கார்த்தியின் ‘காஷ்மோரா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு அமோக வரவேற்பு!
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு – எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘காஷ்மோரா’. இப்படத்தை ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் எழுதி இயக்கியுள்ளார். நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகாததால், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படியிருக்கும் என்பது திரையுலகினர் மற்றும் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
அந்த போஸ்டரில் மொட்டைத் தலை, முகம் முழுக்க தாடி, மீசை ஆகியவற்றுடன் ஓர் அரசனுக்குரிய கவச உடையும், கம்பீரமுமாய் கார்த்தி காட்சியளிக்கிறார். இது கார்த்தி தானா? என்று வியக்கும் அளவுக்கு அவரது தோற்றம் முற்றிலும் மாறுபட்டு உள்ளது. பின்னணியில் போர் காட்சிகள் இருப்பதை பார்க்கும்போது இப்படத்தில் கண்டிப்பாக பிரம்மாண்டம் இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் திரையுலகினர் மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளதோடு, படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் அதிகப்படுத்தியுள்ளது.
‘காஷ்மோரா’ தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஹாரர், காமெடி, ஆக்ஷன், பீரியட் என்று பல்வேறு களத்தில் பயணிக்கும் ஒரு கதையாக இருக்கும்.
இப்படத்தில் கார்த்தி மூன்று வெவ்வேறு விதமான வேடங்களில் நடித்துள்ளார். அந்த மூன்று தோற்றங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்படும். இதற்காக ஏழு மாதம் எடுத்துகொண்டு 47 தோற்றங்களை தேர்வு செய்து வைத்து அதில் இருந்து இந்த 3 வேடங்களை இயக்குநர் இறுதி செய்துள்ளார்.
படத்தில் இடம் பெறும் பீரியட் காட்சிகளை படமாக்க பல்வேறு இடங்களில் மிக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. படத்தின் முக்கியமான காட்சியில் இடம்பெறும் தர்பாருக்காக சென்னையில் உள்ள வானகரத்தில் மிக பிரம்மாண்டமான அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு அங்கு கார்த்தி மற்றும் துணை நடிகர்கள் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. இப்படத்தில் இடம் பெறும் ஒவ்வொரு அரங்குகளும் இயக்குநர் , கலை இயக்குநர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் மேஸ்தரிகளால் மிக நுணுக்கமாக உருவாக்கப்பட்டது.
இப்படம் மற்ற பீரியட் படங்களைப்போல் அல்லாமல்.நகைச்சுவை , ஹாரர் , ஆக்ஷன் கலந்த ஒரு கலவையாக இருப்பது இதன் தனி சிறப்பாகும். படத்துக்கு தரத்தில் ஆழமான ஒளிப்பதிவை தந்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ். பல்வேறு களங்களில் பயணிக்கும் இந்த கதைக்கு உயிரோட்டம் தந்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.