மிரள் – விமர்சனம்

நடிப்பு: பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார், ராஜ்குமார் மற்றும் பலர்

இயக்கம்: எம்.சக்திவேல்

இசை: பிரசாத்

ஒளிப்பதிவு:  சுரேஷ் பாலா

தயாரிப்பு: ’ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ டில்லி பாபு

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா

’மிரள்’ என்ற தலைப்பே இது எந்த வகையான உணர்வைக் கிளறும் படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. மேலும், விஷ்ணு விஷால் – அமலா பால் நடிப்பில், ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றிப்படமான ‘ராட்சசன்’ என்ற படுபயங்கர திகில் படத்தை தயாரித்த ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ டில்லி பாபு தான் இந்த ’மிரள்’ படத்தையும் தயாரித்திருக்கிறார் என்னும்போது இது எத்தனை மிரட்டலான அம்சங்களைக் கொண்ட படமாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ…!

சென்னையில் வசிக்கும் நாயகன் ஹரியும் (பரத்தும்), நாயகி ரமாவும் (வாணி போஜனும்) காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள். இவர்களுக்கு ஒரு மகன் (அங்கித்) இருக்கிறான்.

ஒருநாள். தன்னையும், தனது கணவர் ஹரியையும் ஒரு மர்ம ஆசாமி கொலை செய்வது போன்ற பயங்கர கனவு ரமாவுக்கு வருகிறது. மன உளைச்சலுக்கு ஆளாகிறார். மேலும், அவர்களைச் சுற்றி நிகழும் சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, குலதெய்வத்தை வழிபடுவதற்காக, ரமாவின் சொந்த ஊருக்கு மகனுடன் அவர்கள் போகிறார்கள்.

அந்த ஊரே வினோதமாகவும், அச்சமூட்டுவதாகவும் இருக்கிறது. அந்த ஊரார் எல்லோருமே கண்ணாடி பார்க்கக் கூட பயப்படுகிறார்கள்.

குலதெய்வ வழிபாடு முடிந்து, ஹரி குடும்பத்தினர் இரவோடு இரவாக சென்னைக்கு காரில் கிளம்புகிறார்கள். வழியில் ஒரு காட்டில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் மூவரையும், ரமாவின் கனவில் வந்த மர்ம ஆசாமி கொல்ல முயற்சிக்கிறார். அவர் யார்? எதற்காக ஹரி குடும்பத்தை கொல்ல நினைக்கிறார்? ரமாவின் கெட்டகனவு நனவாகிறதா? அல்லது அதிலிருந்து தப்பிக்கிறார்களா? என்பதை எல்லாம் பயங்கர திகிலோடு சொல்லுகிறது ‘மிரள்’ படத்தின் மீதிக்கதை.

0a1b

கட்டுமஸ்தான உடலுடன் நாயகன் ஹரியாக வரும் பரத்துக்கு இது சவாலான வேடம். சவாலை தன்மையாக ஏற்று, சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சமீபகாலமாக பரத்தின் நடிப்பு படத்துக்குப் படம் மெருகேறி வருகிறது. கீப் இட் அப்.

பெரும்பாலான படங்களில் ஹீரோயிச போதைக்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாயாக கதாநாயகி பாத்திரம் ஏனோதானோ என வடிவமைக்கப்படும் நிலையில், நாயகி ரமாவாக இப்படத்தில் வரும் வாணி போஜனுக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள முக்கியமான வேடம். அவர் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அருமையாக நடித்திருக்கிறார்.

ஹரி – ரமா தம்பதியரின் மகனாக வரும் சிறுவன் அங்கித் கவனம் பெறுகிறான். வழக்கமாக காமெடி கதாபாத்திரத்தில் வரும் ராஜ்குமாருக்கு இதில் மாறுபட்ட வேடம். அசத்தியிருக்கிறார். நாயகியின் தந்தையாக வரும் கே.எஸ்.ரவிக்குமார் தொடக்கத்தில் கொஞ்சம் கோபக்காரர் போலவும், பின்னர் பாசக்காரராகவும் நடித்து தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

எம்.சக்திவேல் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அவர் துடிப்புள்ள திரில்லராக இப்படத்தை  நேர்த்தியாக எழுதியிருப்பதன் மூலம், தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும், இறுதிமுடிவு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தீர்க்கமாக அறிந்திருந்தார் என்பதை உணர முடிகிறது. இப்படம் ஓர் அறிமுக இயக்குனரால் உருவாக்கப்பட்டது போல் இல்லாமல், மிகுந்த அனுபவம் மிக்க இயக்குனரால் உருவாக்கப்பட்டது போல் சிறப்பாக இருக்கிறது. இதற்காக இயக்குனருக்கு பாராட்டுகள்.

சஸ்பென்ஸ் – ஹாரர் – திரில்லர் ஜானரிலான ஒரு படத்துக்குத் தேவையான ஒளிப்பதிவை சுரேஷ் பாலாவும், இசையை பிரசாத்தும் வழங்கி இயக்குனருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள்.

ஒரு வீடு அல்லது பங்களா என நான்கு சுவர்களுக்குள் மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்ட தமிழ் சினிமாவில், வெட்டவெளியிலும் மிரட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கும் முக்கியமான படம் இது.

‘மிரள்’ – திகிலுடன் சீட்டின் நுனியில் அமர்ந்து மிரளத் தக்க தரமான படம். பார்க்கலாம், ரசிக்கலாம்!