“இன்று குழந்தைகளுக்கு எதிராக நிறைய பாலியல் சீண்டல்கள் நடக்கின்றன”: நமீதா பேச்சு!

அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ்.பழனிவேல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள படம் ‘சாயா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை வடபழனி ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது, “இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச்  சொல்லும் படம் என்று அறிந்து மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக இருப்பது முக்கியம். எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம். நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன். எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக்கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக்கொள்கிறேன்.

ஒரு விஷயம். ஆனால் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்கிறேன். இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன. நம் அருகிலிருந்துகூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது. நல்ல டியூஷன்  மட்டும் கொடுத்தால் போதாது.  நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுதல், எது கெட்ட தொடுதல் என்று  சொல்லிக் கொடுக்க வேண்டும், அதாவது குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளிடம் நிறைய கேளுங்கள். நிறைய பேசுங்கள். இதை அம்மா அப்பா இரண்டு பேருமே செய்யுங்கள். இந்தப் படம் குழந்தைகள் பற்றி சிந்திக்க வைக்கும்படி இருக்கும் என நம்புகிறேன் .இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார்.

பாடல்களை வெளியிட்டு நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, ”எனக்கு சினிமாவில் ஒவ்வொரு விழா நடக்கும்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதில் கலந்துகொள்ள பிரபலங்களை அழைத்து வருவது பற்றிய எண்ணமும் வரும். இது மாதிரி விழாக்களுக்கு அழைக்கும்போது பிரபலங்கள் யாரும் வர முன்வருவதில்லை. சாக்குப்போக்கு சொல்லி, பொய்யான காரணம் சொல்லி தவிர்ப்பார்கள், வரமாட்டார்கள். இதை எண்ணி வேதனை அடைந்து இருக்கிறேன். இதை நான் அனுபவத்திலும் கண்டு இருக்கிறேன். விழா நடத்துபவர்கள் பலரது  தவிப்பையும் உணர்ந்து இருக்கிறேன்.

அதன் வலிகளைப் புரிந்து, பிறகு ஒரு முடிவு செய்தேன். என்னை அழைப்பவர்களின் விழாவுக்குச் சென்று அவர்களை வாழ்த்துவது என்று முடிவு செய்தேன். நான் சம்பந்தப்படாத விழாவாக இருந்தாலும் சென்று வாழ்த்தி வருகிறேன். ஊக்கப்படுத்துகிறேன் .அப்படித்தான் இங்கே வந்திருக்கிறேன். சினிமாவில் எல்லாரும் இப்படி ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி ஒற்றுமையாக இருக்க வேண்டும். இப்படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்றார்.

முன்னதாக, அனைவரையும் வரவேற்று பேசிய ‘சாயா’ பட இயக்குநர் வி.எஸ்.பழனிவேல், ‘பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால், அந்த படம் பயமுறுத்துவது போல் தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்து உருவாகியுள்ளது ’சாயா’.

இந்தப் படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில்  மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும்.

ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆதமா அவனது உடலைப் பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் ”சாயா” படம் பதிலளிக்கும்” என்றார் .

இவ்விழாவில் இயக்குநர்கள் மனோஜ் குமார், கே.எஸ்.அதியமான், இசையமைப்பாளர் ஏ.சி.ஜான் பீட்டர், படத்தின் நாயகன் சந்தோஷ் கண்ணா, நடிகை வசுந்தரா, படத்தின் நாயகி காயத்ரி, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம்  ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள். 

நிறைவாக தயாரிப்பாளர் சசிகலா பழனிவேல் நன்றி கூறினார்.

Read previous post:
s10
Saaya Movie Audio Launch Photos Gallery

Close