“பரியேறும் பெருமாள்’ குறித்து ஊரெல்லாம் பேச்சு; சூப்பர்”: விஜய் மகிழ்ச்சி

பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் பெற்றுவரும் மகத்தான வெற்றிக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளத்தில் பலரும் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இது பற்றி அறிந்த நடிகர் விஜய், ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகன் கதிரை தொடர்புகொண்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கதிர் கூறும்போது, ”விஜய் அண்ணா பேசியது ஆச்சர்யமாக இருந்தது. ஜெகதீஷ் அண்ணாவுக்கு விஜய் அண்ணா போன் பண்ணி, ‘என்னடா நம்ம தம்பி படத்தைப் பற்றி ஊரெல்லாம் பேச்சா இருக்கு.. சூப்பர்டா. வாழ்த்துகள் சொன்னேன்னு சொல்லிடு’ என்று கூறியிருக்கார். அப்போது நானும் ஜெகதீஷ் அண்ணாவுடன் தான் இருந்தேன். உடனே ‘இங்க தான் அண்ணா இருக்கான். நீங்களே சொல்லிவிடுங்கள்’ என்று போனை என்னிடம் கொடுத்துவிட்டார்.

‘ரொம்ப சந்தோஷம்டா கதிர். உன் படத்தைப் பற்றித்தான் எல்லோரும் பேசிட்டு இருக்காங்க. சூப்பரா இருக்குன்னு சொல்றாங்க. கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்பப் பெரிய வெற்றி இது. மக்களே ஒரு படத்தை இவ்வளவு பெரியளவுக்கு பேசுறாங்க என்றால் மிகப் பெரிய வெற்றி. இந்த சந்தோஷத்தை என்ஜாய் பண்ணு. இன்னும் நான் படம் பாக்கல. சீக்கிரமே பாத்துட்டு கூப்பிடுறேன்’ என்று என்னிடம் பேசும்போது விஜய் அண்ணா கூறினார்.

தளபதி சொன்னது ஒட்டுமொத்த அவரது ரசிகர்களும் சொன்ன மாதிரி இருந்தது” என்றார் கதிர்.