நட்பதிகாரம்-79 விமர்சனம்
உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களில் (அத்தியாயங்களில்) 79-வது அதிகாரம் நட்பு பற்றியது. இந்த 79-வது அதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்களிலும் நட்பின் சிறப்பை, அதன் பெருமையை, வலிமையை அழுத்தமாகச் சொல்லியிருப்பார் திருவள்ளுவர். அதனால்தான் நட்பின் உன்னதத்தைச் சொல்லும் இந்த திரைப்படத்துக்கு ‘நட்பதிகாரம்-79’ என மிகப் பொருத்தமாக பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர் ரவிச்சந்திரன்.
கடல்சார் பொறியியல் படிப்பை படித்து முடித்துவிட்டு, வேலைக்காக காத்திருக்கும் இளைஞர் ராஜ்பரத். இவருக்கும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் தொழில் செய்யும் தேஜஸ்விக்கும் காதல் ஏற்படுகிறது. மறுபுறம், பணக்கார இளைஞரான அம்ஜத்கானும், நடுத்தர குடும்பத்துப் பெண்ணான ரேஷ்மி மேனனும் காதலர்களாக இருக்கிறார்கள்.
இந்த இரண்டு காதல் ஜோடிகளும் தற்செயலாக ஒரு கிளப்பில் சந்தித்துக்கொள்கிறார்கள். பேசி பழகுகிறார்கள். நாளடைவில் இணைபிரியா நண்பர்கள் ஆகிறார்கள். காதலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதே அளவுக்கு நட்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களது வாழ்க்கையில் சந்தர்ப்ப சூழ்நிலை சதி செய்கிறது.
ரேஷ்மி மேனன் தன்னைவிட்டு பிரிந்துவிடுவாரோ என்ற பயத்தில் அவரை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தும் அம்ஜத்கான், பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறி, பதிவு அலுவலகத்துக்கு வரச் சொல்கிறார். ரேஷ்மிமேனனும் கடிதம் எழுதி வீட்டில் வைத்துவிட்டு வெளியேறுகிறார். இதற்கிடையில் சூழ்நிலை காரணமாக இரவோடு இரவாக லண்டன் செல்லும் அம்ஜத்கான், அது குறித்து ரேஷ்மிக்கு தகவல் தர இயலவில்லை. அவருக்காக ரேஷ்மி பதிவு அலுவலகத்தில் காத்திருந்து ஏமாந்துபோகிறார். தனது மகள் ஓடிவிட்ட செய்தி அறிந்து அவரது தந்தை எம்.எஸ்.பாஸ்கர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
ரேஷ்மியின் நிலையை அறிந்து அவருக்கு உதவி செய்வதற்காக, தனது குடும்ப நபர்களை அவருக்கு துணையாக இருக்கச் சொல்லிவிட்டு வேலை விஷயமாக ராஜ்பரத் மும்பைக்கு சென்றுவிட, அவரது குடும்ப நபர்கள் ரேஷ்மி மேனனை தான் ராஜ்பரத் காதலிப்பதாக தவறாக புரிந்துகொள்கிறார்கள். மறுபுறம் எம்.எஸ்.பாஸ்கரும், தனது மகள் காதலிப்பது ராஜ்பரத்தை தான் என்று நினைக்க, இரு வீட்டாரும் பழத்தட்டுக்களை மாற்றி திருமணம் நிச்சயம் செய்துவிடுகிறார்கள்.
தாங்கள் காதலர்கள் அல்ல என்ற உண்மையை சொன்னால், எம்.எஸ்.பாஸ்கர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால், ராஜ்பரத், ரேஷ்மி மேனன் ஆகிய இருவரும் வாய் திறக்க முடியாமல் தவிக்க, இவர்களது உண்மையான காதலர்களோ இவர்களது நிலையை புரிந்துக்கொள்ளாமல், காதலை முறித்துக்கொள்கிறார்கள். காதலையும், நட்பையும் இழந்த இவர்கள், தங்களது நிலையை புரிய வைத்து, மீண்டும் தங்களது ஜோடியுடன் இணைந்தார்களா? எம்.எஸ்.பாஸ்கர் கதி என்ன ஆனது? என்பது படத்தின் மீதிக்கதை.
மறைந்த இயக்குனர் மல்லியம் ராஜகோபாலின் புதல்வர் ராஜ்பரத் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாக கம்பீரமாக இருக்கும் இவர், நட்புக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ராஜ்பரத்துக்கு ஜோடியாக வரும் தேஜஸ்விக்கு ‘அல்ட்ரா மாடர்ன் பெண்’ வேடம். ‘அல்ட்ரா மாடர்ன் பெண் என்றால் அவர் படுசெக்ஸியாக இருக்க வேண்டும்; தம் அடிக்க வேண்டும்; சரக்கு அடிக்க வேண்டும்’ என்ற தமிழ் மசாலா சினிமா வரையறுத்துள்ள இலக்கணத்துக்கு உட்பட்டு நடித்திருக்கிறார்.
இன்னொரு நாயகனாக வரும் அம்ஜத்கான், குடும்பப் பாங்கான பெண்ணாக வரும் ரேஷ்மி மேனன், அவருக்கு அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட அனைவரும் தத்தமது பாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தீபக் நீலாம்பூரின் இசையில் அனைத்துப் பாடல்களும் இனிமையாக உள்ளன. ராஜு சுந்தரம் இடம்பெறும் குத்து பாடல் தாளம் போட வைக்கிறது. அந்த பாடலை படமாக்கிய விதமும் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளரின் பணியும் சிறப்பு.
முக்கியமான நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே சுற்றி நகரும் கதை என்பதால், காட்சிகள் அனைத்தும் ஆமை வேகத்தில் நகர்கிறது. இருப்பினும், பிரிந்தவர்கள் சேருவார்களா? என்ற எதிர்ப்பார்ப்பு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது.
‘கன்ணெதிரே தோன்றினாள்’ வெற்றிப்படத்தைப் போல இன்னொரு படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கதையை பண்ண ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர் ரவிச்சந்திரன். ஆனால் ‘கன்ணெதிரே தோன்றினாள்’ படத்தில் இறுக்கமான முடிச்சாக வரும் கரண் போல் இதில் எம்.எஸ்.பாஸ்கர், அதில் முடிச்சை அவிழ்ப்பவராக வரும் சின்னிஜெயந்த் போல் இதில் நகைச்சுவை நடிகர் கார்த்திக், இதிலும் மருத்துவமனையில் க்ளைமாக்ஸ் என்று இக்கதை மெல்ல மெல்ல ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படக்கதையாக உருமாறிவிடுவது ஒரு குறை. மேலும், லாஜிக் மீறல் என்று பார்த்தால் பெரிய பட்டியலே போடலாம். இருப்பினும், ஒரே ஒரு டிவிஸ்டை மட்டும் வைத்து ஒரு அமைதியான காதல் படத்தை ரசிக்கும்படியாகவே கொடுத்திருக்கும் இயக்குநர் ரவிச்சந்திரன் நட்பையும், காதலையும் மையமாக வைத்து வரும் படங்கள் எந்த காலகட்டத்திலும் வெற்றி பெறும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
‘நட்பதிகாரம் 79’ – காதலர்கள், நண்பர்கள் மட்டுமல்ல… அவர்களது குடும்பத்தினரும் கண்டு களிக்கலாம்!