அபியும் அனுவும் – விமர்சனம்

கடந்த நூற்றாண்டில் தமிழில் வெளியாகி படுகேவலமாகத் தோல்வி அடைந்த படம் ‘ஆனந்த கும்மி’ அதில் நாயகனும் நாயகியும் தாங்கள் அண்ணன் – தங்கை என்பது தெரியாமலேயே காதலிப்பதாக கதை போகும். அந்த கதையை நிறைய மாற்றங்கள் செய்து, காதலோடு நிறுத்தாமல் கல்யாணம், கர்ப்பம் என்றெல்லாம் வளர்த்து, கடைசியில் ஒரு ஏமாற்றுத்தனமான ட்விஸ்ட் வைத்து, ‘அபியும் அனுவும்’ என்ற திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள்.

சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறார் நாயகன் டோவினோ தாமஸ் (அபி). ஊட்டியில் சமூக சேவை செய்கிறார் நாயகி பியா (அனு). இந்த இருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்படுகிறது. பின்னர் அது காதலாக மாறுகிறது. திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணம் செய்துகொண்ட பின் இது குறித்து தத்தமது பெற்றோருக்கு சம்பிரதாயமாக தகவல் தெரிவித்துவிட்டு, சென்னையில் சேர்ந்து வாழ்கிறார்கள்.

பியா கர்ப்பம் தரிக்கிறார். அவரை பார்த்துக்கொள்வதற்காக டோவினோ தாமஸின் பெற்றோர் தங்களது வேலைக்கார பெண்மணியான கலைராணியை அனுப்பி வைக்கிறார்கள். அதே நேரத்தில் பியாவின் அம்மாவான ரோகிணியும் சென்னையில் உள்ள டோவினோ தாமஸின் வீட்டுக்கு வருகிறார்.

ரோகிணியை பார்த்ததும் கலைராணி அதிர்ச்சி அடைகிறார். காரணம், பியாவின் அம்மாவான ரோகிணி தான் டோவினோ தாமஸை கருப்பையில் பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த வாடகைத் தாய்!. அந்த வகையில், தற்போது கணவன் – மனைவியாக இருக்கும் டோவினோ தாமஸூம், பியாவும் சகோதரன் – சகோதரி!!

இந்த விவரத்தை கலைராணி போன் செய்து டோவினோ தாமஸின் பெற்றோருக்குத் தெரிவிக்கிறார். அவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள். உடனே டோவினோ தாமஸின் அம்மா தன் மகனை போனில் அழைத்து, ‘உங்கள் கல்யாணம் செல்லாது. பியாவை விவாகரத்து செய். வயிற்றில் வளரும் கருவை கலைத்து விடு’ என்று கூறுகிறார்.

என்ன செய்வது என்று தெரியாமல்  தவிக்கிறார் டோவினோ தாமஸ். அவர் பியாவை விட்டுப் பிரிந்தாரா? அல்லது சேர்ந்து வாழ்ந்தாரா? என்பது மீதிக்கதை.

இந்த எழவெடுத்த படத்தை நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு என்றெல்லாம் பிரித்துப் பிரித்து விமர்சிக்க ஒன்றும் இல்லை. இப்படத்தை இயக்கிய விஜயலட்சுமி பிரபல இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகளாம்! பி.ஆர்.பந்துலுவுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்!!

‘அபியும் அனுவும்’ – வேஸ்ட்!

Read previous post:
0a1c
எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக கோரி எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிப்புப் போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இப்படுபாதகச் செயலைக் கண்டித்து இன்று (26.05.2018)

Close