விஷால் மனிதநேயம்: தஞ்சை விவசாயியின் டிராக்டர் கடனை அடைக்கிறார்!

தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (வயது 50). விவசாயி. இவர் கடந்த 2011-ல் தஞ்சை நகரிலுள்ள மகேந்திரா நிதி நிறுவனம் என்னும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.80 லட்சம் கடன் பெற்று, டிராக்டர் வாங்கினார். இந்தக் கடனுக்காக தலா ரூ.64 ஆயிரம் வீதம் 6 தவணைகளை, அதாவது சுமார் ரூ.3.84 லட்சத்தை திருப்பி செலுத்திவிட்டார்.

கடைசி 2 தவணைகள் மட்டும் பாக்கி இருந்தது. நெல் அறுவடை முடிந்த பின்னர் பாக்கி தவணைத் தொகையைச் செலுத்திவிடுவதாக பாலன் தெரிவித்திருக்கிறார். ஆனால், மகேந்திரா நிதி நிறுவன ஊழியர்கள் “ரூ.32 ஆயிரத்தை முதலில் செலுத்துங்கள்” என்று கெடுபிடி செய்து, அந்த தொகையைப் பெற்றுள்ளனர். சில நாட்கள் கழித்து அவரது டிராக்டரை ஜப்தி செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4ஆம் தேதி அறுவடையில் பாலன் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் குமாரசாமி மற்றும் மகேந்திரா நிதி நிறுவன ஊழியர்கள், டிராக்டரில் இருந்து பாலனை கீழே தள்ளி, சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றதுடன், டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவும், அவரை விடுவிக்கவும் அவரது உறவினர்களிடம் போலீஸார் பணம் பெற்றுக்கொண்டு, அவரை விடுவித்துள்ளனர்.

விவசாயி பாலனை டிராக்டரில் இருந்து இறக்கி போலீஸார் தாக்கிய வீடியோ பதிவு சமூகவலைத்தளத்தில் வெளியாகி பரபரப்புடன் பகிரப்பட்டு வருகிறது. போலீஸார் மற்றும் மகேந்திரா நிதி நிறுவனத்தின்  அட்டூழியத்தைக் கண்டித்தும், வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிய பொருளாதார பயங்கரவாதி விஜய் மல்லையா, அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியும் பலர் கொதிப்புடன் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், விவசாயி பாலனின் கடன் பாக்கியை அடைக்க தயாராக இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷால் தெரிவித்து இருக்கிறார். விஷாலின் இந்த கருத்துக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலன்…! உங்களை எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் உங்களுக்கு உறுதுணை புரிய விரும்புகிறேன். எனக்கு உங்களுடைய கடன் தவணைத் தொகை எவ்வளவு என்று தெரியாது. ஆனால், என்னுடைய உறுதுணையை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

விவசாயி பாலனுக்கு உதவிக்கரம் நீட்டியது குறித்து விஷாலிடம் கேட்டபோது, “சம்பந்தப்பட்ட நபர்களை அனுப்பி உடனடியாக அவருடைய தவணைத் தொகையை முழுவதும் அடைக்கச் சொல்லியிருக்கிறேன்.

“அந்த வீடியோவைப் பார்த்தவுடனே எனக்கு அவருடைய கடனை அடைக்க வேண்டும் என்று தோன்றியது. கண்டிப்பாக அவருக்கு ஏதோ ஒரு சூழலால் தான் அப்பணத்தை அடைக்க முடியாமல் போயிருக்கும்.

“தமிழ்நாட்டின் வேர் விவசாயிகள் தான். நமக்கு அம்மா, அப்பா சோறு போடுகிறார்கள், அந்த சோறு விவசாயியிடம் இருந்து தான் வருகிறது.

“விவசாயிகளை கண்டிப்பாக காப்பாற்றுவேன். எனக்கு பாலன் என்றால் யாரென்றே தெரியாது, அவரிடம் பேசிவிட்டேன். அந்த வீடியோவைப் பார்த்தவுடன் எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அனைவருமே கடன் வாங்குகிறோம். விவசாயிக்கு இந்த மாதிரியான சூழல் வரவே கூடாது. இன்று இரவுக்குள் அவருடைய கடன் அடைக்கப்பட்டு நிம்மதியாக இருப்பார்” என்று தெரிவித்தார் விஷால்.

Read previous post:
0a1h
நட்பதிகாரம்-79 விமர்சனம்

உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களில் (அத்தியாயங்களில்) 79-வது அதிகாரம் நட்பு பற்றியது. இந்த 79-வது அதிகாரத்தில் உள்ள 10 திருக்குறள்களிலும் நட்பின்

Close