“ஜாக்கெட் மட்டும் அல்ல, செருப்பும் போடாமல் நடித்தேன்”: ‘இளமி’ நாயகி பொளேர்!

ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘இளமி’. இதில் ‘சாட்டை’ யுவன் நாயகனாகவும், அனு கிருஷ்ணா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரவிமரியா, கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ஜூலியன் பிரகாஷ் எழுதி இயக்கியிருக்கிறார்.

தமிழர்களின் பழம்பெரும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து, சுமார் 300 ஆண்டுகளுக்குமுன் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருப்பதால், அக்கால வழக்கப்படி நாயகி அனு கிருஷ்ணா இதில் ஜாக்கெட் போடாமல் நடித்துள்ளார். இதை சில ஊடகங்கள் பெரிதுபடுத்தி கேலி செய்திருந்தன.

இது குறித்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நாயகி அனு கிருஷ்ணா, “மிகப் பெரிய நட்சத்திர நடிகை நடிக்க வேண்டிய அற்புதமான கதாபாத்திரம் என்னுடையது. அத்தகைய கதாபாத்திரத்தில், வளர்ந்துவரும் நடிகையான நான் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் ஜூலியன் பிரகாஷூக்கு நன்றி.

“இந்த படத்தில் நான் ஜாக்கெட் போடாமல் நடித்திருப்பதை சில ஊடகங்கள் பெரிதுபடுத்தி எழுதியிருந்தன. 300 ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது என்பதால், நான் ஜாக்கெட் மட்டுமல்ல, செருப்பும் போடாமல் நடித்தேன். உச்சிவெயிலில் சுடுதரையில் செருப்பு போடாமல் மணிக்கணக்கில் நின்று சிரமப்பட்டு நடித்திருக்கிறேன். இதையும் அந்த ஊடகங்கள் எழுதினால் நல்லது” என்றார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவிமரியா பேசுகையில், “நான் கூட, ‘ஷாட் முடிஞ்சதும் செருப்பு போட்டுக்கம்மா’ என்று அனு கிருஷ்ணாவிடம் சொல்லிப் பார்த்தேன். அவரோ, ‘வேண்டாம் சார், சுடுதரைக்கு என் கால் பழகிக்கிட்டா தான் என் கேரக்டரை நான் நல்லா செய்ய முடியும்’ என்று சொல்லிவிட்டார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு உள்ள நடிகை அனு கிருஷ்ணா” என்றார்.

i3