ஹெச் ராஜாவையும், வருமானவரித் துறையையும் வச்சு செஞ்ச விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில், மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் உருவாகி, அக்டோபர் 4ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் ‘96” படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதாக வெளியான பரபரப்புத் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

n8

இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “என் வீட்டில் நடந்தது ரெய்டு அல்ல. அது சர்வே. வருமான வரித்துறையில் சர்வே என்ற ஒரு பிரிவு இருக்கிறது. அப்படி ஒன்று இருப்பதே எனக்கு இப்போது தான் தெரியும்.

என் முகம் தற்போது நிறைய இடங்களில் தெரிகிறது, இல்லையா? அதனால் இவர் கணக்கு வைத்திருக்கிறாரா, இல்லையா? இவருக்கு கணக்கு எழுத வருகிறதா, இல்லையா? என்று தெரிந்துகொள்ள நடத்திய சர்வே தான் அது. பணத்தின் வரவு – செலவு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று செக் பண்ணினார்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக வருமான வரியை ‘அட்வான்ஸ் டாக்ஸ்’ஸாக முன்கூட்டியே கட்டி வந்திருக்கிறேன். அதற்கான ரிட்டன்ஸை என் ஆடிட்டர் தாக்கல் பண்ணவில்லை. அவர் திடீரென்று போய் தாக்கல் செய்துள்ளார். ஆகையால், அதில் ஏற்பட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்ய அவர்கள் எகிறிக் குதித்து ஓடிவந்து, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சர்வே செய்தார்கள்.

மற்றபடி, என் வீட்டில் ரெய்டு என்பது தவறான செய்தி. ஆனால், தவறான செய்தி தான் வேகமாகப் பரவி அனைவரிடமும் போய் சேரும். அது ஒரு விளம்பரம் தான்.

மேலும், தப்பாகப் பேசினால் மட்டுமே உடனே மக்களைச் சென்றடைய முடியும். காசு கொடுத்தால் கூட அப்படி ஒரு விளம்பரம் கிடைக்காது. நம்மூரில் இப்போது கண்டதைப் பேசினால் தான் பப்ளிசிட்டி என்ற ட்ரெண்ட் இருக்கிறது.

நம்மூரில் கண்டபடி கத்திப் பேசிவிட்டு, ‘அதை நான் பேசவில்லை, என் அட்மின் பேசினார்’, ‘மிமிக்ரி பண்ணிவிட்டார்கள்’ என்று சொல்லலாம். அதே பாணியில் சொல்வதாக இருந்தால், வருமான வரித்துறை சோதனை நடத்தியது என் வீடு அல்ல. என் வீடு மாதிரி செட் போட்டு, செக் பண்ணியிருக்கிறார்கள். அவ்வளவு தான்” என்று விஜய் சேதுபதி கிண்டலாகக் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, முன்னர் பெரியார் சிலை குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை ட்விட்டரில் பதிவு செய்ததும், அதற்கு எதிர்ப்புக் கிளம்பியவுடன், “நான் பதிவிடவில்லை. என் அட்மின் பதிவு செய்துவிட்டார்” என்று ஜகா வாங்கியதும், சமீபத்தில் அவர் உயர் நீதிமன்றத்தையும் காவல் துறையையும் இழிவாகப் பேசியதும், இது தொடர்பான வீடியோ வெளியானவுடன் “அது என் குரல் இல்லை. என் குரல் போல யாரோ மிமிக்ரி செய்திருக்கிறார்கள்” என்று பல்டி அடித்ததும் நினைவு கூரத்தக்கது.