காலக்கூத்து – விமர்சனம்

சாதி கடந்து திருமணம் செய்துகொள்ளும் காதலர்கள், பெற்றோர்களாலேயே சாதி ஆணவக் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் – குறிப்பாக தென் மாவட்டங்களில் – நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சனையை மையமாக வைத்து, அதில் நட்பைக் கலந்து ‘காலக்கூத்து’ படமாக கொடுத்திருக்கிறார்கள்.

வேலை வெட்டிக்குப் போகாமல் ஊர் சுற்றித் திரியும் பிரசன்னாவும், கலையரசனும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். இவர்களில் கலையரசனை கல்லூரி மாணவி தன்ஷிகாவும், பிரசன்னாவை அதே பகுதியில் வசிக்கும் சிருஷ்டி டாங்கேயும் காதலிக்கிறார்கள்

ஒருநாள். கலையரசனின் தங்கையிடம் ஏரியா பெண் கவுன்சிலரின் தம்பி தவறாக நடந்துகொள்ள முயலுகிறான்.. இதைப் பார்த்து ஆவேசப்படும் பிரசன்னா, கவுன்சிலரின் தம்பியை அடித்துத் துவைக்கிறார். இதனால் பிரசன்னாவை தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறான் கவுன்சிலரின் தம்பி. அதேநேரம், திடீரென பிரசன்னாவை கைகழுவும் காதலி சிருஷ்டி டாங்கே, அப்பா சொல்லும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டப்போவதாக சொல்லிவிட்டு போய்விடுகிறார்.

மறுபுறம், கலையரசன் – தன்ஷிகா காதலை எதிர்க்கும் தன்ஷிகாவின் பெற்றோர், அவரை வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இது தெரிந்து காதலர்கள் இருவரும் ஓடிப்போய், பிரசன்னாவின் உதவியுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். இதனால் கலையரசனையும், தன்ஷிகாவையும் கொலை செய்ய தன்ஷிகாவின் வீட்டார் திட்டம் தீட்டுகிறார்கள்.

தன்ஷிகாவின் வீட்டாரிடம் இருந்து கலையரசன் – தன்ஷிகாவும், கவுன்சிலரின் தம்பியிடமிருந்து பிரசன்னாவும் தப்பித்தார்களா என்பது மீதிக்கதை.

ஒரு நாயகனான பிரசன்னாவின் கதாபாத்திரம் சற்று இறுக்கமானதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப பிரசன்னா அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இன்னொரு நாயகனான கலையரசனின் கதாபாத்திரம் ரொம்ப ஜாலியானதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப கலையரசன் துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு நாயகியான தன்ஷிகா துணிச்சலான மதுரைப் பெண்ணாக மாறி பட்டையை கிளப்பியிருக்கிறார். இவருக்கும் கலையரசனுக்கும் இடையிலான காதல் ரசிக்கும்படியாக இருக்கிறது. இன்னொரு நாயகியான சிருஷ்டி டாங்கே வழக்கம் போல் வந்து போகிறார். இவருடைய கதாபாத்திரம் கதையோடு ஒட்டாமல் இருப்பது இவரது துரதிர்ஷ்டமே!

மதுரையை கதைக்களமாக வைத்து, சமகால முக்கியப் பிரச்சனையை கையில் எடுத்ததற்காக அறிமுக இயக்குனர் எம்.நாகராஜனை பாராட்டலாம். ஆனால், அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்கிறோமோ, அதுவே நடப்பது திரைக்கதையின் மிகப் பெரிய பலவீனம். சில திருப்பங்களுக்கு இடம் கொடுத்திருந்தால் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையும், பி.வி.சங்கரின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.

‘காலக்கூத்து’ – சோர்வு!