மத்திய அரசின் மனுவை ஏற்று ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது என்று கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் அவசர சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்ட வரைவை உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும். குடியரசு தலைவர் திருப்தி அடைந்தால் இதற்கு ஒப்புதல் அளிப்பார். அதன்பிறகு தான் தமிழக ஆளுநர் இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்க இயலும்.

இந்நிலையில், அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்முன், ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் ஏதாவது ஏடாகூடமாக தீர்ப்பளித்துவிட்டால், அது தமிழக அரசின் அவசர சட்ட நடைமுறைக்கு குந்தகம் ஏற்படுத்திவிடும் என்பதால், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரத்தோகி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், மத்திய – மாநில அரசுகள் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதால், அடுத்த ஒரு வார காலத்துக்கு ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பளிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஒரு வார காலத்துக்கு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.