வாய்க்கொழுப்பால் வன்முறையை தூண்ட முயன்ற ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது

திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், வாய்க்கொழுப்பால் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது

”உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள்” என்று அப்போது அவர் பேசியிருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பும், ஆட்சேபமும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியை சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து கைதுக்கு பயந்து தலைமறைவான கனல் கண்ணன்,  முன்ஜாமீன் கேட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இந்நிலையில், பெரியார் சிலை குறித்து வன்முறையைத் தூண்டும் வகையில் அவதூறு கருத்து தெரிவித்த புகாரில், புதுச்சேரியில் ஒளிந்திருந்த கனல் கண்ணனை  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இம்மாதம் 26ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.