐ. ஆக சென்னைக்கு மாற்றலாகி வருகிறார் விஜய் ஆண்டனி. அங்கு தன் தம்பி  ரவுடியாகி, கொலைக் குற்றங்களைப் புரிவதைக் கண்கூடாகப் பார்க்கிறார். இதனால் விஜய் ஆண்டனியே தன் தம்பியை சுட்டுக் கொல்லும் சூழல் நேரிடுகிறது.

ஒரு கட்டத்தில் இதற்கெல்லாம் மூளையாகச் செயல்படும் சாய் தீனாவின் நெட்வொர்க் விஜய் ஆண்டனிக்குத் தெரிய வருகிறது. 18 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களைத் திசை திருப்பி அவர்களை சாய் தீனா மைனர் குற்றவாளிகளாக உருவாக்குதை அறிந்துகொள்கிறார். அவர்கள் கொலை செய்தாலும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் விரைவில் சிறையில் இருந்து வெளியே வந்துவிட முடியும் என்று தீனா மூளைச் சலவை செய்து நிறைய பேரை தன் கட்டுக்குள் வைத்திருப்பதைப் பார்க்கிறார். அதனால் தீனாவின் சாம்ராஜ்ஜியத்தை அழிக்க வேண்டுமானால் சிறார்களின் மனம் மாற வேண்டும். அதற்கு தீனாவை அவமானப்படுத்தி போலீஸ் தான் கெத்து, ரவுடிகள் எல்லாம் வெத்து என்பதை நிரூபிக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுக்கிறார்.

உண்மையில் அந்த முயற்சிகள் என்ன ஆயின,  தம்பியைக் கொன்ற குற்ற உணர்ச்சியில் விஜய் ஆண்டனியைத் தூங்க விடாமல் தடுப்பது எது, யாருடைய ஈகோ ஜெயிக்கிறது, சிறார்கள் நிலை என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

விஜய் ஆண்டனிக்கு கச்சிதமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். தம்பி மீதான பாசத்தையும்,  போலீஸுக்கே உரியான கம்பீரத்திலும் கவனம் ஈர்க்கிறார்.  சாக்கடையைச் சுத்தம் செய்வதில் ஆரம்பித்து மக்களின் அபிமானம் பெற எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும், இன்சோமேனியா எனும் தூக்கமின்மை வியாதியால் அவதிப்படும் போதும் விஜய் ஆண்டனியில் நடிப்பில் மெருகேறி இருப்பதைப் பார்க்க முடிகிறது. திமிருக்கே புடிச்சவன் பாடலில் ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தையும் தன் பக்கம் இழுத்த விதத்தில் விஜய் ஆண்டனி மாஸ் காட்டுகிறார்.

சப் இன்ஸ்பெக்டராக கெத்து காட்டுகிறார் நிவேதா பெத்துராஜ்.  விஜய் ஆண்டனிக்கு அவர் கவுன்ட்டர் கொடுக்கும் காட்சிகள் ரசனை அத்தியாயங்கள். பிசிறே இல்லாமல் டப்பிங்கிலும் அசத்தி இருக்கிறார். நகைச்சுவையிலும் பின்னி எடுக்கும் நிவேதா, படம் முழுக்க நிறைவான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். கண் கலங்கும் காட்சியில் கூலிங்கிளாஸ் அணிந்து திரும்புவதெல்லாம் வேற லெவல். இனி நிவேதாவுக்கு வாய்ப்புகள் அதிகம் வரக்கூடும்.

மீசை பத்மா கேரக்டரில் சாய் தீனா சரியாக இருந்தாலும் கொடுத்த பில்டப்புக்கு முழுமையாகப் பொருந்தாமல் இருக்கிறார். அவர் சீரியஸ் வில்லனா, காமெடி வில்லனா? என்று சந்தேகிக்கும் அளவுக்கே பாத்திரப் படைப்பு உள்ளது. ”எனக்காக ஒரு கோழி செத்துருக்கு. அதை சாப்பிடட்டுமா?”என்று கேட்டும் தீனா, கிடைக்கிற நேரத்தில் அசால்ட் நடிப்பை வழங்கவும் தவறவில்லை.

திருநங்கைகளுக்கு எதுக்கு தனி கழிவறை என்று குரல் எழுப்பும் இந்துஜா பொருத்தமான பாத்திர வார்ப்பு. லொள்ளு சபா சாமிநாதன் சிரிக்க வைக்கிறார்.

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவும், சக்தி சரவணனின் சண்டைப் பயிற்சியும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன. விஜய் ஆண்டனியின் இசையில் திமிருக்கே புடிச்சவன் பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. பின்னணி இசையிலும் தன்னை நிரூபித்திருக்கும் விஜய் ஆண்டனி இரண்டாம் பாதியில் காவடி எடுக்கும் கோயில் விழாவுடன் படத்தை முடித்திருக்கலாம். அதற்குப் பிறகும் படம் நீளமாகச் செல்வதுதான் சோர்வை வரவழைக்கிறது.

படத்தில் லாஜிக் பிரச்சினைகள் இருப்பதை மறுக்க முடியாது. 18 வயது ஆகாத சிறுவன் 9 கொலை செய்திருப்பதாகச் சொல்வது, முழங்காலில் துப்பாக்கிச்சூடு வாங்கிய பின்னரும் விஜய் ஆண்டனி தம்பியை துரத்திக் கொண்டு வேகமாக ஓடுவது, பொதுவெளியில்  எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகாத நிலையில் ஒரு குற்றவாளியை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, தூக்கமின்மை நோயால் அவதிப்படும் நபர் போலீஸாக தன் பணியைத் தொடர்வது, நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஒவ்வொரு உறுப்பாகச் செயலிழப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் 2 மாதங்களுக்குப் பிறகும் விஜய் ஆண்டனி இயல்பாக இருப்பது  என்ற லாஜிக் கேள்விகள் முளைக்கின்றன.

ஆனால், லாஜிக் பார்க்காமல் இருந்தால் கமர்ஷியல் படமாக ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் ரசிக்க வைக்கும் அம்சங்கள் அதிகம் உள்ளன. ”ஆணாக இருக்குற ஒருத்தரு, பெண் உணர்வு வந்தததும் பூ, பொட்டு வைச்சுட்டு வாழுறதுக்கே தைரியம் வேணும். அதனால்தான் தைரியத்துக்கு திருநங்கைகளை  நினைச்சுக்குவேன்” என்று திருநங்கைகளைக் கவுரவப்படுத்தி இருக்கும் இயக்குநர் கணேசாவைப் பாராட்டியே ஆக வேண்டும். பிரித்திகா யாஷினியை ரோல் மாடலாகக் கொண்டு இந்துஜாவை நடிக்க வைத்த விதமும் வரவேற்புக்குரியது.

இளம் சிறார்களை எப்படி ரவுடிகள் குற்றப் பின்னணிக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், கெட்டவர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் செல்வாக்கு படைத்திருந்தாலும் நல்லவனை ஏன் ஜெயிக்க வைக்க வேண்டும், மூளைச் சலவை செய்தாகும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எப்படி பலியாகாமல் இருக்க வேண்டும் என்ற அக்கறையை விதைத்த விதத்தில் ‘திமிரு புடிச்சவன்’ ரசிகர்களுக்குப் பிடித்தவன் ஆகிறான்.

Read previous post:
0a1f
உத்தரவு மகாராஜா – விமர்சனம்

எமோ‌ஷன், காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்த சைக்கோ திரில்லர் தான் ‘உத்தரவு மகாராஜா’. நாயகன் உதயா ஒரு டிராவல் ஏஜென்சி நடத்தி வருபவர். நண்பர்களிடம் பொய்கள் சொல்லி  தன்னைப்

Close