விஜய் சேதுபதியின் ‘96’ படத்தில் திரிஷா கதாபாத்திரம் – சஸ்பென்ஸ்!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்க, விஜய் சேதுபதி கதாநாயகனாகவும்,   திரிஷா கதாநாயகியாகவும், காளிவெங்கட், வினோதினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் படம் ‘96’.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ முதல் ‘எய்தவன்’ வரை பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக  அறிமுகம் ஆகிறார்.

வருகிற (அக்டோபர்) 4ஆம் தேதி திரைக்கு வருவதையொட்டி இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

n2

இந்நிகழ்வில் கலந்துகொண்டு நாயகி திரிஷா பேசுகையில், “இந்த  படத்தின் டீஸர் வெளியானவுடனே எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதியிருக்கும் இயக்குனர் பிரேம் குமாருக்கு நன்றி. விஜய் சேதுபதி பிரமாதமாக நடித்திருக்கிறார். படத்தை இசை தூக்கி நிறுத்தியிருக்கிறது. இது நிச்சயம் வெற்றிப் படமாக இருக்கும்” என்றார். .

நாயகன் விஜய் சேதுபதி பேசுகையில், “இந்த படத்திற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. எனினும், எதிர்பார்ப்பு பூர்த்தியாகி அது சந்தோஷமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்த டென்ஷனும் இல்லாமல் ரொம்ப நிம்மதியாக ரசித்து நடித்த படம் இது .  திரிஷாவுடன் இணைந்து நடித்தது ரொம்ப சந்தோஷம்” என்றார்.

இயக்குனர் பிரேம் குமார் பேசுகையில், “1996ஆம் ஆண்டு பிளஸ் – 2 முடித்த சில நண்பர்களின் வாழ்க்கையில் தற்போது நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. விஜய் சேதுபதி இதில் ட்ராவல் போட்டோகிராபராக – பயண புகைப்படக்காரராக வருகிறார். திரிஷா எந்த கதாபாத்திரத்தில் வருகிறார் என்பது சஸ்பென்ஸ். படம் பார்க்கிற அனைவருக்கும் இது பிடித்த படமாக, தங்களை தொடர்புபடுத்திக்கொள்ளக் கூடிய கதையாக இது இருக்கும்” என்றார்.