மீன் குழம்பும் மண் பானையும் – விமர்சனம்

மகனைப் பிரசவித்துவிட்டு இறந்துபோகிறார் அண்ணாமலையின் (பிரபு) மனைவி. கைக்குழந்தையுடன் மலேசியாவுக்குப் புலம்பெயரும் அவர், அங்கே மீன் குழம்பும் மண் பானையும் என்ற பாரம்பரிய உணவகம் நடத்திப் பணக்காரர் ஆகிறார். மகனை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் அவரின் தியாகத்தை அறியாதவர் அவரது மகன் கார்த்திக் (அறிமுகம் காளிதாஸ்). கல்லூரியில் பயிலும் இவருக்கு சக மாணவி பவித்ரா (ஆஷ்னா சாவேரி) மீது காதல்.

காதலில் ஏற்படும் சிக்கலால் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே பிரச்சினை. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் அவர்களுக்கு வழிகாட்டுகிறார் வெள்ளுடை மகான் (கமல்). அவர்களுடைய ஆத்மாக்களை வைத்து இவர் தரும் தீர்வு இருவரையும் புரட்டிப்போட்டுவிடுகிறது. அது என்ன, அதன் விளைவுகள் என்ன என்பதுதான் கதை.

‘Bruce Almighty’ என்னும் ஆங்கிலப் படத்தின் அடிப்படைக் கதையை நினைவூட்டும் இந்தப் படத்தில் கொஞ்சம் தமிழ் அடையாளம், கொஞ்சம் நகைச்சுவை ஆகியவற்றைத் தொட்டுக் கொண்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் அமுதேஷ்வர்.

பவித்ராவின் அப்பாவும் அம்மாவும் பிரிந்து வாழ்வதும், மாஃபியா குழு ஒன்றில் வேலை செய்யும் மாலாவுக்கு (பூஜா குமார்) அண்ணாமலை மீது ஈர்ப்பு ஏற்படுவதும் ஆள் மாறாட்டத்துக்குப் பிறகான இரண்டாம் பாதிக் கதையைக் கலகலப்பாக நகர்த்திச் செல்லக் களம் அமைத்துக் கொடுத்துவிடுகிறது. அப்பாவும் மகனும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் இடங்கள் மிகையுணர்ச்சியின்றி நகைச்சுவையாகக் கடந்து செல்வதை ரசிக்கலாம். ஆனால் ‘ஆத்மா’ சமாச்சாரம் வந்த பிறகு அடுத்தடுத்த காட்சிகளை எளிதில் ஊகிக்க முடிவதால் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் குறைந்துவிடுகின்றன. கார்த்திக்கால் மாஃபியாக்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுவதாகக் காட்டும் காட்சி லாஜிக் பிழையை மறந்து சிரிக்க வைக்கிறது.

கெளுத்தி மீன் குழம்பு வைத்துக்கொடுத்து தமிழ்நாட்டு வாழ்க்கையைத் தனது வாடிக்கையாளர்களுக்கு நினைவுபடுத்தும் அண்ணாமலையாக பிரபுவுக்கு கச்சிதமான கதாபாத்திரம். அப்படிப்பட்டவர் ஒரு கட்டத்துக்குப் பின் அல்ட்ரா மாடர்ன் இளைஞனாக மாறி அடிக்கும் லூட்டிகள் கலகல. அதேபோல முதலில் இளைமை துள்ளலைக் காட்டும் காளிதாஸ், ஒரு கட்டத்தில் அடக்கமே உருவாக மாறி ‘அட’ என்று சொல்ல வைத்துவிடுகிறார். இவரது தோற்றம், வசன உச்சரிப்பு, உடல்மொழி ஆகியவை கவர்கின்றன.

எம்.எஸ்.பாஸ்கர், பூஜா குமார் கூட்டணி சிரிப்பு வைத்தியம் செய்கிறது. ஆஷ்னா சாவேரி தனக்குத் தரப்பட்ட கதாபாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார். நன்றாக நடனமாடியிருக்கிறார்.

கவுரவக் கதாபாத்திரத்தில் வந்துசெல்லும் கமல் களைப்பாகக் காணப்பட்டாலும் முத்திரை பதிக்கத் தவறவில்லை.

இமானின் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. பாடல்களைப் படமாக்கிய விதத்திலும் மலேசியாவைக் காட்டிய விதத்திலும் சுற்றுலா போய்வந்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறார் ஒளிப்பதிவாளர் லட்சுமண்.

அப்பா- மகன் சென்டிமென்டை மையமாகக் கொண்டு, நகைச்சுவை விருந்து வைக்க நினைத்த இயக்குநர், நட்சத்திரப் பட்டாளத்தை மட்டுமே அதிகம் நம்பியிருக்கிறார். காட்சிகளில், நகைச்சுவையில் நிலவும் வறட்சியைக் களைந்திருந்தால் விறுவிறுப்பான நகைச்சுவை விருந்தாக இருந்திருக்கும்.

Read previous post:
a9
Achamindri Movie Audio Launch Photos Gallery

Close