அழகன்குளம் 7 கட்ட அகழாய்வு: அனைத்து அறிக்கைகளையும்  தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அழகன்குளம் அகழாய்வு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மோர்பண்ணையைச் சேர்ந்த தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமம் வைகை ஆறும், வங்காள விரிகுடா கடலும் சங்கமிக்கும் இடமாகும். சங்க காலத்தில் அழகன்குளம் கிராமத்தில் கடல் வழி வணிகம் நடைபெற்றுள்ளது. இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் பல பழமையான பொருட்கள் கிடைத்தன.

இங்கு தமிழ் கிராமிய எழுத்துகள், மணிகள், சோழ நாணயங்கள், ரோம் நாட்டுடனான வணிகம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அழகன்குளத்தில் இதுவரை 1980-ல் தொடங்கி 2017 வரை 7 முறை அகழாய்வு நடைபெற்றுள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன்டேட்டிங் (வயதை கண்டறியும் சோதனை) ஆய்வுக்கு உட்படுத்தியபோது அந்தப் பொருட்கள் கிமு 345, கிமு 268, கிமு 232 ஆண்டை சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.

எனவே, அழகன்குளத்தில் 7 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும், அகழாய்வு குறித்த இறுதி அறிக்கையை வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “அகழாய்வு தொடங்கி 30 ஆண்டுகளாகியும் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்?” என்றனர்.

தமிழக தொல்லியல் துறை சார்பில், அழகன்குளம் அகழாய்வின் முதல் கட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது: இறுதி அறிக்கை தயாராகி வருகிறது எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், அழகன்குளம் அகழாய்வு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மனு தொடர்பாக தமிழக தொல்லியல் துறை செயலாளர், தமிழக தொல்லியல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.